தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- இக்கால எழுத்துத்தமிழ்

  • 5.1 இக்கால எழுத்துத்தமிழ்

        கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையுள்ள காலப்பகுதியை இக்காலம் என்றும் இக்கால எழுத்துத்தமிழைத் தற்காலத் தமிழ்    என்றும் அழைக்கலாம். பொதுவாக ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் தமிழ்மொழி வரலாற்றில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி மொழிவரலாற்றிலும் இதனை நன்கு காண முடியும். ஆங்கில மொழியின் செல்வாக்கு இக்காலத்திலே புகுந்து விட்டது எனலாம். சிறுகதை, புதினம், குறுநாவல், பத்திரிகைகள், உரைநடை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ் வீறு கொண்ட ஒரு எழுச்சியுடன் வளரலாயிற்று. இந்நிலையில் தமிழ்மொழியும் நவீன மொழியாக வாழத் தலைப்பட்டது எனலாம். அறிவியல், சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் வளர வளரத் தமிழும் பல்வேறு மாற்றங்களைக் கண்டது எனக் கூறலாம். புதிய புதிய துறைகள், புதிய புதிய கலைச்சொற்கள் போன்ற பல நிலைகளில் தமிழில் மாற்றங்கள் பல ஏற்பட்டன. புதிய புதிய சொல்லாக்கம், துணை வினை முதலானவற்றில் காணப்பட்ட மாற்றம் போன்ற பல வேறுபாடுகளை நன்கு காண முடிகிறது. இதனால் இக்கால எழுத்துத்தமிழை வளரும் தமிழ எனலாம்.

        இக்கால எழுத்துத்தமிழை வரலாற்று மொழியியலார் (Historical linguists) புதுத் தமிழ் என்பர். புதிய தமிழ் என்று கூறுவது புதிய காலத்தில் அதாவது தற்காலத்தில் வழக்கில் இருக்கும் என்று பலர் பொருள் கொள்வர். புதிய     காலம்     என்று கூறும்போது புதிய வழக்கைக் கொண்ட காலம் என்றே பொருள்கொள்ள வேண்டும்.

        இக்கால எழுத்துத்தமிழுக்கான ஒரு சான்றினைப் பற்றிக் காண்போம். பெயர்ச்சொல்லில் ஒருமையில் மாணவன், மாணவி என்று ஆண், பெண் வேறுபாடு இருப்பதால், பன்மையில் மாணவர்கள், மாணவிகள், மாணவ - மாணவிகள என்று பெயர்ச்சொல்லில்     வேறுபடுத்துகிறோம்.     இலக்கணப்படி மாணவர்கள் என்ற ஒரு பன்மை வடிவம் சரியானது. அதுதான் சரி என்றால் இன்றைய வழக்கில் உள்ள மாணவ - மாணவிகள் என்ற பெயர்ச் சொல்லைத் தவறு என்று கூறமுடியுமா?

        இதுபோல் இக்கால எழுத்துத்தமிழ், மொழியின் அமைப்பில் பல புதுமைகளைக் கொண்டுள்ளது.

    இங்கு நாம் காண இருப்பது மொழி பற்றிய உணர்வும், அறிவும் மிகுந்து காணப்படுகின்ற     தற்காலம் பற்றியது. மொழியின் பயன்பாடும் மிகுந்து விட்டதால் தமிழ்மொழியின் இலக்கணம் பற்றிய வாத விவாதங்கள் ஓரளவு நிறையவே இப்போது நடைபெற்று     வருகின்றன எனலாம். அந்த வாதங்கள் பெரும்பான்மையும் பழந்தமிழ் இலக்கண - இலக்கிய நூல்களை ஒட்டியே அமைந்துள்ளன. இந்த    நிலையில் இக்கால எழுத்துத்தமிழின் அமைப்புப் பற்றி மொழியியல் நோக்கில் இங்குஅறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:06:48(இந்திய நேரம்)