Primary tabs
3.3 உயிர் ஈற்று, மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்குப் புறனடை
(புறனடை = ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே ஒரு நூற்பாவில் அமைத்துக் காட்டுவது)
நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் எல்லா ஈற்று நிலை மொழிகளும், வருமொழிகளோடு புணரும் முறை பற்றிக் கூறிய புணர்ச்சி விதிகளை இதுவரை பார்த்தோம். நன்னூலார் அவ்விரண்டு இயல்களிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகளும் தமிழில் உள்ளன. சான்றாக,
மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
(கம்பராமாயணம், 3008:2)என்ற கம்பராமாயணப் பாடல் அடியில் மாயிரு என வருகிறது. இதற்கு ‘மிகப் பெரிய’ என்று பொருள். இது,
மா + இரு
எனப் பிரியும். மா என்னும் உயிர் ஈற்றுச் சொல் வருமொழி முதலில் உயிர் வரும்போது,
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)என்ற புணர்ச்சி விதிப்படி, இடையில் வகர உடம்படுமெய் பெற்று,
மா + இரு > மா + வ் + இரு = மாவிரு
என வரவேண்டும். ஆனால் இவ்விதிக்கு மாறாக,
மா + இரு > மா + ய் + இரு = மாயிரு
என இடையில் யகர மெய் பெற்று வந்துள்ளது.
இதற்குக் காரணம் யாது? மா என்னும் ஓர் எழுத்துச் சொல் மரம், விலங்கு என்னும் இரு பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும், மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொல்லாகவும் வழங்குகிறது.
மா என்னும் சொல் பெயர்ச்சொல்லாக நிலைமொழியில் நின்று, வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது, விதிப்படி வகர உடம்படுமெய்யே பெறும்.
சான்று :
மா + இலை > மா + வ் + இலை = மாவிலை (மாமரத்தின் இலை)
மா + ஏறினான் > மா + வ் + ஏறினான் = மாவேறினான்
(மரத்தில் ஏறினான், விலங்கின்மேல் ஏறினான்)ஆனால் மா என்னும் சொல் உரிச்சொல்லாக நிலைமொழியில் நின்று, வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது, விதிப்படி வகர உடம்படுமெய் பெறாது, யகர மெய்யே பெறுகிறது. இந்த யகர மெய் உடம்படுமெய் அன்று. மா + இரு என்பதற்கு இடையில் தோன்றல் விகாரம் என்னும் புணர்ச்சி விதியின்படி யகரமெய் தோன்றி, மாயிரு என அமைந்தது என்று உணர்ந்து கொள்ளலாம்.
இதுபோல, ஏற்கெனவே விதித்த புணர்ச்சி விதிகளில் அடங்காது ஒரு காரணம் பற்றி வேறுபட்ட, மாயிரு போன்ற சொற்புணர்ச்சிகளை மெய்ஈற்றுப் புணரியலின் இறுதி நூற்பாவில் நன்னூலார் அமைத்துக் காட்டுகிறார். அந்நூற்பா புறனடை நூற்பா எனப்படுகிறது. புறனடை நூற்பா என்பதற்கு ‘ஏற்கெனவே விதித்தவற்றுள் அடங்காதவற்றைத் தனியே அமைத்துக் காட்டும் நூற்பா’ என்று பொருள். அந்நூற்பா வருமாறு:
இடை, உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்,
போலியும், மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே (நன்னூல், 239)“இடைச்சொற்கள், உரிச்சொற்கள், வடசொற்கள் ஆகியவற்றிற்கு உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் சொல்லப்பட்ட தோன்றல், திரிதல், கெடுதல், இயல்பாதல் என்னும் புணர்ச்சி இலக்கணங்களைக் கொள்ளாமல் வேறுபட்டு வருவனவற்றையும் இலக்கணப்போலிச் சொற்களையும், மரூஉச்சொற்களையும் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கும் முறைமைக்குப் பொருந்துமாறு கூட்டி முடித்தல், அறிவுடையோர் எல்லோர்க்கும் முறை ஆகும்” என்பது இந்நூற்பாவின் பொருள்.
நன்னூலார் இந்நூற்பாவில் கூறும் கருத்துகளைச் சான்றுடன் காண்போம்.
- இடைச்சொற்கள்
சான்று:
ஒன்று + அன் + கூட்டம் > ஒன்றன் + கூட்டம் = ஒன்றன்கூட்டம்
வண்டு + இன் + கால் > வண்டின் + கால் = வண்டின்கால்இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை. ஒன்றன் கூட்டம் – ஒரே பொருளினது கூட்டம்; வண்டின்கால் – வண்டினது கால்.
வேற்றுமைப் புணர்ச்சியில், ணன வல்லினம் வரட்டறவும் (நன்னூல், 209) என்ற விதிப்படி, நிலைமொழி ஈற்று னகரமெய், வருமொழி முதலில் வல்லினம் வரின் றகர மெய்யாக வேண்டும். இவ்விதிப்படி,
ஒன்றன் + கூட்டம் = ஒன்றற்கூட்டம்
வண்டின் + கால் = வண்டிற்கால்என வரவேண்டும். ஆனால் இந்நிலைமொழிகளின் ஈற்றில் உள்ள அன், இன் என்பன சாரியைகள் ஆகும். சாரியைகள் இடைச்சொற்கள் ஆதலால், அவை இவ்விதியைக் கொள்ளாமல்.
