தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வைதருப்பம் - காந்தம்

  • 5.3 வைதருப்பம் - காந்தம்

    ஒன்றைப் புகழ்ந்து கூறும்பொழுது, உலகியல் ஒழுக்கம் மாறுபடாமல் கூறுவது காந்தம் எனப்படும். மனத்தினை மகிழ்விப்பது இதன் இயல்பு எனலாம்.

    உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்
    (தண்டியலங்காரம் : 23)

    உலக ஒழுக்கத்தைக் கடந்து செல்லாத உயர்ந்த புகழினை உடையது காந்தம் என்பது இதன் பொருளாகும்.

    சான்று :

    ஒருபே ருணர்வுடனே ஒண்ணிறையும் தேய
    வரும்ஏது உறவுஎன்பால் வைத்த - ஒருபேதை
    போதுஅளவு வாசப் புரிகுழல்சூழ் வாண்முகத்துக்
    காதளவு நீண்டுஉலவும் கண்

    (நிறை = ஒழுக்க உணர்வு
    தேய
    = கெட
    ஏது
    = ஏதம், குற்றம் (வருந்துதல் என்னும் பொருளது)
    போது = மலர்)

    நறுமண மலரின் வாசனையுடன் விளங்கும் கூந்தலும் ஒளிபொருந்திய முகத்தில் காதளவு நீண்டு உலவுகின்ற கண்களும் உடைய பெண் ஒருத்தி, என்னுடைய உள்ளம் வருந்திப் புலம்புமாறும் நிறையும் உணர்வும் ஒருங்கு கெடுமாறும் வந்து நின்றாள் என்பது இதன் பொருளாகும்.

    இதில் உலக வழக்கு மிகாமல் கற்பனையும் கருத்தும் அமைந்தன. உலக இயல்பைக் கடவாததாக இப்பாடற் கற்பனை உள்ளது. காந்தம் என்பது உலக வழக்கிறந்தது என்பார் கௌடர்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    உதாரம் என்னும் குணப்பாங்கை வரையறுக்க.
    2.
    உய்த்தல்இல் பொருண்மை என்றால் என்ன?
    3.
    வைதருப்ப நெறி கூறும் ‘காந்தம்’ என்னும் குணப்பாங்கைச் சுட்டுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:50:49(இந்திய நேரம்)