Primary tabs
-
4.3 உயிரளபெடை
பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை,
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடைஎன்பவை ஆகும்.
நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.
இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.
மாஅயோள்
பேஎய்ப் பக்கம்இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே(நன்னூல் 91)(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும். அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்.)
பொதுவாக, செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது. எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும்.
1. இயற்கை அளபெடை
2. சொல்லிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
4. செய்யுளிசை அளபெடை.இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.
மரூஉ, ஒரூஉ, ஆடூஉ, மகடூஉ, குரீஇ
குழூஉக்குறி, குளாஅம்பல்
பேரூர்கிழாஅன்இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன
ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.
நசை என்பது விருப்பம் என்று பொருள்படும். அதையே
நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்
தொகை தொகைஇ (தொகுத்து)
வளை வளைஇ (வளைத்து)
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழைகெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து, தூ என நெடில் எழுத்தாகி, கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே.
செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஇந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே நிரை அசை ஆகிவிடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை, நேர் என்ற இரு அசைகள் தேவை. தொழாஅள் என்று அளபெடுத்தபின், தொழா என்பது நிரை அசையாகவும், அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன. செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும்.
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
நற்றாள் தொழாஅர் எனின்
என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும். செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்
அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க