Primary tabs
4.3 நாயன்மார்களும் பண்பாடும்
நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து பலப்பல நற்பண்புகள் அறியப் பெறுகின்றன. குணம் என்ற குன்று ஏறி நின்ற பெரியோர்கள் அவர்கள்!
என்று திருக்குறள் கூறுவது போலத் தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் நல்லனவற்றையே செய்யும் பண்பை நாயன்மார்களிடம் காணலாம். திருக்கோயிலூர் மன்னராக விளங்கியவர் மெய்ப்பொருள் நாயனார். திருநீறு பூசியவர்களைத் தம் மனத்திற்கு உகந்தவர்களாகப் போற்றி வழிபாடு செய்பவர் இவர். இவருடைய பகைவன் முத்தநாதன் மனத்தினுள் இவரை வீழ்த்தும் கருத்துக் கொண்டிருந்தான். அதனால் ஒரு குறுவாளை ஓலைச் சுவடிக்கிடையில் மறைத்து எடுத்துக் கொண்டு, திருநீறுபூசிச் சிவனடியார் போலக் கோலம் கொண்டு நாயனாரைச் சந்தித்தான். இறைவனுக்குரிய மெய்ப்பொருளைக் கற்பிப்பதாகக் கூறிக் குறுவாளால் அவரைக் குத்தினான். அப்போது முத்தநாதனைப் பாய்ந்து கொல்ல வந்த தம் மெய்க்காப்பாளரான தத்தனை, நாயனார் பார்த்தார். "தத்தா இவர் நம்மவர், இவரை இடையூறில்லாமல் செல்ல விடு" என்றார். மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறு, சான்றாண்மைப் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருநாவுக்கரசரைச் சுண்ணாம்பு வேகவைக்கும் அறையில் அடைத்து வைத்தார்கள்; உணவில் நஞ்சு கலந்து கொடுத்தார்கள்; யானையை ஏவிக் கொல்ல முயன்றார்கள்; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தார்கள். எல்லாவற்றிலும் அவர் பிழைத்துக் கொண்டார். தம்மை இவ்வாறெல்லாம் செய்ய ஆணையிட்ட அரசனை அவர் வசை மொழியவில்லை. அரசனுக்கு எதிராக இயக்கம் நடத்தவில்லை. இத்தகைய பண்பாடு நாயன்மார்கள் வாழ்க்கையில் காணப்படுகின்றது.
4.3.1 அப்பரும் சம்பந்தரும்
அப்பரும் சம்பந்தரும்திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர். அப்பர் என்ற பெயரை யார் வழங்கினார் என்பது தெரியுமா? திருஞானசம்பந்தர்தான் திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தார். சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை அப்பர் சுமந்தார். இருவரும் வேதாரணியம் என்ற திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும் மூடவும் பாடினர். திருநாவுக்கரசர் வேளாளர் மரபைச் சார்ந்தவர். திருஞானசம்பந்தர் அந்தணர் குலத்தவர். எனினும் இருவரிடையே வேறுபாடில்லாமல் இருந்தது. இதுவே சைவம் வளர்த்த பண்பாடு.
4.3.2 அப்பரும் அப்பூதியும்
திங்களூர் என்ற ஊரில் அப்பூதி என்று ஒரு அந்தண நாயனார் இருந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் (அப்பர்) பேரன்பு கொண்டிருந்தார். தம் பிள்ளைகளுக்கெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். வீட்டிலுள்ள பொருள்களெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் கொண்டன. திருநாவுக்கரசரின் பெயரால் அறச்சாலைகள் நிறுவினார்; தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தருமம் செய்தார். இவர் அப்பரைப் பார்த்ததில்லை. ஒருநாள் அப்பர் திங்களூருக்கு வந்தார். தம் பெயரே எங்கும் விளங்குவது கண்டார். அப்பூதியை அவருடைய இல்லத்தில் வந்து கண்டார். “உங்களுடைய பெயரில் தருமம் செய்யாமல் வேறொரு பெயரில் தருமம் செய்ய வேண்டிய காரணம் என்ன" என்று கேட்டார். அப்பூதி இதுகேட்டுக் கோபம் கொண்டார். “கல்லில் கட்டிக் கடலில் போட்டபோதும் கரையேறிய அப்பரின் பெருமை அறியாத நீர் யார்" என்று அப்பூதி கேட்டார். பிறகு தம்முன் நிற்பவர் அப்பரே என்று அறிந்து அவரைப் பணிந்தார். அப்பூதியின் அன்பு எல்லை அற்றது. தம் மகனைப் பாம்பு தீண்டி அவன் இறந்த நிலையிலும் அவர் அப்பருக்கு விருந்து செய்யத் தயங்கவில்லை. "பெரியவருக்கு அமுது செய்யும் வேளையில் இவன் இடையூறு செய்தான்" என்று மகனைக் குறித்து எண்ணினார். வருணப் பாகுபாடு இவர்கள் வாழ்க்கையில் மதிப்பு இழந்துவிட்டது.
4.3.3 சுந்தரரும் சேரமான் பெருமாளும்
சுந்தரர்சுந்தரர் இறைவனுடைய தோழர். தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர். சேரமான் பெருமாள் சேரநாட்டு மன்னர். சுந்தரரும் சேரமான் பெருமாளும் நண்பர்கள். நட்பு என்றால் எந்த அளவு என்று காணுங்கள்! சுந்தரருக்கு வான் உலகத்திலிருந்து அழைப்பு வந்தது. சிவபெருமான் சுந்தரரை அழைத்துவர இந்திரனின் வெள்ளை யானையை அனுப்பியிருந்தார்.
சுந்தரரும் சேரமான் பெருமாளும்
சுந்தரர் யானைமீது ஏறியவுடன் தம் மனைவிமார்களை எண்ணவில்லை; தம் நண்பர் சேரமான் பெருமாள் தம்முடன் வரவில்லையே என்று கருதினார். இதனை அறிந்த சேரமான் தம் குதிரையில் ஏறினார். குதிரையின் காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். அந்த அளவில் சேரமான் குதிரை சுந்தரரின் யானையை வலமாகச் சுற்றி அதன் முன்னே சென்றது. இறைவன் பெயர் எதையும் செய்ய வல்லது என்பதை இந்நிகழ்வு காட்டும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
-
இறைவனைக் கடலாக எண்ணியவர்கள் சமயங்களை எப்படி எண்ணினர்?
-
சமயங்கள் தோன்று முன்பு வழிபாட்டு நெறி எப்படி இருந்தது?
-
சைவ சமய மெய்ப்பொருள் யாது?
-
கண்ணப்பரின் அன்பு பற்றிச் சிவபெருமான் கூறியது யாது?
-
அப்பரைப் பார்த்து அவர் யாரென்று அறியாத நிலையில் அப்பூதி என்ன கேட்டார்?
-