தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    செய்யுள் நூல்களைச் சுவையுணர்ந்து படிக்கவும், சுவை அமையப் படைக்கவும் இலக்கண நூல்கள் இயற்றப்பட்டன. எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் கற்ற பிறகு, இலக்கியத்தின் பாடுபொருள் ஆகின்ற காதலும் வீரமும் குறித்து அறிந்துணரப் பொருளதிகாரத்தைப் படைத்தார் தொல்காப்பியர். அதில் அகத்திணையியல், புறத்திணையியல் போன்றவை செய்யுளுக்குரிய கருத்தைப் (பாடுபொருள்) பற்றி உரைக்கின்றன. செய்யுளியல், கருத்தினை வெளிப் படுத்துவதற்கான செய்யுள் வடிவம் பற்றி விளக்குகின்றது. மெய்ப்பாட்டியல், உவமவியல் போன்றன கருத்தை வடிவமாக்கும்போது கற்போர் விரைந்து புரிந்து கொள்ளவும், சுவையுணர்ந்து உளம் மகிழவும் செய்யுள் அமைக்கப்படும் முறையை எடுத்துரைக்கின்றன. இக்கருத்து, பிற்கால அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, அணி இலக்கண நூல்களுக்கும் பொருந்தும்.

    தண்டியலங்காரம், மிகச் சிறந்த அணி இலக்கண நூலாகத் திகழ்கின்றது. தண்டியலங்காரம் விளக்கும் அணி இலக்கணக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு முன், அவ்வணிகள் அமைந்து விளங்கும் செய்யுள்களின் வகையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    கருத்துக்கும் செய்யுளுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில் செய்யுள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தண்டியலங்காரப் பொதுவணியியல் குறித்தும், அவ்வியலில் கூறப்படும் செய்யுள் வகை குறித்தும் இப்பாடப் பகுதியில் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 18:48:50(இந்திய நேரம்)