தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சில வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

  • 5.2 சில வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

    நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் ஒவ்வோர் ஈற்றிற்கான புணர்ச்சி விதிகளைக் கூறும்போது, வேற்றுமைப் புணர்ச்சிக்கான பொதுவிதிகளையும் கூறிச்செல்கிறார். வேற்றுமைகளில் இரண்டாம் வேற்றுமையும், மூன்றாம் வேற்றுமையும் ஆங்கே சொல்லப்பட்ட வேற்றுமைப் புணர்ச்சி விதிகள் ஒரு சிலவற்றினின்று மாறுபட்டு அமைகின்றன. அவற்றை நன்னூலார் உருபுபுணரியலில் தொகுத்துக் கூறுகிறார். அவற்றை ஈண்டுச் சான்றுடன் விளக்கிக் காண்போம்.

    5.2.1 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

    இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி, முன்னமே வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றிலிருந்து மாறுபட்டு அமையும். அவை பின்வருமாறு:

    1. இயல்பாக வரவேண்டிய இடத்தில் விகாரப்பட்டு வரும்.

    பொதுவிதிப்படி நின் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வந்தால் வேற்றுமையில் இயல்பாகும். இது மெய்ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.

    நின் ஈறு இயல்பாம் (நன்னூல், 218: 2)

    சான்று:

    நின் + பகை = நின்பகை (நினதுபகை, ஆறாம் வேற்றுமைத் தொகை)

    ஆனால் இரண்டாம் வேற்றுமையில் நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய், வல்லின மெய் வந்தால் றகர மெய்யாகத் திரியும்.

    சான்று:

    வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப (தொல்.பொருள், 415: 1)

    (அரசே! நீ வழிபடுகின்ற தெய்வம் நின்னைப் பாதுகாக்க)

    இத்தொடரில் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாக,

    நின் + புறங்காக்க = நிற்புறங்காக்க

    என வந்துள்ளது. நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய் வருமொழி முதலில் வல்லினமெய் வந்தால் இயல்பாகும் என்ற பொதுவிதிக்கு மாறாக இங்கு றகர மெய்யாகத் திரிந்துள்ளது. னகரம் றகரமாகத் திரிந்தது மூவகை விகாரங்களுள் திரிதல் விகாரம் ஆகும்.

    1. விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில் இயல்பாக வரும்.

    பொதுவிதிப்படி, நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகரமும் னகரமும், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும். இது மெய் ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.

    ணன வல்லினம் வரட் டறவும் ..... வேற்றுமைக்கு
                                    (நன்னூல், 209
    : 1-2)

    சான்று:

    ண் + குடம் = மட்குடம் (மண்ணால் ஆகிய குடம்)
    பொன் + குடம் = பொற்குடம் (பொன்னால் ஆகிய குடம்)

    இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத்தொகை.

    ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகர மெய்கள் வல்லினம் வந்தால் அவ்வாறு திரியாது இயல்பாக நிற்கின்றன.

    சான்று:

    ண் + கொணர்ந்தான் = மண்கொணர்ந்தான்
    பொன் + கொடுத்தான் = பொன்கொடுத்தான்

    (மண்கொணர்ந்தான் – மண்ணைக் கொணர்ந்தான்; கொணர்ந்தான் – கொண்டுவந்தான்; பொன் கொடுத்தான் – பொன்னைக் கொடுத்தான்)

    எனவே மற்ற வேற்றுமைகள் விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில், இரண்டாம் வேற்றுமை இயல்பாக வந்தது.

    இனி இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் உருபு கட்டாயம் விரிந்தே வருதலைப் பற்றியும், தொக்கு வருதலைப் பற்றியும் நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார். அவற்றைக் காண்போம்.

    1. உயர்திணைப் பெயரினிடத்து ஐ உருபு விரிந்து வரும். தொக்கும் (மறைந்தும்) வரும்.

    சான்று: 1

    நம்பியைக் கொணர்ந்தான்

    ஈண்டு நம்பி என்ற உயர்திணைப் பெயரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு விரிந்து நின்றது. இவ்விடத்தில் நம்பி கொணர்ந்தான் என உருபு தொக்கு வாராது. நம்பிகொணர்ந்தான் என்றால், நம்பி ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தான் என்று பொருள்படும். எனவே நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபு கட்டாயம் விரிந்தே வரும்.

    சான்று: 2

    மகன் + பெற்றாள் = மகற்பெற்றாள்

    (மகற்பெற்றாள் – மகனைப் பெற்றாள்)

    ஈண்டு மகன் உயர்திணைப் பெயரில் ஐ தொக்கு வந்தது. மகன் பெற்றாள் என ஐ உருபு தொக்கு நின்றாலும், மகனைப் பெற்றாள் என ஐ உருபு விரிந்து நின்றாலும் ஒரே பொருள் ஆகும். எனவே இதுபோன்ற தொடரில் ஐ உருபு தொக்கு வரும். ஆனால் நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபை விரித்தே சொல்லவேண்டும்.

    1. விரவுப்பெயர்களில் (இருதிணைப் பொதுப்பெயர்களில்) ஐ உருபு விரிந்தும், விரிதல் இன்றித் தொக்கும் வரும்.

    சான்று: 1

    சாத்தனைக் கொணர்ந்தான்

    ஈண்டுச் சாத்தன் என்பது பொதுப்பெயர். எருதையும், மனிதன் ஒருவனையும் குறிப்பதால் பொதுப்பெயர். இப்பொதுப்பெயரில் ஐ உருபு விரிந்தே வரும்.

    சான்று : 2

    ஆண் பெற்றாள் (ஆணைப் பெற்றாள்)

    ஈண்டு ஆண் என்ற பொதுப்பெயரில் ஐ உருபு தொக்கு வந்தது.

    மற்ற வேற்றுமைகளில் உயர்திணையிலும், இருதிணைப்பொதுப் பெயர்களிலும் உருபு விரிந்தே வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு தொடரில் வேற்றுமை உருபு தொக்கும் விரிந்தும் வரலாம். பொருள் மாறாது. சான்றாக, உயர்திணைப் பெயரிலும், இருதிணைப் பொதுப்பெயரிலும் ஆறாம் வேற்றுமைத் தொகையில்,

    நம்பி பெருமை
    உயர்திணைப் பெயர்
    மகன் பெருமை
     
     
     
    சாத்தன் செவி
    இருதிணைப் பொதுப் பெயர்
    ஆண் கை

    என உருபு தொக்கு வரும். இத்தொடர்களில் ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது என்னும் உருபை விரித்து,

    நம்பியது பெருமை
    மகனது பெருமை
    சாத்தனது செவி
    ஆணினது கை

    எனச் சொன்னாலும் ஒரே பொருள். எனவே மற்ற வேற்றுமைகளில் உருபு தொக்கும், விரிந்தும் வரும். ஆனால் இரண்டாம் வேற்றுமை மட்டும் உருபு விரிந்து மட்டுமே வருதல், தொக்கும் விரிந்தும் வருதல் என்ற இருவேறு நிலைகளை உடையது.

    மேலே கூறிய நான்கு விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

    இயல்பின் விகாரமும், விகாரத்து இயல்பும்,
    உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்,
    விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும்,
    அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே (நன்னூல், 255)

    (நின்றும் – உருபு மறைந்தும்)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:10:27(இந்திய நேரம்)