தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-1.3 நாயக்கர் கால அரசியல்

  • 1.3 நாயக்கர் கால அரசியல்

    Audio Button

    நாயக்கர் தெலுங்கு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் பழைய தமிழரசர்களின் ஆட்சிமுறையையே பின்பற்றினர். மாலிக்காபூர், குஸ்ருகான், உலூகான் என்ற இசுலாமியத் தளபதிகளின் படையெடுப்பு, கம்பணரின் படையெடுப்பு, பாண்டிய அரசர்களின் தாயாதிப்போர் ஆகியவற்றால் அமைதி இழந்த தென்னாட்டை நாயக்கர் அரசியல், அமைதி நெறிக்குத் திரும்பச் செய்தது. அரசருக்கு அடுத்தபடி தளவாய் என்ற பதவியில் இருப்பவரே அதிக அதிகாரமுடையவர். தலைமை அமைச்சர், படைத்தலைவர் என்ற இருவரின் அதிகாரமும் பெற்றவர் இவர். பெரும்பாலான தளவாய்கள் தெலுங்கு பிராமணர்களே. பிரதானி என்ற பதவி நிதியமைச்சர் பொறுப்புடையது. இவர் அரசின் வரவு செலவுகளைக் கவனிப்பவர். பிரதானிக்கு அடுத்தவர் இராயசம். இவர் அரசின் தலைமைச் செயலாளர் ஆவார். இந்த மூவருமே அரசியல் நடத்திய முக்கிய அதிகாரிகள் ஆவர். இந்த முன்று பதவிகளும் விஜயநகர அரசமைப்பைத் தழுவியவை. என்றாலும் அமைச்சர்களின் கருத்தைக் கேட்டு நடத்தல், குடிமக்கள் தேவையை அறிந்து ஒழுகுதல் ஆகிய பண்புகள் தமிழரசர் பாரம்பரியத்துக்கே உரிய வகையில் நாயக்கர் காலத்திலும் பின்பற்றப் பட்டன. பாளையப்பட்டுகளுக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

    1.3.1 பாளையப்பட்டு ஆட்சி முறை

    மதுரை நாட்டைச் சுற்றிலும் அமைந்த பகுதிகள் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கி.பி. 1535-இல் இந்தப் பாளையப்பட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. பாளையக்காரர்கள், தங்கள் பகுதிக்குரிய ஆட்சியை முழு உரிமையோடு செய்து வந்தனர். மத்திய அரசுக்கும் உதவினர். மதுரை நாயக்க மன்னர்களுக்குப் பாளையக்காரர்கள் உண்மை உடையோராய் இருந்தனர். சிலர் மாறுபட்டபோது போர் உண்டாயிற்று. போர்க்காலத்தில் நாயக்க மன்னருக்குப் பாளையக்காரர்கள் படைகளைக் கொடுத்து உதவினர். கி.பி. 1611-இல் நிகழ்ந்த போரில் எருமைக்கட்டிப் பாளையம் நாயக்க மன்னருக்கு 3000 காலாட்கள், 200 குதிரைகள், 50 யானைகள் தந்து உதவியதாக வைக்கோ பாதிரியார் கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாளையமும் உதவி புரிந்ததால் மத்திய அரசு விரிவுடையதாகத் திகழ்ந்தது. பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், மணியாச்சி, ஊற்றுமலை, சேற்றூர், சிவகிரி, சிங்கம்பட்டி, கோட்டையூர், நிலக்கோட்டை, ஆய்குடி, போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகியன சில பாளையப்பட்டுகளாகும். இப்பாளையக்காரர்களுள் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர்.

    நாயக்கர் ஆட்சி நிர்வாக அமைப்பு

    1.3.2 தலைநகர் மாற்றம்

    நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது. தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால், தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும், தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும், திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார். மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். இவர் மதுரையில் கட்டப்பட்ட திருமலை மகாலின் பெரும்பகுதிகளை இடித்து, அதிலிருந்த சிற்பங்களையும் சித்திர வேலைப்பாடமைந்த பகுதிகளையும் திருச்சிக்குக் கொண்டு வந்தார். மகாலை இடித்துக்கொண்டு வந்த பகுதிகளைக் கொண்டு ஏதும் கட்டவில்லை.

    1.3.3 சிற்றூர் ஆட்சி

    தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன. பாடி, சேரி, பள்ளி, சிறுகுடி, ஊர், பட்டினம், பாக்கம், குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன. இவற்றிற்குப் பதிலாக் கோட்டை, மங்கலம், சமுத்திரம், புரம், குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன. எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை, திருமங்கலம், அம்பாசமுத்திரம், சமயபுரம், பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம். சோழர் காலத்தில் கிராம ஆட்சி, கிராம சபையால் மேற்கொள்ளப்பட்டது. கிராம சபை உரிமையோடு பல செயல்களைச் செய்தது. கோயில்களைப் பாதுகாத்தது. அறநிலையங்களைப் பேணியது; மக்களுக்குக் கடன் உதவி செய்தது. விஜயநகர ஆட்சியில் கிராம ஆட்சி இந்நிலையில் இல்லை. பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராம சபைகள் மறைந்தன. கிராம மணியக்காரர், கணக்கர், தலையாரி ஆகியோரைக் கொண்ட ஆயக்கார நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது. கள்ளர், மறவர் ஆகிய சாதியினர் குடியிருந்த ஊரில் வரிவசூல் செய்த அலுவலர் அம்பலக்காரர் எனப்பட்டார்; மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்தவர் மணியக்காரர் எனப்பட்டார். இவர்கள் வரிப்பணத்தை மாகாண அதிகாரிகளிடம் செலுத்த, அதனை அவ்வதிகாரிகள் பிரதானியிடம் செலுத்துவர். வண்ணார், தட்டார், தச்சர், கருமார் போன்ற கிராமத் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியது.

    அரச வருவாய் வழி

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:00:28(இந்திய நேரம்)