தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  •     

    6.0 பாட முன்னுரை

    பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ இலக்கியங்கள் பெருகின. சில தத்துவ நூல்கள் உருவாயின. 50க்கும் மேற்பட்ட புலவர்கள் தோன்றி இலக்கியப் பணி செய்தனர். இவர்களில் அருணகிரிநாதர், காளமேகப் புலவர் போன்றோர் உட்பட்ட சிலரே பலமுறை விவாதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆவர். ஏனையோரைப் பற்றி இலக்கிய வரலாறுகளில் காண்பது மிகவும் அரிதாகும். வள்ளல் பரம்பரையினர் சிலருடைய பங்களிப்பும் இக்காலத்தில் இருந்தது. ஒப்புநோக்கும்போது இக்காலப் பகுதியில் சித்தர்களின் இலக்கியப் பணி மிகுதி எனலாம்.

    விசயநகர ஆட்சி சிறப்பான நிலையில் இருந்தது. கோயில், சிற்பம் போன்ற கலைகளுடன் இலக்கிய வளர்ச்சியும் காணப்பட்டது. உரைகள் மிகுதியாகத் தோன்றின. இக்காலத்திற்குச் சற்று முன்னதாகச் சித்தர்கள் தோன்றினர். முகமதியருடைய தாக்குதலால் தமிழ்நாட்டின் சமயக் கட்டமைப்பும் பண்பாடும் சீர்குலைந்தன. விசயநகர மன்னரது ஆதரவு இவற்றை மாற்றி அமைத்தது. இம்மன்னர்களது காலத்தில் தோன்றிய பல கலைகளும், இலக்கியங்களும் மக்களின் விழிப்புணர்ச்சியின்மை, ஒற்றுமையின்மை காரணமாக நெடுநாள் நிலைத்து நிற்காமல் வீழ்ச்சியடைந்தன. அடுத்த இரு நூற்றாண்டுகளில் வெள்ளையர் வரவின் விளைவாகக் கிறித்தவ சமயம் பரவவும், அதன் வழியாக மேலை நாட்டு நாகரிகமும் ஆதிக்கமும் நிலைக்கவும் வழியேற்பட்டது.

    இக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட புலவர்கள் தோன்றினர். இருப்பினும் குறிப்பிடத்தக்க புலவர்கள் என்ற நிலையில் காளமேகப்புலவர், அருணகிரிநாதர், கயாதரர், கல்லாடர், ஞானவரோதயர், சத்தியஞானப் பண்டாரம், களந்தை ஞானப்பிரகாசர், மணவாள மாமுனிகள், உதீசித்தேவர் போன்றோரைக் கூறலாம். இவை பற்றிய செய்திகளை இப்பாடம் குறிப்பிடுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 12:09:02(இந்திய நேரம்)