தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடல் இலக்கியம் அறிமுகம்

  • 5.1 மடல் இலக்கியம் - அறிமுகம்

    நண்பர்களே! மடல் இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளை முதலில் காண்போமா?

    பெயர்க் காரணம்

    மடல் ஏறுதல் என்ற பொருளை விளக்கும் நிலையில் அமையும் இலக்கிய வகை ஆதலால் இது மடல் இலக்கியம் எனப்படுகிறது என்று பொதுவாகக் கூறலாம்.

    இந்த இலக்கிய வகைக்கு வேறு பெயர்களும் உள்ளன. அவை யாவை?

    1) வள மடல்
    2) இன்ப மடல்

    பன்னிரு பாட்டியல் (63), வெண்பாப் பாட்டியல் (28), நவநீதப் பாட்டியல் (செய்யுள் இயல் 22) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை மடல் என்று குறிப்பிடுகின்றன.

    முத்து வீரியம் (யாப்பு இயல், ஒழியியல், (126), பிரபந்த தீபிகை(210) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை வளமடல் என்று கூறுகின்றன.

    சிதம்பரப் பாட்டியல் (மரபியல் 10), பிரபந்த மரபியல் (14) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை இன்ப மடல் என்று கூறுகின்றன.

    இவற்றால் தொடக்க காலத்தில் இந்த இலக்கிய வகை மடல் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இன்ப மடல், வள மடல் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது என்பது தெரிய வருகின்றது.

    5.1.1 தோற்றம்

    நண்பர்களே! இந்த மடல் இலக்கியத்தின் தோற்றத்தைப் பற்றிச் சிறிது பார்ப்போமா?

    அகப்பொருள் கூறுகளில் ஒன்று மடல் ஏறுதல் என்பது ஆகும். தொல்காப்பியர் பொருள் அதிகாரம் களவு இயலில் (11) இதைப் பற்றிக் கூறுகின்றார். தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். தலைவியைத் தன்னுடன் கூட்டுவிக்கும்படி தலைவன் தோழியிடம் வேண்டுகிறான். ஆனால் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. இதனால் தலைவன் மனம் வருந்துகிறான். இறுதியில் தலைவியை அடைவதற்காகத் தலைவன் மடல் ஏறப் போவதாகத் தோழியிடம் கூறுகின்றான்.

    மடல் கூற்றும் மடல் விலக்கும்

    நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூல் மடல் என்பதனை இரு நிலைகளில் விளக்குகின்றது.

    c01235d1.gif (1098 bytes)

    தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் அடையாவிட்டால் மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூற்று ஆகும்.

    தோழி தலைவனிடம் மடல் ஏற வேண்டாம் என்று வேண்டித் தலைவன் மடல் ஏறுவதை விலக்குவது மடல் விலக்கு ஆகும்.

    சங்க இலக்கியங்களில்

    சங்க இலக்கியங்களில் அகப்பொருள் தொடர்பான இலக்கியங்கள் மடல் பற்றிய செய்திகளைத் தருகின்றன சான்றாக,

    துன்பத்தின் துணை ஆய மடல்

    என்று கலித்தொகை (பாடல்.139: வரி-29) கூறக் காணலாம்.

    தலைவன் தலைவியைப் பிரிந்த துன்பத்திற்கு மடல் துணையாக உள்ளது என்ற கருத்து இங்குக் காணப்படுகிறது. பிரிவு காலத்தில் எழுதப்படும் மடல், காதலர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துப் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே துன்பத்தின் துணையாக அமைகிறது சங்க இலக்கியத்துள் இடம் பெறும் மடல் பற்றிய செய்திகள் மூலம் மடல் ஏற எண்ணுவோரின் மன நிலை, மடல் ஏறுவதன் நோக்கம் போன்றவை தெரிய வருகின்றன.

    சங்க இலக்கியத்தில் மடல் பாடிய மாதங்கீரனார் என்ற புலவர் குறிப்பிடப்படுகிறார்.

    திருக்குறளில் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தில் மடல் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர் கூறுகின்றார்.

    இந்த அதிகாரத்தில் காம நோயால் வருந்துபவர்களுக்கு மடல் காப்பு ஆக உள்ளமை, வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணிதல் போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

    நம்மாழ்வார் இறைவனின் பிரிவைப் பொறுக்காது தலைவி, பழி ஏற்படும் என்று எண்ணாது மடல் ஏறத் துணிந்தமையை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடுகிறார். (திருவாய்மொழி, 5.3.9 & 10)

    இவ்வாறு, இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும் இடம் பெறும் மடல் பற்றிய செய்திகளைக் கருவாகக் கொண்டு மடல் என்ற தனி இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

    முன்னோடிகள்

    இந்த மடல் இலக்கிய வகையின் முன்னோடியாகத் திகழ்பவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். இவர் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு மடல் இலக்கியங்களைப் பாடியுள்ளார்.

