தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வைதருப்பம் - உதாரம்

 • 5.1 வைதருப்பம் - உதாரம்

  உதாரம் - பெரியது, மேம்பாடுடையது. ஓதப்படும் செய்யுளின்கண் அதன் சொற்களால் தோன்றும் பொருளேயன்றி வேறு ஒரு பொருளைக் குறிப்பினால் உணர்த்துவது உதாரம் என்னும் குணப்பாங்கு ஆகும். குறிப்பு என்பது புத்தியினால் அறியப்படுவது ஆகும்.

  உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
  குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்
  (தண்டியலங்காரம் : 21)

  பெரிய புராணத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள், அப்பூதியடிகளிடம் ‘மூத்த திருநாவுக்கரசு எங்கே?’ என வினவியபொழுது, அவர், ‘இப்போது இங்கு அவன் உதவான்’ என்று உரைப்பது உதாரம் என்னும் குணப்பாங்கு உடையது. அது அவன் இறந்துபட்ட செய்தியைக் குறிப்பால் உணர்த்துகிறது.

  உதாரம் என்பதற்கான சான்று வருமாறு :

  செருமான வேற்சென்னி தென்உறந்தை யார்தம்
  பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும்
  பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம்
  காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்

  (செரு = போர்
  மான = பெருமை, வலிமை
  தென் = தெற்குத்திசை
  உறந்தை = உறையூர்
  பூதலத்தோர் = ஏனைய உலக மாந்தர்
  தாழ்ந்திரப்போர் = வறுமையால் தாழ்ந்து இரந்து உயிர் வாழ்பவர்கள்
  பொருள் நசை = பொருள் விருப்பம்)

  பொருட்செல்வத்தின் மீது பற்றுடையவர்கள் ஆகி, அவற்றையே குறிக்கோளாகக் கொண்டு இரந்துண்டு வாழும் வறியவர்களின் கண்கள், வெற்றிவேலினை உடையவனும் உறையூரில் தலைமை கொண்டு விளங்குபவனும் ஆகிய சென்னி என்னும் மன்னவனின் இனிய முகத்தைக் கண்ட பின்னர் இவ்வுலகத்தில் உள்ள ஏனையோரைப் பார்க்கமாட்டா.

  இச்செய்யுளில் கண்ணால் நோக்கமாட்டா என்ற பொருள் மேலோட்டமாகத் தென்படுகிறது. எனினும் சோழன் வேண்டிய பொருள் தருதலால் வறுமை என்பது இனி நேராதவர்களாகி, யாரிடத்தும் சென்று பொருள் வேண்டிக் கையேந்தி நிற்க மாட்டார்கள் என்னும் மனத்தால் நோக்குதல் சார்ந்த பொருளைக் குறிப்பால் அளிக்கின்றது.

  சான்று : 2

  அவிழ்ந்த துணியசைக்கும் அம்பலமும் சீக்கும்
  மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து
  நிழல்துழாம் யானை நெடுந்தேர் இரவி
  கழல்தொழா மன்னவர்தம் கை

  (இசைத்தல் = முடித்தல்
  சீத்தல் = துடைத்தல்
  துழாம் = துழாவும்
  இரவி = சூரியன், சூரியகுலத்துச் சோழர்)

  கவிழ்ந்து தன்னுடைய நிழலையே பகைத்து அதனைத் தாக்கத் தும்பிக்கையால் பூமியைத் துழாவும் யானையையும், பெரிய தேரினையும் உடையவன் சூரிய குலத்து வந்த சோழன். அவனிடம் பணிந்து நில்லாமல் பகை கொண்ட மன்னவர்களின் கைகளானவை, உடுக்க வேண்டின் அவிழ்ந்த துணிகளைப் பின்பு முடித்துக் கொண்டும், படுக்க வேண்டின் பொது இடமாகிய அம்பலத்தைத் துடைத்துக் கொண்டும், உணவு இடுவோர் முன்னர் சென்று நின்று யாசித்தல் பொருட்டு மகிழ்வுடன் விரிந்து கொண்டும் நிற்கும்.

  ‘இடுவார் முன்னர் உவகையோடு விரியும்’ என்றதனால் இடாதார் முன்னர் உவகையின்றி விரியும் எனக் கொள்க.

  வைதருப்ப நெறியினரின் உதாரம் குறித்த இந்தக் கருத்தைக் கௌட நெறியினரும் முற்றிலும் ஏற்பர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:39:07(இந்திய நேரம்)