Primary tabs
2.1 இலக்கியம், இலக்கணம்
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்களாகக் கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம், திருவுந்தியார் போன்றவற்றையும் இலக்கணம் என்ற நிலையில் தண்டியலங்காரம் என்பதையும் கூறலாம்.
2.1.1 இலக்கியம் - கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி (கி.பி. 1112) இக்காலப் பகுதியில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்களில் ஒன்றாகும். இதனை இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர். முதல் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070 - 1120) போற்றப் பெற்றவர். இவர் செய்த நூலுள் சிவ வழிபாட்டையே கூறுகின்றார்.
- அமைப்பு
இது கடவுள் வாழ்த்துத் தொடங்கி 13 பகுதிகளை உடையது. பரணி ஒரு போர்க்காவியம். இதில் போரின் வருணனை, பாலை நில வருணனை, பேய்கள், அவற்றின் செயல்கள் பற்றிய வருணனை போன்றவை காணப்படுகின்றன.
- பல்வேறு சுவைகள்
போரில் வீரர் மாய்வதின் மூலமாக, வீரத்தையும் அச்சத்தையும் பெருமிதத்தையும் உருத்திரச் சுவையையும் காட்டலாம். ஆனால் அதே காட்சியை, மாய்ந்த வீரருடைய பெண்டிர் கண்டு அரற்றும் போது அது சோக நிலையின் உச்சத்தை எட்டுகிறது. இதையும் நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவை தவிர நகைச்சுவை, பக்திச்சுவை, அச்சச்சுவை, வீரச்சுவை, அவலச்சுவை போன்ற பல சுவைகளைக் காணலாம்.
- சமணர் இயல்புகள்
சமணர் உயிர்க்கொலை செய்யாதவர்கள், இரவு உண்ணாதவர்கள், துகிலால் வடித்துக் குடிப்பவர்கள், இந்த இயல்புகளை ஆசிரியர் சமணப் பேய்க்கு ஏற்றிக் காட்டுகிறார். இப்பாடல் நகைச்சுவையை முன் வைப்பதுடன் ஆசிரியர் சமணர் அல்லர் என்பதையும் நிரூபிக்கின்றது.
- பிற பரணிகள்
பரணியில் போர்க்களத்தைக் காளிதேவி பேய்களுக்குக் காட்டுவதாகப் பாடுவதே மரபு. ஆனால் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி இம்மரபிலிருந்து மாறுபட்டு, சிவபெருமான் உமாதேவிக்குக் காட்டியதாகப் பாடப்பட்டது. மேலும் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி, சூரன்வதைப் பரணி என்னும் பரணி நூல்களும் தோன்றின.
கலிங்கத்துப் பரணிக்கு முன்பே கொப்பத்துப் பரணி, கூடல சங்கமத்துப் பரணி என்ற இரு பரணிகள் இருந்தாலும் அவை தற்போது கிடைக்கவில்லை.
2.1.2 பெரியபுராணம்
இக்காலத்திய மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கியம் பெரியபுராணம் ஆகும். இது, சேக்கிழாரால் இயற்றப்பட்டது. நம்பியாண்டார் நம்பி தேவாரப் பதிகங்களைத் தொகுத்தமை பற்றி 11ஆம் நூற்றாண்டுப் பாடப்பகுதியில் விளக்கப்பட்டது. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இயற்றப்பட்டது.
தில்லையம்பலத்தில் இறைவன் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று நடராசப் பெருமான் துதியாகத் தொடங்கி இந்த நூலைப் பாடினார். அதனுடைய பக்திச் சுவை காரணமாக, தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு இணையாக மதித்து, 12 திருமுறைகளுள் ஒன்றாக, பன்னிரண்டாம் திருமுறையாக இதனைப் போற்றுவர்.
- காட்சிகள்
இந்நூல், சுந்தரர் கயிலையிலிருந்து இவ்வுலகத்துக்கு வந்து சேரும் காட்சியுடன் தொடங்குகிறது. பெரியபுராணக் கதையின் காட்சிகளை, கருங்கல்லில் சிற்பங்களாக இன்றும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் (தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை அருகே) காண முடிகின்றது. மிகச் சிறிய சிற்பங்களாக அழகிய வேலைப்பாடுகளுடன் அவை காணப்படுகின்றன.
- சிவனடியார்களின் தொண்டு நெறி
பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் தொண்டு நெறியில் நின்றனர். இறைவனிடம் தாம் கொண்டிருந்த ஆழமான பற்றை வெளிப்படுத்தினர். தொண்டிலும் ஒரு குறிக்கோள். குறிக்கோளுக்குச் சோதனை, தடை வரும் போது உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயங்காதவர்கள். இவர்கள் பல்வேறு இடங்களையும் குலங்களையும் சேர்ந்தவர்கள்.
- செய்திகள்
வரலாற்றியல், நாட்டியல்பு, சமயவியல், சமயத்தத்துவம், பக்திச் சுவை, இறையுணர்வு, அருள் போன்ற அனைத்து வகையான செய்திகளும் இக்காப்பியத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன.
தொடாத துறையே இல்லை என்று கூறும் அளவிற்குச் சேக்கிழார் அனைத்துத் துறைகளையும் பெரியபுராணத்தில் கையாண்டுள்ளார்.
