தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறவகை இலக்கியங்கள்

  • 2.4 பிற வகை இலக்கியங்கள்

    மேற்கண்ட தலைப்புகளில் அடங்காத நூல்கள் பற்றி இங்குக் காணலாம். இலக்கியப் பங்களிப்பு என்ற நிலையில் இவற்றைப் பற்றி அதிகம் எதுவும் இல்லை எனலாம்.

    • நம்பிகாளி

    நம்பிகாளி என்ற புலவர் நெற்குன்றவாணர் காலத்தில் வாழ்ந்து அவரைப் பாடிப் பரிசில் பெற்றார். இவர் மிகச் சிறந்த புலவராய், ஒட்டக்கூத்தரோடு சேர்த்துச் சொல்லப் பெறும் தகுதியுடையவராய் வாழ்ந்தார். இவர் பல தலங்களையும் சுற்றி வந்தவர். இவரது பயணம் குறித்த அற்புத வரலாறுகள் கொங்குமண்டல சதகத்தில் கூறப்பட்டுள்ளன. நம்பிகாளி, முருக பக்தியும், தமிழ்ப் புலமையும் மிக்கவர். பிற்காலத்தில் அனதாரியப்பப் புலவரைச் சிறப்பிக்க வந்த பாடல்,

    கம்பனென்றும் கும்பனென்றும் காளி
    ஒட்டக்கூத்தனென்றும் பேர் கொள்வரோ

    என்று சொல்வதிலிருந்து, இவரது புலமை பற்றி அறியலாம்.

    • வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி

    வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி என்ற பெயர் கொண்ட புலவர் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியின் இறுதியில் வாழ்ந்து நூல்கள் இயற்றியதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். மாமுனி என்றமையால் இவர் துறவியும், மடாதிபதியுமாக இருந்தார் எனக் கொள்ளலாம். பரசமய கோளரி என்றமையால் சமயவாதத்தில் மிகவும் வல்லவராயிருந்து பிற சமயத்தாரை அடக்கினார் என்று கருதலாம். திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் மேற்குத் திருமதிலில் காணப்படும் பாடற்சாசனங்கள் இவரைப் பற்றிக் கூறுகின்றன. இவர், அஷ்டாதச புராணம், கன்னிவன (திருப்பாதிரிப்புலியூர்) புராணம், பூம்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) நாடகம் என்பனவற்றைப் பாடினார். இந்நாடகம் எங்கு ஆடப்பெற்றது. இவற்றின் பொருட்டு அரசன் இவருக்கு இறையிலியாக நிலங்கள்  அளித்த செய்திகள் அக்கல்வெட்டுகளில் வருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 16:59:38(இந்திய நேரம்)