ஒன்றன் கூட்டம், வண்டின்கால்
என இயல்பாகப் புணர்ந்தன.
- உரிச்சொற்கள்
சான்று :
நனி + பேதை = நனிபேதை (மிகவும் பேதை)
மழ + களிறு = மழகளிறு (இளமையான களிறு)நனி, மழ என்பன உரிச்சொற்கள். உயிர் ஈற்று உரிச்சொற்கள். உயிர் ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின்,
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க, ச, த, ப மிகும் (நன்னூல், 165)என்ற விதிப்படி இச்சொற்கள் ,
நனி + பேதை = நனிப்பேதை
மழ + களிறு = மழக்களிறுஎன வல்லினம் மிகுந்து வரவேண்டும். ஆனால் நனி என்பது மிகுதி என்னும் பொருளையும், மழ என்பது இளமை என்னும் பொருளையும் உணர்த்தும் உரிச்சொற்கள் ஆதலால், இவை இவ்விதியைக் கொள்ளாது,
நனிபேதை, மழகளிறு
என வல்லினம் மிகாது இயல்பாகப் புணர்ந்தன.
- வடசொற்கள்
சான்று:
இதயம் + கமலம் = இதய கமலம்
உதயம் + தாரகை = உதய தாரகை(இதயம் – உள்ளம்; கமலம் – தாமரை ; உதயம் – விடிதல்; தாரகை – வெள்ளி நட்சத்திரம்; உதயதாரகை – விடிவெள்ளி)
இவை மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் (நன்னூல், 219) என்ற விதிப்படி, இதயக் கமலம், உதயத் தாரகை என வரவேண்டும். ஆனால் மகர ஈறு கெட்டாலும், இவை வடசொற்கள் ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இயல்பாகப் புணர்ந்தன. ஆதிபகவன், உதய சூரியன் போன்றவற்றிலும் வடசொற்கள் இயல்பாகப் புணர்ந்தமை காணலாம்.
- இலக்கணப் போலிச் சொற்கள்
இலக்கணம் இல்லாதனவாயினும், இலக்கணம் உடையது போலச் சான்றோர்களால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவரும் சொற்கள் இலக்கணப் போலிச் சொற்கள் எனப்படும். சான்று: இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுதல்.
இல்முன் > முன் + இல் = முன்றில்
இதில் சொற்கள் முன்பின்னாக மாறிப் புணர்ந்துள்ளதால் இலக்கணப்போலி என்றனர். முன் + இல் என்பது,
தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல், 205)
என்ற விதிப்படி முன்னில் என வரவேண்டும். ஆனால் இது இலக்கணப்போலி ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இடையில் றகரமெய் பெற்று முன்றில் என முடிந்தது.
- மரூஉச் சொற்கள்
தொன்றுதொட்டு வருதலின்றி இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து தானே மருவி வழங்கும் சொற்கள் மரூஉச் சொற்கள் எனப்படும். சான்றாக அருமருந்தன்ன என்பதை அருமந்த என்று கூறுதலைச் சொல்லலாம்.
அருமை + மருந்து + அன்ன = அருமருந்தன்ன
என வரவேண்டும். ஆனால் இது அருமந்த எனவருகிறது. மருந்து + அன்ன என்பது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் (நன்னூல், 164) என்ற விதிப்படி மருந்தன்ன என்று வாராமல், சில எழுத்துகள் கெட்டு (நீங்கி) மந்த என்று அமைந்து வழங்குகிறது.
மேலே கூறியவற்றைப் போல, கூறப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறாக ஒரு காரணம் பற்றி வேறொரு புணர்ச்சியுடன் அமைவனவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்பது நன்னூலார் கருத்து. இதனை அடியொற்றியே இன்று கற்றறிந்த அறிஞர்கள் கூட, எழுத்துத் தமிழில், வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துக் ‘கள்’ என்னும் விகுதியைச் சேர்த்து எழுதும்போது, ‘வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வரும் வல்லினம் மிகும்’ என்ற நன்னூல் விதிப்படி,
கருத்து + கள் = கருத்துக்கள்
எழுத்து + கள் = எழுத்துக்கள்என்று வல்லினம் மிகுமாறு எழுதாமல்,
கருத்து + கள் = கருத்துகள்
எழுத்து + கள் = எழுத்துகள்என வல்லினம் மிகாமல் எழுதி வருகின்றனர். வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் முன்னர் வரும் ‘கள்’ என்னும் பன்மை விகுதி இடைச்சொல்லாதலால் நன்னூலார் கூறிய புறனடை நூற்பாவின்படி, கருத்துகள் என வல்லினம் மிகாமல் இயல்பாக எழுதுவது ஏற்புடையதே ஆகும்.