தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறவகை இலக்கியங்கள்

  • 6.2 பிறவகை இலக்கியங்கள்

    மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக் கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும் தோன்றின. அவை சமயம் சார்ந்த நிலையிலும், சமயம் சாரா நிலையிலும் அடங்கும்.

    6.2.1 சமயம் சார்ந்தவை

    சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா, திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை உள்ளிட்ட பல நூல்களாகும்.

    • திருப்புகழ்

    இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில் திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள் திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல் திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது.

    திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்
    திருப்புகழை நித்தந் தியானிக்கத் - திருப்புகழை
    உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்
    அற்றிருக்கத் தானே யறும்

    நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி, நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ் என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப் பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ், சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப் போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி, திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும். கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம் செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக் கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.

    • திருஆனைக்காஉலா

    இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும். ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது. தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

    இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன் தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும் சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம் போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர் இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461, வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது. இறைவனின் பெயரைக் கூறும்போது இவர் பயன்படுத்தும் தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல், சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.

    • திருவாய்மொழி நூற்றந்தாதி

    மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கியக் காரணமாக இருந்தார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும் எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள் பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின் முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம் பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப் பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை, ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.

    • திருக்கலம்பகம்

    திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும். இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள் கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய் அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல் திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள் உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள் ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை போன்றவையாகும்.

    6.2.2 சமயம் சாராதவை

    சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல் போன்றவையாகும்.

    • வருணகுலாதித்தன் மடல்

    96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச் சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப் பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும். நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள் நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.

    • சித்திர மடல்

    இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174 கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த் தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக் கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும். மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

    காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடல் அல்லது இல்லை வலி                 (1131)

    (காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).

    • கபிலரகவல்

    கபிலர் அகவல், சமூகப் புரட்சியைக் கவிதை வடிவில் வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும் சாதி வேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப் பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும், களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர் அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில் கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

    குலமு மொன்றே குடியு மொன்றே
    இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

    இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக் கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும். அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 12:15:08(இந்திய நேரம்)