Primary tabs
-
பாடம் - 2D04112 எழுத்து வருகை வரலாறு
இப்பாடம் எழுத்து வருகை (phonemic distribution) என்பது பற்றி விளக்குகிறது. ஒரு சொல்லில் ஓர் எழுத்தானது எவ்வாறான இடங்களில் (முதல், இடை, கடை) அமைந்து வருகின்றது என்று தெரிவிக்கிறது. மெய் எழுத்துகள் எவ்வாறான உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வருகின்றன என்றும் விளக்குகிறது.
சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய முக்காலங்களிலும் அனைத்து உயிர் எழுத்துகளும் மொழிமுதலில் வருகின்றன என்றும், குறிப்பிட்ட மெய் எழுத்துகள் மட்டும் மொழியின் இறுதியில் வருகின்றன என்றும் விளக்குகிறது.
இடைக்காலத்தில் கிரந்த எழுத்துகள் தமிழில் புகுந்தமையை விளக்கிக் காட்டுகிறது. தற்காலத்தில் பிறமொழிச் சொற்கள் அதிகமாகத் தமிழில் கலந்துவிட்டதால் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கு அதிகமானது பற்றியும், அவற்றின் வருகையைப் பற்றியும் நன்கு விளக்குகிறது.
இவற்றுடன் தற்காலத் தமிழை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளையும் குறிப்பிடுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தின் மூலம் என்னென்ன எழுத்துகள் மொழிமுதல் வருகின்றன, என்னென்ன எழுத்துகள் மொழி இறுதியில் வருகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
-
சங்க காலத்தில் இருந்த மொழிமுதல் எழுத்துகளுடன் வேறு எழுத்துகள் சேர்ந்து பிற்காலத்தில் மொழிமுதல் ஆக வருகின்றனவா என்பதைப் பற்றி அறியலாம்.
-
ஒரே மெய் எழுத்து மொழிமுதலில் வரும்போது ஓர் எழுத்தாகவும், மொழி இடையில் வரும்போது இன்னொரு எழுத்தாகவும் பயன்படுகிறது என்பது பற்றி அறியலாம்.
-
சங்க காலத்தில் /ந்/ என்ற மெய் எழுத்து மொழியின் இறுதியில் அமைந்து இருந்தது பற்றியும் அவ்வெழுத்தின் வருகை இடைக்காலத்தில் வழக்கு ஒழிந்தது பற்றியும் அறிய முடியும்.
-
பிற மொழிச் சொற்கள் இடைக்காலத்தில் இலக்கியங்கள் வாயிலாகப் புகுந்தன என்றும், அச்சொற்களில் உள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள் என்றும் அறிந்துகொள்ள முடியும்.
-
கிரந்த எழுத்துகள் தமிழ்மொழி வரலாற்றில் எந்நிலையில் வரலாயின என்ற செய்தியைச் சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
-
இவற்றோடு தற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் அதிகமாகப் பயன்படத் தொடங்கியதால் புதிய புதிய மெய் மயக்கங்கள் தமிழ்ச் சொற்களில் ஏற்படலாயிற்று என்பதை அறிந்து கொள்ளலாம்.
-
சங்ககாலத்தில் மொழியின் இறுதியில் வராத மெய் எழுத்துகள் தற்காலத்தில் மொழியின் இறுதியில் வருகின்றன என்று அறிந்துகொள்ளலாம்.
-