தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாடமுன்னுரை

    ஒன்று, இரண்டு, மூன்று என்றவாறு எண்ணப்படும் எண்ணைக் குறிக்கும் பெயர்கள் எண்ணுப்பெயர்கள் எனப்படும். எந்த ஒரு மொழியிலும் எண்ணுப்பெயர்கள் தொடக்கம் முதல் இன்று வரை பெரும்பாலும் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் நிலைபேறு உடையனவாய் வழங்கி வருவதைக் காணலாம். தமிழிலும் தொல்காப்பியர் காலத்தில் எண்ணுப்பெயர்கள் எப்படி வழங்கினவோ, பெரும்பாலும் அப்படியே அவர் காலத்திற்குப் பின்னும் காலந்தோறும் வழங்கிவந்து, இன்றும் வழங்கி வருகின்றன.

    ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும், மற்ற எண்ணுப்பெயர்கள் எல்லாமும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன. இவ்வெண்ணுப் பெயர்களிலிருந்து மற்ற எண்ணுப்பெயர்கள் பெருக்கல் முறையிலும், கூட்டல் முறையிலும் தோன்றியிருப்பதைக் காணலாம். இருபது, முப்பது, நாற்பது போன்றவை 2 x 10 = 20, 3 x 10 = 30, 4 x 10 = 40 என்றாற் போலப் பெருக்கல் முறையில் அமைந்துள்ளன. பதினொன்று, இருபத்திரண்டு, நூற்றுமூன்று போன்றவை 10+1=11, 20+2=22, 100+3=103 என்றாற்போலக் கூட்டல் முறையில் அமைந்துள்ளன. ஒன்பது என்ற அடிப்படை எண்ணுப்பெயர்கூட, பத்திலிருந்து ஒன்று குறைந்தது என்ற கழித்தல் நிலையில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

    ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் ஏழு என்பதைத் தவிரப் பிற ஒன்பது எண்ணுப்பெயர்களும், நூறு என்ற எண்ணுப்பெயரும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள். இவற்றில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்பன மென்தொடர்க் குற்றியலுகரங்கள்; ஆறு, நூறு என்பன நெடில் தொடர்க் குற்றியலுகரங்கள்; எட்டு, பத்து என்பன வன்தொடர்க் குற்றியலுகரங்கள்; ஒன்பது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். இவை தவிர அமைந்த ஏழு என்பது முற்றியலுகர ஈற்றுப் பெயர். ஆயிரம் என்பது மெய் ஈற்றுப் பெயர்.

    ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் குற்றியலுகர ஈற்றினை உடைய ஒன்பது எண்ணுப் பெயர்களும், ஏழு என்னும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயரும் வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்களோடும், பிற பெயர்களோடும் புணரும்போது அடையும் விகாரங்களைப் (மாற்றங்களை) பற்றிக் கூறுவதே எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.

    சான்று:

    இரண்டு + பத்து = இருபது
    ஒன்று + மாடு = ஒரு மாடு
    மூன்று + சந்தி = முச்சந்தி

    இச்சான்றுகளில் இரண்டு, ஒன்று, மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் முறையே பத்து என்ற எண்ணுப்பெயரோடும், மாடு, சந்தி என்ற பெயர்களோடும் புணரும்போது இரு, ஒரு, மு என விகாரம் அடைந்திருப்பதைக் காணலாம்.

    நன்னூலார் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களுக்கான புணர்ச்சி பற்றிய பொதுவிதியை முதலில் கூறுகின்றார். அதன்பின்பு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப்பெயர்கள் ஒவ்வொன்றிற்குமான புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளைக் கூறுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 15:12:42(இந்திய நேரம்)