தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

 • பாடம் - 5

  C02135 குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நிலைமொழியில் உள்ள ஆறுவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களோடு, வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகள் அல்வழிப் பொருளிலும், வேற்றுமைப் பொருளிலும் எவ்வாறு புணரும் என்பதை விளக்கிச் சொல்கிறது. வேற்றுமைப் புணர்ச்சியில் நெடில் தொடர்க் குற்றியலுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் ஒற்று இடையில் மிகுதல், ஒற்று இடையில் மிகாமல் இயல்பாதல் என்ற இருவகையாக வருவதை விளக்கிச் சொல்கிறது. எந்த எந்தக் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் மிகாது, எந்த எந்தக் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் மிகும் என்பதை வரையறுத்துச் சொல்கிறது. குற்றியலுகர ஈற்றுத் திசைப் பெயர்களோடு திசைப் பெயர்களும், பிற பெயர்களும் புணரும் புணர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. தேங்காய் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை எடுத்துச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வரும் வல்லினம் மிகுதலை அறிந்து கொள்ளலாம்.  
  • அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரம் அல்லாத பிற ஐந்து குற்றியலுகரங்கள் முன் வரும் வல்லினம் இயல்பாதலைத் தெரிந்து கொள்ளலாம்.
  • வேற்றுமையில் இடைத்தொடர், ஆய்தத் தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகவே வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • வேற்றுமையில் வன்தொடர், மென்தொடர் என்னும் குற்றியலுகரங்களின்முன் வரும் வல்லினம் மிகுதலை அறிந்து கொள்ளலாம்.
  • வேற்றுமையில் நெடில்தொடர்,  உயிர்த்தொடர் என்னும் குற்றியலுகரங்களின் ஈற்றில் வரும் ட, ற என்னும் வல்லின மெய்கள் வருமொழியில் நாற்கணமும் வரும்போது இரட்டிக்கும் இயல்பை அறிந்து கொள்ளலாம்.
  • திசைப்பெயர்கள் எல்லாம் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 14:30:57(இந்திய நேரம்)