தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.4 தொகுப்புரை

    இதுகாறும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியவற்றை விரிவாகப் பார்த்தோம். அவற்றை இங்குச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

    பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும், பிற எல்லா எண்ணுப்பெயர்களும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன.

    அளவைப் பெயர்களும், பிற பெயர்களும் வருமொழியில் வந்தால் ஒன்று, இரண்டு என்னும் எண்ணுப்பெயர்கள் முதல் குறில் நீளும். மூன்று, ஆறு, ஏழு என்பன முதல் நெடில் குறுகும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு என்பன ஈற்று உயிர்மெய் கெடும். ஏழு என்பதில் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும். இது எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாகும்.

    ஒன்று, இரண்டு என்பன வருமொழி முதலில் உயிர் வரும்போது முறையே ஓர், ஈர் எனவும், வருமொழி முதலில் மெய்வரும்போது முறையே ஒரு, இரு எனவும் மாறும்.

    மூன்று என்பதில் உள்ள னகரமெய் உயிர்வந்தால் கெடும்; மெய்வந்தால் வருகின்ற மெய்யாகத் திரியும்.

    நான்கு என்பதில் உள்ள னகரமெய் உயிரும் இடையினமும் வரும்போது லகர மெய்யாகவும், வல்லினம் வரும்போது றகர மெய்யாகவும் திரியும்.

    ஐந்து என்பதில் உள்ள நகரமெய் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகவும், வல்லினம் வரும்போது அதற்கு இனமெய்யாகவும் திரியும்; பிறவரின் கெடும்.

    எட்டு என்பதில் உள்ள டகரமெய் ணகர மெய்யாகத் திரியும்.

    ஒன்பதின் முன்னர்ப் பத்தும் நூறும் வந்து புணர்வதால் முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன.

    எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களோடு வருமொழியில் பத்து என்பது வந்து புணரும்போது, அதன் இடையில் உள்ள தகரமெய் கெடும்.

    பத்து, ஒன்பது என்னும் எண்ணுப்பெயர்கள் மற்ற எண்ணுப்பெயர்களோடும் பிறபெயர்களோடும் புணரும்போது இன், இற்று ஆகிய சாரியைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கும். அப்போது பத்து என்பதன் இடையில் உள்ள தகர மெய் கெடும்.

    இவையாவும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளாகும். இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக விரிவாக அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    புணர்ச்சியில் இரண்டு என்ற எண்ணுப்பெயரின் முன் வரும் பத்து என்ன மாற்றம் பெறும்?
    2.
    எட்டு + பத்து - சேர்த்து எழுதுக.
    3.
    பதின்மடங்கு - பிரித்து எழுதுக.
    4.
    வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர் முதலானவற்றோடு புணரும்போது ஒன்பது ஏற்று நிற்கும் சாரியைகள் யாவை?
    5.
    பத்து + இரண்டு - சேர்த்து எழுதுக.
    6.
    ஒன்று என்பது தன்னோடு தானே இரட்டிக்கும்போது எவ்வாறு புணரும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 12:50:03(இந்திய நேரம்)