தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐகாரச் சாரியை பெறும் குற்றியலுகரச் சொற்கள்

  • 5.6 ஐகாரச் சாரியை பெறும் குற்றியலுகரச் சொற்கள்

    ஐகாரச் சாரியையை இறுதியில் பெற்று வருகின்ற மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும் உண்டு.

    ஐஈற் றுடைக் குற்றுகரமும் உளவே                       (நன்னூல், 185)

    இந்நூற்பா மென்தொடர் என்று தொடங்கும் நூற்பாவை அடுத்து வருகின்றமையின், இந்நூற்பாவில் கூறப்படும் குற்றியலுகரம் மென்தொடர் என்றும், இந்நூற்பாவிலும் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படாமையால் நாற்கணமும் வரும் என்றும் உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

    சான்று:

    ஒன்று + ஆள் = ஒற்றையாள்
    பண்டு + காலம் = பண்டைக்காலம்
    இன்று + நாள் = இன்றை நாள், இற்றைநாள்
    இரண்டு + வேடம் = இரட்டை வேடம்

    ‘ஐ ஈற்றுடைக் குற்றுகரமும் உளவே’ என்று பொதுப்படக் கூறியிருப்பதால் பிறதொடர்க் குற்றியலுகரங்களும் சில சமயம் ஐகாரச் சாரியை பெறுதல் உண்டு.

    சான்று:

    நேற்று + கூலி = நேற்றைக் கூலி
    நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது

    இங்கே நேற்று என்ற வன்தொடர்க் குற்றியலுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 11:54:20(இந்திய நேரம்)