தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கண உரைகளும், இலக்கிய உரைகளும்

  • 2.2 இலக்கண உரைகளும், இலக்கிய உரைகளும்

    இக்காலப் பகுதியில் இலக்கண உரை என்ற நிலையில் வீரசோழியத்திற்கு உரை எழுந்தது. இலக்கிய உரை என்ற நிலையில் திருக்கோவையார், புறநானூறு போன்றவற்றிற்கு உரைகள் எழுந்தன.

    2.2.1 வீரசோழிய உரை

    இக்காலக் கட்டத்தில் வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்குப் பெருந்தேவனாரால் உரை எழுதப்பட்டது. பெருந்தேவனார் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பெரும் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். குறிப்பிடத்தக்கவர் மூவர். முதலாமவர் சங்கப் புலவர்களுள் ஒருவர். மற்றொருவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மூன்றாமவர் வீரசோழிய உரை எழுதியவர்.

    • பெருந்தேவனார் சமயமும் காலமும்

    தம் ஆசிரியரிடம் கற்றனவாயும், நேரே ஆராய்ந்தனவாயும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான பல பாடல்களைக் குறிப்பிடுகிறார். இவரது ஆசிரியரான புத்தமித்திரரைப் போலவே இவரும் பௌத்த சமயத்தினர் எனக் கூறப்பட்டாலும், இவர் சைவர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. உதாரணமாக இவருடைய பெயரே இவர் சைவர் எனக் காட்டும். பெருந் - தேவனார் என்பது ‘மகாதேவர்’ என்ற பெயரின் மொழி பெயர்ப்பாகும். இது சிவபெருமானின் பெயராகும். பொதுவாக இலக்கண, இலக்கிய உரைகளில் உரையாசிரியர் எவரும் திருமுறைகளைக் குறிப்பிடுவதில்லை. இவர் இரு திருமுறைப் பாடல்களைக் குறிப்பிடுகிறார்.

    ழ, ள, ற, ச, என்ற எழுத்துகளைச் சில இடங்களில் மக்கள் பிழையாக உச்சரிக்கின்றார்கள் எனக் கூறும் போது அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவார் என்கிறார் இவ்வாசிரியர். முதலாம் இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தி வரிகளையும் இவர் தம்முடைய நூலில் கையாண்டுள்ளார்.

    வீரராசேந்திரன் காலத்துக்குப் பிற்பட்ட (கி.பி. 1063 - 70) நூல் எதையும் மேற்கோளாகக் காட்டாததால், இவர் இச்சோழன் காலத்தை அடுத்து வாழ்ந்தவர் என்பதை உணரலாம்.

    2.2.2 திருக்கோவையார் உரை

    திருக்கோவையார் உரை தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக 1951இல் வெளிவந்தது. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் சைவர், தில்லையைக் குறிப்பிடும் இடங்களில் தெற்குத் திருப்பதி, திருச்சிற்றம்பலம் என்கிறார். பல சமயங்களில் நேரே பொருள் விளங்கும் பதவுரையாகவும், சில இடங்களில் தனியாக விசேட உரையாகவும் எழுதுகிறார். இவர் மேற்கோள் காட்டியது தொல்காப்பியம் ஒன்றே ஆகும். இவ்வுரையானது பேராசிரியர் உரை போன்று பெருஞ்சிறப்புடையது அல்ல. இருப்பினும் சிற்சில நயங்களை அது பெற்றுள்ளது.

    2.2.3 புறநானூற்று உரை

    இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை புறநானூற்று உரையாகும். இதன் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இவரது உரைநடையின் அமைதி, உரை நயம், இலக்கணம் கூறும் திறம் போன்றவை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் போன்றோருடன் ஒப்பக் கருதும் அறிவுடையவராக இவரைப் புலப்படுத்துகின்றன.

    இவரது உரை எளிய, நயம் மிக்க பொழிப்புரை. மூலத்திலுள்ள ஒவ்வொரு சொல்லையும் விடாது தெளிவாக விளக்கித் தொடர்புபடுத்தி உரை எழுதுகிறார். இவர் காலத்தில் அணியிலக்கணம் பெரிதும் ஆட்சிக்கு வரவில்லை. ஏனென்றால் சில அணிகளையே இவர் கூறுகின்றார். சிலவற்றின் பெயரைச் சொல்லவில்லை.

    செய்யுளில் சொற்கள் அமைந்தவாறே இவர் பொருளைக் கூறிச் செல்கிறார். இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். உரை எளிமையானது; வட சொல்லாட்சி மிகவும் குறைவு.

    மேற்கோளாக இவர் எடுத்துக்காட்டும் நூல்கள் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி விளக்கம், பெரும்பாணாற்றுப் படை, குறுந்தொகை, கலித்தொகை, சிந்தாமணி போன்றவையாகும். நூற்பெயரைச் சொல்வது இவர் வழக்கமன்று. நாலடியார், திருக்குறள் வரிகளைத் தம் உரைநடையாகவே எழுதிச் செல்கிறார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    இப்பாடப் பகுதியிலுள்ள (கி.பி. 1100 - 1150) குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் யாவை?

    2)

    திருக்கோவை உரையாசிரியர் மேற்கோளாகச் சுட்டியுள்ள ஒரே நூல் எது?

    3)

    புறநானூற்று உரையின் சிறப்பைச் சுருக்கமாகக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 17:16:14(இந்திய நேரம்)