தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:6-குற்றியலிகரம்

 • 4.6 குற்றியலிகரம்

  உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

  4.6.1 தனிமொழிக் குற்றியலிகரம்

  மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

  கேண்மியா
  சென்மியா

  இந்தச் சொற்களில் உள்ள ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் தனக்கு இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.

  4.6.2 புணர்மொழிக் குற்றியலிகரம்

  புணர்மொழி என்பது இரண்டு சொற்கள் சேர்ந்து வருவதாகும். புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம் ஆகும். முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

  நாடு(ட்+உ) + யாது
  =
  நாடியாது(ட்+இ)
  களிற்று(ற்+உ) + யானை
  =
  களிற்றியானை (ற்+இ)
  கொக்கு(க்+உ) + யாது
  =
  கொக்கியாது(க்+இ)
  குரங்கு(க்+உ) + யாது
  =
  குரங்கியாது(க்+இ)

  யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்
  அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய

  (நன்னூல் 93)

  (பொருள்: இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் முதல் சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இரண்டாம் சொல்லின் முதலில் யகரம் வரும்போது இகரமாக மாறும். இந்த இகரமும் அசைச் சொல்லாகிய மியா என்பதில் உள்ள இகரமும் குறைந்து ஒலிக்கும்.)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:56:07(இந்திய நேரம்)