தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐரோப்பியர் வருகை

  • 3.1 ஐரோப்பியர் வருகை

    Audio Button

    மேலை நாட்டுத் தொடர்பு இந்தியாவிற்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. மேற்கிலிருந்து இந்தியாவிற்கு முதல் முதல் வந்தவர் போர்ச்சுக்கீசியர். அவருக்குப்பின் வந்தவர் டச்சுக்காரர். டச்சுக்காரருக்குப் பின்னர் ஆங்கிலேயரும் இறுதியில் பிரெஞ்சுக்காரரும் வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்குரிய சந்தையாக இந்தியாவைக் கருதி வந்தனர். போர்ச்சுக்கீசியர் வாணிகம் செய்யத் தொடங்கி இறுதியில் கோவா, டையூ, டாமன் என்ற மூன்று இந்தியப் பகுதிகளை உடைமையாகக் கொண்டனர். டச்சுக்காரர் எந்த இடத்தையும் தம்வசம் வைத்துக் கொள்ளாமல் அகன்றனர். பிரெஞ்சுக்காரர் இந்தியாவை வெல்லும் முயற்சியில் ஆங்கிலேயரோடு போட்டியிட்டு இறுதியில் சந்திரநாகூர், ஏனம், மாகி, காரைக்கால், புதுச்சேரி என்ற பகுதிகளை மட்டும் கைக்கொண்ட அளவில் நின்றனர். ஆங்கிலேயரோ இந்தியாவில் பெரும்பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர். 1639இல் சென்னை அவர்களுக்குக் கிடைத்தது. படிப்படியாகத் தமிழகம் முழுதும் ஆங்கிலேயர் வசப்பட்டது. உழவு, நெசவு, இரும்பு, சர்க்கரைத் தொழில்கள் ஆங்கிலேயர் வரவால் இந்தியாவில் நசிவடைந்தன. தமிழகமே நலிவுற்றது. கோயம்புத்தூர்ப் பருத்தி இங்கிலாந்தில் ஆடையாகித் தமிழகக் கடைத் தெருவில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது.

    3.1.1 தமிழகத்தில் ஐரோப்பியர்

    c03133rc.jpg (3816 bytes)

    இராபர்ட் கிளைவ்

    தமிழகத்தில் சென்னப்பட்டினம் என அன்று பெயர் பெற்றிருந்த சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் தமிழ்நாடு முழுவதும் தம் ஆட்சியைப் பரப்பினர். ஆர்க்காட்டு நவாபாகிய ராஜா சாகேப்பைத் தோல்வியுறச் செய்ய ஆங்கிலேயர் தமிழரை மதத்தின் பேரால் பிரித்தனர்; சந்தா சாகேப், மகமது அலி என்ற உறவினர் தம்முள் பகை கொள்ளச் செய்தனர். சூழ்ச்சிப் போர்களாலேயே ஆங்கிலேயர் தமிழகத்தை வென்று கைக்கொண்டனர். தமிழர்களிடையே இருந்த ஒற்றுமை இல்லாமையை இராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலத் தளபதி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இன ஒற்றுமை இல்லாமை, மதச்சண்டை, சாதிப் பிரிவினை, தீண்டாமை ஆகியனவே நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்படக் காரணமாயின.

    c03133kb.jpg (5058 bytes)

    கட்டபொம்மன்

    வெள்ளையரை எதிர்த்து வீரமுழக்கம் செய்த வீரபாண்டியக் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கில் இடப்பட்டான்; மருது சகோதரர்களும் கொல்லப்பட்டனர். புலித்தேவர் மறைந்தார். வெள்ளை ஆதிக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றது.

    3.1.2 ஐரோப்பிய ஆட்சிக்கு எதிர்ப்பு

    மருது சகோதரர்கள்

    தமிழகத்தின் குறுநிலப் பகுதிகள் பலவும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டன. வழிவழி வந்த வீரப்பண்பாடு, துப்பாக்கி பீரங்கிப் படைகளின் முன் நிற்க முடியாமல் முனை மழுங்கியது. வீரபாண்டியக் கட்டபொம்மன், புலித்தேவன், மருது சகோதரர்கள் ஆகியோரின் விடுதலை முயற்சிகள் தோல்வி கண்டன. சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையர்களின் சிறையில் கிடந்து நலிந்து துயருற்று இறந்தார். தமிழகத்தின் இந்திய விடுதலைப் போர் வேர் கொண்டு வலுவான அமைப்பைப் பெற்றது. அயல் நாட்டினர் நம்மை ஆள்வதா என்ற உணர்ச்சி அழுத்தம் பெற்றது. துறவிகள், தவசிகள், ஞானியர், கற்ற அறிஞர்கள் ஆகியோர் இந்திய விடுதலை உணர்வை வளர்த்தனர். அவர்களில் சிலர் பணி குறிப்பிடத்தக்கது. திருப்பூர்க் குமரனின் தியாகம் தமிழர்களின் விடுதலைப் போர்வேட்கையை வெளிப்படுத்தியது. ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அந்நிய ஆட்சியை எதிர்த்துக் கப்பலோட்டினார். வெள்ளையர்களால் நாற்பது ஆண்டுச் சிறைவாசம் அளிக்கப் பெற்றார். சிறையில் சிதம்பரனார் செக்கிழுத்தார், கல் உடைத்தார்.

    c03133ra.jpg (7478 bytes)

    இராமலிங்க சுவாமிகள்

    வடலூர் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். சாதி மதம் கடந்த சமரச வாழ்வை உலகுக்கு உரியதாக அறிவுறுத்தியவர். வடநாட்டில் விவேகானந்தரைப் போலவே தமிழகத்தில் இராமலிங்க வள்ளலாரும் 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக' எனப் பாடி அந்நிய ஆட்சியை வெறுத்தார். தமிழ்க்கல்வி, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் வண்ணம் அவர் எழுத்து அமைந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-10-2017 17:07:18(இந்திய நேரம்)