தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.7 குறுக்கங்கள்

 • 4.7 குறுக்கங்கள்

  குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய இரண்டிலும் உகரம் குறுகி ஒலிப்பதைப் பற்றிப் படித்தோம். அதைப்போல, ஐ, ஔ, ம், ஆய்தம் ஆகியவையும் குறுகி ஒலிக்கும். இவற்றை ஐகாரக் குறுக்கும், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று சொல்கிறோம்.

  4.7.1 ஐகாரக்குறுக்கம்

  ஐ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும்.

  ப்பசி, வைகல்      - முதல்
  டைசி, இறைவன்    - இடை
  ழை, நகை , கடை   - இறுதி

  மேலே ஐ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம். ஐ என்பது நெடில் எழுத்து என்று முன்பே கூறப்பட்டது. நெடில் எழுத்து என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும்.  தனியே இருக்கும் ஐகாரம் மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும். சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டு மாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும்.  இதை ஐகாரக் குறுக்கம் என்று கூறுவர்.

  மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள ஐகாரம், இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும். ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,

  சைஇ, அசை

  இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்கு ஒரு மாத்திரையும் வரும்.

  4.7.2 ஒளகாரக்குறுக்கம்

  ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர். ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

  ஒளவையார்,  மௌவல்,  வௌவால்.

  ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

  தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்
  நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்

  (நன்னூல் 95)

  (பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்) குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். )

  4.7.3 மகரக்குறுக்கம்

  மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும்.  மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.

  • தனிமொழி

  ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும்.

  மருண்ம், உண்ம்
  போன்ம், சென்ம்

  • புணர்மொழி

  இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.

  தரும் வளவன்
  வாழும் வகை

  மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையே பெறும்.

  ண, ன முன்னும், வஃகான் மிசையும் மக்குறுகும்.
  (நன்னூல். 96)

  பொருள்:

  வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று, குறைந்து ஒலிக்கும்.

  4.7.4 ஆய்தக்குறுக்கம்

  இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.

   

  அல்
  +
  திணை
  =
  அஃறிணை

   முள்

  +
  தீது
  =
  முஃடீது

  இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.

  ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

  (நன்னூல் 97)

  (பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )

  • சார்பு எழுத்துகளுக்கு மாத்திரை

  சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

  உயிரளபெடை
  மூன்று மாத்திரை
  உயிர்மெய் நெடில்
  இரண்டு மாத்திரை
  உயிர்மெய்க் குறில்
  ஒரு மாத்திரை
  ஒற்றளபெடை
  ஒரு மாத்திரை
  ஐகாரக்குறுக்கம்,
  ஒரு மாத்திரை
  ஒளகாரக்குறுக்கம்
  ஒரு மாத்திரை
  குற்றியலுகரம், குற்றியலிகரம்
  அரை மாத்திரை
  ஆய்தம்
  அரை மாத்திரை
  மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
  கால் மாத்திரை

  மூன்று உயிரளபு;

  இரண்டு ஆம் நெடில்; ஒன்றே
  குறிலோடு, ஐ, ஒளக் குறுக்கம் ஒற்றளபு;
  அரை ஒற்று. இ, உக் குறுக்கம், ஆய்தம்;
  கால் குறள் மஃகான், ஆய்தம், மாத்திரை.

  (நன்னூல். 99)

  (பொருள்: உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும். உயிர்மெய்க்குறில், ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் ஆகியவை ஒரு மாத்திரை பெறும். மெய் எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவை அரை மாத்திரை பெறும். மகரக்குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் கால் மாத்திரை பெறும். )

புதுப்பிக்கபட்ட நாள் : 01-12-2017 16:48:37(இந்திய நேரம்)