Primary tabs
-
பாடம் - 3
C02143 மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - IIIஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
லகர மெய்யையும், ளகர மெய்யையும் இறுதியில் கொண்ட சொற்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு அல்வழி, வேற்றுமை ஆகிய இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் பொதுவிதியையும் சிறப்பு விதிகளையும் விளக்கிச் சொல்கிறது.
னகர, லகர மெய்களின் முன்னும், ணகர, ளகர மெய்களின் முன்னும் வருமொழி முதலில் வருகின்ற தகர மெய்யும், நகர மெய்யும் அல்வழிப் புணர்ச்சியிலும், வேற்றுமைப் புணர்ச்சியிலும் எவ்வாறு திரியும் என்பது பற்றி நன்னூலார் கூறுவனவற்றை விளக்கிச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- நிலைமொழியின் இறுதியில் உள்ள லகர ளகர மெய்கள் வருமொழியின் முதலில் வல்லினம் வர, முறையே றகர மெய்யாகவும் டகர மெய்யாகவும் திரிதலை அறிந்து கொள்ளலாம்.
- வருமொழியின் முதலில் மெல்லினம் வர, லகர ளகர மெய்கள் முறையே னகர மெய்யாகவும், ணகர மெய்யாகவும் திரிதலையும் அறிந்து கொள்ளலாம்.
- நெல், செல், கொல், சொல் என்னும் லகர ஈற்றுச் சொற்களின் முன்னர் வல்லினம் வர, லகரம் றகரமாதலைத் தெரிந்து கொள்ளலாம்.
- இல் என்னும் லகர ஈற்றுச் சொல்லின் முன்னர் வல்லினம் வரும்போது அச்சொல் ஐகாரச்சாரியை, ஆகாரச்சாரியை பெறுதலை அறிந்து கொள்ளலாம்.
- நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களின் முன் வருகின்ற தகரம் றகரமாகவும், நகரம் னகரமாகவும் திரிதலை அறிந்து கொள்ளலாம்.
- நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, ளகர மெய்களின் முன் வருகின்ற தகரம் டகரமாகவும், நகரம் ணகரமாகவும் திரிதலை அறிந்து கொள்ளலாம்.