2.1.3 திருவுந்தியார்
இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சைவ இலக்கியம் திருவுந்தியார் ஆகும். சாத்திர நூல்கள் 14 ஆகும். அவற்றைக் கீழ்வரும் பாடல் பட்டியல் இடுகிறது :
உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந் திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மை நெறி சங்கற்பம் உற்றுஇப்பாடலில் திருவுந்தியார் முதலாவதாக வைத்துக் கூறப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் பதினான்கு சாத்திர நூல்கள் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியனவாகும். (வாழ்வியல் நெறிமுறைகளைக் கூறும் நூல்கள் சாத்திரங்கள் என்றும், இறைவன் புகழைப் போற்றுபவை தோத்திரங்கள் என்றும் அழைக்கப் பெறும்.) பன்னிரு திருமுறைகளின் கருத்தை, திருவுந்தியார் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.
சிவபெருமானின் இயல்பைக் கூறும் பாடல் இதோ:
சொல்லும் பொருளும் சொல்லா தனவும், அங்கு
அல்லனாய் ஆனான் என்று - உந்தீபற
அம்பிகை பாகன் என்று உந்தீபற
(திருவுந்தியார், 21)(நமது அறிவுக்கு எட்டிய பொருள்களைச் சொற்களால் அளவுபடுத்திக் கூறுகிறோம். அவ்வாறு கூறும் பொருள்கள் அனைத்தும் நம்மால் சுட்டி அறியப்படுபவை. நமது கற்பனைக்கும் எட்டாத முயலின் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று நமது சொற்களில் அடங்காத பொருள்கள் இப்பொருள்கள் ஆகும். இவ்விரு வகைப் பொருள்களையும் போல் அல்லாமல், நமது மனத்துக்கும், சொல்லுக்கும் எட்டாத நிலையில் இறைவன் நிற்கிறான். என்றாலும் நாம் அவனை உணரும் பொருட்டு ‘அருள்’ ஆகிய அம்மையோடு கூடிய அம்மையப்பராய் இருக்கிறான்).
‘உந்தீபற’ என்பது இறைவனது புகழைப் போற்றிப் பரவும் முறையில் மகளிர் இருவர் கூடி விளையாடும் விளையாட்டு வகைகளில் ஒன்றாகும். (உந்தி - குதித்து, பற - வேகமாக மேலே எழுதல்) ‘உந்தீபற’ என்னும் இச்சொல் பாடல் ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம் இந்நூலில் உள்ள 45 பாடல்களில் மொத்தம் 90 இடங்களில் வருவதைக் காணலாம்.
2.1.4 தண்டியலங்காரம்
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலக்கண நூல்களும், உரை நூல்களும் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கண நூல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. தண்டியாசிரியர் இன்றும் தமிழ் மக்கள் போற்றி வருகின்ற தண்டியலங்காரம் என்ற நூலைச் செய்துள்ளார்.
- அணியிலக்கணம்
‘அலங்காரம்’ என்பது வடமொழிச் சொல். தமிழில் ‘அழகு’ என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. பாட்டில் காணப்படும் அழகை அணி என்கிறோம். இலக்கணங்கள் அணி, அலங்காரம் என்ற இரு சொற்களையும் ஒரே பொருளில் வழங்கும். தண்டியலங்காரம் அணியிலக்கண நூல். பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களையும், 125 நூற்பாக்களையும் உடையது. இன்று கிடைக்கும் அணி பற்றிய இலக்கண நூல்களில் தண்டியலங்காரமே பழமையானது.
- ஆசிரியர் சிறப்பும் புலமையும்
இந்நூலாசிரியர் கவிச்சுவை தேர்வதில் ரசிகத்தன்மையுடையவர். எடுத்துக்காட்டாக, இவர் வினையின் விபரீதப் பயனைச் சுவைபட ஒப்பிட்டுக் காட்டுவதைப் பார்க்கலாம்.
தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான், பிதாவைக்
கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் ; - உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்
- (தண்டியலங்காரம், சுப்பிரமணிய தேசிகர் உரை, பொருளணியியல், 111 )
(எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் தன் தலையை இழந்தான். தந்தையைக் கொன்ற சண்டீசன் குற்றம் நீங்கினான். உலகத்தில் ஒப்பற்ற மேன்மையைக் கொண்டு உயர்ந்துள்ளோர் நினைத்தால் நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபடும் என்பது இதன் பொருளாகும்).
இதன் மூலமாக நல்வினைப் பயன் தீதாகவும், தீவினைப் பயன் நன்மையாகவும் முடிகிறது என்பது தெரிகிறது.
காவிய தரிசனம் என்னும் வடமொழியின் மொழி பெயர்ப்பே தண்டியலங்காரம். இந்நூலாசிரியர் வடமொழி, தென்மொழிகளில் மிக வல்லுநர். தமிழ் மொழியில் இவர் திறமுடையவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. முதல் இயலாகிய பொதுவணியியலில் ஆசிரியர் நாமகளை வணங்கிச் செய்யுள் வகைகளைக் கூறுகிறார். இரண்டாம் இயலாகிய பொருளணியியலில் 35 செய்யுள் அணிகளைக் குறிப்பிடுகிறார். இதுவே இந்நூலின் சிறப்பான பகுதியாகும். மூன்றாவது இயலாகிய சொல்லணியியலில் பல்வேறு சொல்லணிகளைக் குறிப்பிடுகிறார்.
- சிவனைத் தொழுதலின் பயன்
தில்லையைப் போற்றுகின்ற பாடல்கள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்.
காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து
(தண்டி. பொருளணியல், 171)அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசிய கொன்றை மாலையையும் உடையவன் சிவபெருமான். அந்தச் சிவபெருமானைச் சிதம்பரத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பித் திருவடிகளைத் தொழுதால் ஊழ்வினையெல்லாம் குறைந்து நீங்கிவிடும் என்பது இதன் பொருளாகும்.