தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5 வளையாபதியும் குண்டலகேசியும்

  • 1.5 வளையாபதியும் குண்டலகேசியும்

    English AudioE

    வளையாபதி ஒரு சமண நூல். குண்டலகேசி ஒரு பௌத்த நூல். இரு சமயங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு இந்நூல்களைப் படைத்தன. “மனமே! நல்ல நெறியில் நின்றால் வீடுபேறு பெறலாம்" என்று வளையாபதி கூறுகின்றது. “குழந்தைப் பருவம் செத்துப் போகின்றது. இளமைப் பருவம் இறந்து போகின்றது. காளைப்பருவம் நீங்கிப் போகின்றது; மூப்பு வருகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் நாம் செத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் இந்த நிலை நினைத்து அழ வேண்டாமா? என்று குண்டலகேசி கேட்கின்றது. வளையாபதியும் குண்டலகேசியும் நிலையாமையினை எடுத்துரைக்கும் நூல்களாகும்.

    1.5.1 வளையாபதி கதை

    நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான். வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம் ஒன்றுபடுகிறது.

    இதுவே வளையாபதியின் கதையென்பர். இக்கதை வளையாபதிக் காப்பியத்திற்கு உரியதில்லை என்பாரும் உள்ளனர்.

    1.5.2 குண்டலகேசி கதை

    Click here to Animate
    குண்டலகேசி-காளன் சந்திப்பு

    பத்திரை என்பவள் ஒரு வணிகர் குலப் பெண். இவள் ஒருநாள் தன் மாளிகையின் மேல் தளத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பந்து தெருவிற்குச் சென்று விடுகிறது. அதை எடுக்கப்போகும் போது தெருவில் அரண்மனைச் சேவகர்கள் காளன் என்ற குற்றவாளியைக் கொலைத் தண்டனை நிறைவேற்றுவதற்காக இழுத்துச் செல்கின்றனர். காளன் தீயவன்; என்றாலும் அழகன். காளனைக் கண்டவுடன் பத்திரை அவனிடம் காதல் கொள்கிறாள். பத்திரையின் தந்தை அரசனிடம் கூறிக் காளனை மீட்டு அவனுக்குப் பத்திரையை மணம் செய்து கொடுக்கிறான். பத்திரையும் காளனும் இனிது வாழ்ந்து வரும்போது ஒருநாள் பத்திரை தன் கணவனை விளையாட்டாக “நீ கள்வன் அல்லவா?" என்று கூறுகிறாள். இதனால் கோபம் கொண்ட காளன் கோபத்தை மறைத்துக் கொண்டு அவளை மலைக்கு அழைத்துப் போகிறான். மலை உச்சிக்குச் சென்றவுடன் அவளைக் கொல்லப் போவதாகச் சொல்கிறான். உடனே அவள் இறக்குமுன் 'உங்களை வலம் வந்து வணங்கிப் பின் இறக்கிறேன்' என்று கூறி வலம் வருவது போல் நடித்து அவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள்.

    பத்திரை பல சமய நீதிகளையும் கற்றுத் துறவு பூண்டு பௌத்த சமயம் சேர்கிறாள். மழிக்கப்பட்ட அவள் கூந்தல் குண்டலம் போலச் சுருண்டு வளர்ந்தது. எனவே அவள் குண்டலகேசி எனப்பட்டாள். இதுவே குண்டலகேசி கூறும் கதை.

    1.5.3 இரு நூல்களும் உணர்த்தும் பண்பாடு

    சமயங்கள் தமிழர் வாழ்வில் மதிப்புப் பெற்ற நிலையை இவ்விரண்டு நூல்களும் காட்டுகின்றன. புண்ணியம் பாவம் பற்றிய கருத்துகள் தமிழர்களிடம் ஆழமாக வேர் கொண்டன. தருக்க முறையால். அதாவது வாதப் பிரதி வாதங்களின் வழியாக, கருத்துகளை நிறுவும் நிலை வளர்ந்தது. மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்து வலிமை கொண்டது. அரசர் குலத்தையே கதைக்குக் கருப் பொருளாய்க் கொண்டிருந்த நிலை மாறியது. பெண்களும் துறவேற்பது என்ற நெறி வளர்ந்தது. இவை இவ்விருநூல்களும் காட்டும் பண்பாட்டுச் செய்திகளாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:43:42(இந்திய நேரம்)