தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.7 தொகுப்புரை

 • 4.7 தொகுப்புரை

  தமிழ் மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக, அமைந்துள்ளவை பல. அவற்றுள் இலக்கியம் சிறப்பு வாய்ந்தது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள், காதலர்களிடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றன. மேலும் தம் வறுமை நிலையிலும் மானத்தோடு வாழ விரும்பும் மக்களையும் எடுத்துக் காட்டுகின்றன. சாதி சமய வேறுபாடு இன்றி உலகிலுள்ள அனைவரும் உறவினரே என்று எண்ணும் தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும் புலப்படுத்துகின்றன. பிறருக்குத் தீமை செய்ய நினைத்தால், தனக்கும் தீமை விளையும். எனவே பிறருக்கு நன்மை செய்யுங்கள். இத்தகைய பரந்த மனப்பான்மையும், சுயநலமில்லாத பொதுநலமும் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற தமிழர்களின் மனப்பக்குவத்தையும் அதன் வெளிப்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

  இலக்கியங்களைப் போல, தமிழர்களின் கலைகளும் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன. மனிதனின் அழகு உணர்ச்சியையும், முயற்சியையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கட்டடக்கலை தமிழர்களின் பண்பாட்டிற்கு உரிய சிறந்த சான்று. எடுத்துக்காட்டாகத் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருஉடையார் கோயிலும், பிற ஓவியங்களும் தமிழர் பண்பாட்டிற்குச் சான்று பகர்கின்றன.

  அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், மெய்க்கீர்த்திகள் ஆகியவையும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. அகழ்வாராய்ச்சியின் மூலம் தொல்பழங்கால மக்களைப் பற்றிய எவ்வகைச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்?

  2. சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று கூறிய தொல்லியல் அறிஞர்கள் யாவர்?

  3. தாழிகளை எதற்குப் பயன்படுத்தினர்?

  4. எந்த இடங்களிலுள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன?

  5. தமிழ்நாட்டில் முதன் முதல் முத்திரை நாணயங்களை வெளியிட்டவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:03(இந்திய நேரம்)