    பின்னர், பல மடல் இலக்கியங்கள் எழுந்துள்ளன. அவற்றுள் தத்துவராயர் இயற்றிய கலி மடல், காளமேகப் புலவர் இயற்றிய சித்திர மடல், தாசி காளி முத்துப் புலவர் இயற்றிய வருண குல ஆதித்தன் மடல் என்பன சுட்டுவதற்கு உரியன ஆகும்.

    5.1.2 மடலேறுதல்

    சங்க நூல்கள் மூலம் மடல் ஏறுதல் ஆகிய செயல் எவ்வாறு நிகழும் என்பதை உணர முடிகின்றது.

    குதிரை அமைப்பு

     

    தலைவன் பனை மடலால் ஒரு குதிரையைச் செய்கின்றான். அது புல் உண்ணாத குதிரை. ஆனால் அது உண்மைக் குதிரையைப் போன்றதே என்று தலைவன் உணர்த்துகின்றான். அந்தக் குதிரையின் துணையுடன் தன் காம நோயை நீக்க முயல்வதாகத் தலைவன் கூறுகின்றான். பனை மடலால் தான் செய்த குதிரைக்கு மணிகளைக் கட்டுகின்றான். அதற்கு ஆவாரம் பூவால் தொடுக்கப்பட்ட மாலையைப் போடுகிறான். மடல் ஏறும் தலைவன் எலும்பு மாலையைத் தான் அணிந்து கொள்கிறான். தலையில் எருக்கம் பூவால் ஆன மாலையை அணிந்து கொள்கிறான். இந்தப் பூக்கள் விலை கொடுத்து வாங்காதவை. பயனற்ற பூக்கள். மடல் ஏறுபவன் தன் வெட்கத்தை விட்டு விடுகின்றான்.

    குதிரையின் மேல் தலைவன்

    பனை மடலால் ஆன குதிரையின் மேல் தலைவன் ஏறுகின்றான். அந்தக் குதிரையைச் சிறுவர்கள் இழுத்துச் செல்கின்றனர். இதனைப் பார்ப்பவர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

    மடல் ஏறும் தலைவன் இவ்வாறு தன்னை மடல் ஏறும் நிலைக்கு உள் ஆக்கிய பெண்ணை இகழ்கின்றான். எனவே, இதைப் பார்க்கும் பலரும் அப்பெண்ணை இகழ்கின்றனர். இவ்வாறு மடல் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சி விளக்கப்படுவதைக் காணலாம்.

    பெண்கள் மடல் ஏறுதல்

    மடல் ஏறுதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்பது மரபு. பெண்கள் மடல் ஏறுதல் மரபு அன்று. தொல்காப்பியரும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்கின்றார்.

    ஆனால் பன்னிரு பாட்டியல் நூல் தலைவர் கடவுளர்களாய் அமையும் நூல்களில் பெண்கள் மடல் ஏறுதலும் உண்டு என்று கூறுகின்றது. திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் பாடுகிறபோது மடல் ஏறுவதாகக் கூறுகிறார்.

    5.1.3 சிறிய திருமடல்

    மடல் இலக்கிய வகையின் முன்னோடி நூலாக இந்தச் சிறிய திருமடல் காணப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரு மடல் இலக்கியங்களைப் பாடியுள்ளார்.

    மடல் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்றவாறு எதுகை அமையும். எதுகை என்றால் என்ன? சொல்லின் இரண்டாவது எழுத்துக்கள் ஒன்று போல் வருமாறு பாடுவது எதுகை ஆகும். சிறிய திருமடலின் பாட்டுடைத் தலைவன் இறைவன் ஆகிய நாராயணன். இந்தப் பெயருக்கு ஏற்ப ஒவ்வோர் அடியிலும் உள்ள முதல் சொல்லின் இரண்டாம் எழுத்து நூல் முழுவதும் ஒத்து வருகின்றது. சான்றாகப் பின்வரும் அடிகளைக் காட்டலாம்.

    நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி
    ஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை
    வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
    சீரார் திருவடியால் பாய்ந்தான்.

    (சிறிய திருமடல், அடிகள் 74-77)

    என்ற அடிகளில் நீரார், ஓரா என இரண்டாவது எழுத்துக்கள் ஒன்று மேல் வருவதைக் காட்டலாம். இவ்வாறு நூல் முழுவதும் வருவது திருமங்கை ஆழ்வாரின் புலமைத் திறனைக் காட்டுகின்றது எனலாம்.

    1.
    மடல் இலக்கிய வகையின் வேறு பெயர்கள் யாவை?
    2.
    நம்பி அகப்பொருள் மடல் என்பதை எந்த எந்த நிலைகளில் விளக்குகிறது?
    3.
    திருக்குறளில் மடல் பற்றிய செய்திகள் எந்த அதிகாரத்தில் இடம் பெறுகின்றன?
    4.
    மடல் இலக்கிய வகையின் முன்னோடி யார்? அவர் பாடிய நூல்கள் யாவை?
    5.
    சிறிய திருமடல் என்ற நூலில் பாட்டுடைத்தலைவர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 15:34:12(இந்திய நேரம்)