தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்-1.6 சமுதாயமும் பண்பாடும்

  • 1.6 சமுதாயமும் பண்பாடும்

    c03110ad.gif (1294 bytes)

    அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், அரசியல், சமூக மாற்றங்களினாலும் உலகம் முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், சில நாடுகள், தங்களது, பண்பாடுகளைத் தனித் தன்மையுடன் பாதுகாத்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, திபேத்திலுள்ள திபேத்தியர்கள், தங்கள் பழைய பண்பாட்டை, இன்றைக்கும் தனித்தன்மை கெடாதவாறு பாதுகாத்து வருகின்றனர்.

    1.6.1 பன்முகப் பண்பாடு (Multiculture)

    இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும், வணிகம், அலுவலகப்பணி ஆகியவை மிகுந்த நகரங்களிலும் பல நாட்டவர்களும், பல மாநிலத்தவரும் வந்து குடியேறியமையால், பல நாட்டுப் பண்பாடுகளும் கலந்துள்ளன. எனவே, பல நாட்டுப் பண்பாடுகளின் சங்கமமாக, அந்த நாடுகளின் பண்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அத்தகைய பண்பாட்டைப் பன்முகப் பண்பாடு என்று அழைக்கின்றனர்.

    1.6.2 ஒன்றுபடும் பண்பாடு

    அரசியல், பொருளாதாரம், வணிகம் போன்ற காரணங்களுக்காக வேற்று நாடுகளின் குடியேற்றங்கள் (Migration) பல நாடுகளில் ஏற்பட்டன. அவ்வாறு வந்தடைந்த நாடுகளில், எதனுடைய பண்பாடு செல்வாக்குப் பெற்றிருந்ததோ, அதன் பண்பாட்டுக் கூறுகளோடு பிற பண்பாட்டுக் கூறுகள் ஒன்றிப் பிணைந்த (assimilated) ஒரு புதுவகைப் பண்பாடு தோன்றுகிறது.

    தமிழரும் பிறரும்

    தமிழ்நாட்டில், நாயக்கர் காலத்திலும், மராட்டியர் காலத்திலும், அரசியல் படையெடுப்புகளைத் தொடர்ந்து வந்து குடியேறிய தெலுங்கர்கள், மராட்டியர்கள் போன்றவர், இன்று, இனம் பிரித்து அறியாதவாறு, பெரும் அளவில் தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிவிட்டனர்.

    1.6.3 உலகத் தமிழரும் தமிழ்ப் பண்பாடு

    மேற்குறிப்பிட்டவாறு, குடியேறியவர்களில் சிலர், சில நாடுகளில், குடியேறிய நாட்டுப் பண்பாடுடன் ஒன்று பட்டாலும், தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் (Individual Identity) காப்பாற்றி வருகின்றனர். உலகநாடுகள் பலவற்றில் குடியேறிய சீக்கியர்கள் இன்றளவும் தங்கள் பண்பாட்டைப் பாதுகாத்து வருகின்றனர்.

  • புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்
  • தமிழர்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தாம் வாழும் பகுதிகளில், தாய்த் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் பாதுகாத்துப் பின்பற்றி வருகின்றனர்.

    உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், தங்களை அடையாளம் காட்டவும், தங்கள் தனித்தன்மையைப் புலப்படுத்தவும், தங்கள் பண்பாட்டுப் பெருமையை உணர்ந்து பெருமைப்படவும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை இன்றளவும் போற்றி வளர்த்து வருகின்றனர்.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் முருகன் வழிபாடும், முருகன் கோயில்களும் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன. சிறு தெய்வங்களாகிய, மாரியம்மன் வழிபாடும், பச்சையம்மன் வழிபாடும், காவடி எடுத்தல் போன்ற சமயச் சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. தாங்கள் குடியேறிய நாடுகளில் கூட, திருநெல்வேலி, சேலம் போன்ற தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களையே இட்டுள்ளனர். தாமும் தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளனர். இவ்வாறு, பிறநாடுகளிலும் தங்கள் பண்பாட்டைப் பெரும் அளவில் பாதுகாத்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுவதும், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பதும், விழாக்காலங்களில், தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளாகிய, புடவை அணிதல், பூச்சூடுதல், வேட்டி கட்டுதல், பூசை செய்தல் போன்றவற்றால் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையைக் காத்து வருகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 12:40:55(இந்திய நேரம்)