Primary tabs
-
4.5 இலக்கிய வளர்ச்சி
ஆங்கிலேயரின் திறமையான ஆட்சியின் கீழ் நாட்டில் அமைதி நிலவிற்று. கலகங்கள் ஓய்ந்தன. இடையூறுகள் இன்றிக் குடி மக்கள் தத்தம் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.
தமிழ்ப் புலவர்கள் பலர் தோன்றித் தமிழை வளர்த்தார்கள். எழுதுவதற்குக் காகிதமும், நூல்கள் வெளியிட அச்சுப் பொறியும் கிடைத்த பிறகு தமிழ் நூலாசிரியரின் பணியிலும் முன்னேற்றம் காணப்பட்டது.
ஆங்கில மொழிப் பயிற்சி ஏற்பட்ட பின்பு தமிழ் இலக்கியப் படைப்புகளில் பல புதுமைகள் நுழைந்தன. உரைநடை புதிய வடிவில் உருவாயிற்று. இராமலிங்க அடிகளார், ஆறுமுக நாவலர், தியாகராசச் செட்டியார் முதலியோர் உரைநடையைத் தொடக்கிவைத்தனர். பழங்கால உரையானது நீண்ட சொற்றொடர்களால் ஆக்கப்பட்டிருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு உரைகள் சிறுசிறு சொற்றொடர்களினால் அமையலாயின. ஒரு தொடருக்கும் அடுத்ததற்கும் இடையே இடைவெளி விடுவதும், முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, மேற்கோள் புள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதும் பழக்கத்துக்கு வந்தன. உரை பல பத்திகளாகவும் (Paragraphs) எழுதப்பட்டன.
வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரமும், இராசம் ஐயரின் கமலம்பாள் சரித்திரமும் பிற்காலத்தில் எழவிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் நாவல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தன.
இவையன்றி மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம், சரவணம் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகிய நாவல்களும், வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய மதிவாணன் என்னும் நாடக நூலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் படைப்புகளாகும்.
மேலும் இக்காலத்தில் மகாபாரதம், இராமாயணம், பாகவதம், விக்கிரமாதித்தன் கதை, பன்னிரண்டு மந்திரி கதை, அரபிக் கதைகள் ஆகியவை மக்கள் பேசும் எளிய நடையில் எழுதப்பட்டன.
செய்யுள் நடையில் தலபுராணங்கள் பல வெளியாயின. திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மாபெரும் புலவராகப் பெரும்புலவர்கள் போற்ற வாழ்ந்தவர். அவர் பல தலபுராணங்கள் இயற்றியுள்ளார். தேவராசப்பிள்ளை குசேலோபாக்கியானம் என்னும் நூலையும், ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப் பிள்ளை என்னும் கிறித்தவப் புலவர் இரட்சணிய யாத்திரிகம் என்னும் சமயக் காவியம் ஒன்றையும் பாடினர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் பல சமரசக் கீர்த்தனைகளையும், நீதிநெறிப் பாடல்களையும் பல்வேறு இசையமைப்புகளில் பாடியுள்ளார்.
பல தமிழ் இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றியது போல் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. கால்டுவெல் (Robert Caldwell) என்ற கிறித்தவப் பாதிரியார். அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சமயப்பணி செய்ய வந்தவர். திராவிட மொழிகள் அவருடைய கருத்தைக் கவர்ந்தன. அம்மொழிகளை நன்கு ஒப்பிட்டு ஆராய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். ஜி.யூ.போப் என்பவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தாம் இறந்தபிறகு, தமது கல்லறையில் தமிழ் மாணவன் என்று தம்மைக் குறிப்பிடுமாறு இவர் கேட்டுக் கொண்டார்.
வின்ஸ்லோ என்பவர் தமிழ் ஆங்கில அகராதி இயற்றியுள்ளார். யாழ்ப் பாணத்துக் கதிரைவேல் பிள்ளை தமிழ்-தமிழ் அகராதி ஒன்று இயற்றினார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த சில புலவர்கள் அரிய நூல்கள் இயற்றியுள்ளனர். விசுவநாத சாஸ்திரியார் வண்ணக் குறவஞ்சி, நகுல மலைக் குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கிய நூல்களை எழுதியுள்ளார். சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கவுரை ஆகிய இலக்கண நூல்களையும், கலித்தொகை, தணிகைப் புராணம், சூளாமணி ஆகிய இலக்கிய நூல்களையும் பதிப்பித்தார்.
இவ்வாறாக 19ஆம் நூற்றாண்டில் இலக்கியம் நன்கு வளர்ச்சி பெறலாயிற்று.