தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04112-தற்காலத் தமிழ் இயல்பு

  • 2.4 தற்காலத் தமிழ் இயல்பு

        தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கணப் பாரம்பரியம் இருப்பதால் தற்காலத் தமிழை அடையாளம் காண்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

        மொழி, அடிப்படையாகப் பேச்சையே குறிக்கும். அது கட்டமைப்பும் ஒழுங்கும் உடையது. இருப்பினும் வட்டாரம், சமூகம், தொழில் முறை, சூழல் ஆகியவற்றால் மாறுபடக் கூடியது மொழி. பரந்து விரிந்து கிடக்கும் நிலப் பரப்பில் பேசப்படும் போது பல வட்டாரங்கள், பல சமூகங்கள், பல தொழில்கள் என்று புறப்பட்டு அரசியல், வணிகம், பொருளாதாரச் செயல்பாடு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் இயல்புடையது மொழி. குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் உள்ள மக்களின் மொழி, பிற வட்டார மக்களாலும் பிற சமூகங்களாலும் பின்பற்றப்படும் நிலை ஏற்படும்.

        தற்காலத்     தமிழில் அமைந்துள்ள கதைகளில் கதைமாந்தர்களின் உரையாடலாக வரும் பேச்சுமொழியின் பயன், செயல்பாடு பற்றி ஆராய்வது அந்த மாந்தர்களைப் பற்றி மட்டும் அல்லாமல் படைப்பாளியைப் பற்றியும் பல உண்மைகளைப் புலப்படுத்தும் பாங்கு உடையது.

        சமூக மொழியியலார் (socio - linguists) கூறும் குறிக் கலப்பு (code mixing), குறித்தாவல் (code switching) என்ற இருவகைக் கருத்துகளைப் பயன்படுத்தி நாவல், சிறுகதை ஆகியவற்றில் கதைமாந்தர்களின் பேச்சில் வரும் பிறமொழிச் சொற்கள் அவர்களின் மனப்பாங்கைப் பிரதிபலிப்பதாக விளக்கமுடியும். சான்றாக ‘சேஞ்ச்’     (change)     என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழ் எழுத்துகளில்     அப்படியே பயன்படுத்துகின்றனர். இதனை ஒலிபெயர்ப்பு (transliteration) எனலாம். இவ்வாறு எழுதுவதால் கதாபாத்திரத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது என்று படைப்பாளிகள் கூறுகின்றனர்.

        தற்காலத் தமிழ், சமுதாயத்தின் பயன்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது. தமிழ் இலக்கணப்படி ‘பலர்பால்’ என்பது ஆண் பன்மையையும், பெண் பன்மையையும், ஆண்-பெண் பன்மையையும் குறிக்கும். ஏனென்றால் அந்த மூன்று வகைப் பெயர்ச் சொற்களுக்கும் ஒரே விகுதியைத்தான் வினைமுற்றுச் சொல்லில் கையாளுகிறோம் வந்தனர் அல்லது வந்தார்கள்). அதுபோன்று பெயர்ச் சொல்லில் ஒருமையில் மாணவன், மாணவி என்று ஆண்-பெண் வேறுபாடு இருப்பதால் பன்மையில் மாணவர்கள், மாணவிகள், மாணவ- மாணவிகள் என்று பெயர்ச்சொல்லில் வேறுபடுத்துகிறோம். இலக்கணப்படி ‘மாணவர்கள்’ என்ற ஒரு பன்மை வடிவமே சரியானது என்று ஒருவர் வாதாடினால் இன்றைய வழக்கைத் தவறு என்பதா?

        தற்காலத் தமிழில் நகரமும், னகரமும் ஒன்றாகியுள்ளது எனலாம். எவ்வாறு எனில் சொல்லுக்கு முதலில் வரும்போது நகரமாகவும், இடையில் வரும்போது னகரமாகவும் எழுதப்பட்டு வருகிறது. இக்காலத்தில் நகரம், னகரம் இரண்டனுக்கும் உச்சரிப்பில் வேறுபாடு காண முடியவில்லை. இவ்விரண்டையும் ஒரே விதமாக உச்சரிக்கின்றனர்.

        பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பதாலும் பழைய இலக்கணவிதிகளுக்கு மாறுபட்டு அமைந்திருப்பதாலும் குறிப்பிட்ட ஒலிகளை உச்சரிப்பதில் வேறுபாடு காண முடியாததாலும் தற்காலத் தமிழ் முந்தைய தமிழை விடப் பலவிதமான மாற்றங்களுடன் காணப்படுகின்றது. இத் தமிழையே தற்காலத்தமிழ் என்கிறோம். மொழியைப் பல துறைகளில் பயன்படுத்துவதால் அவர் அவர்களுக்கு     ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் மாற்றங்களைத் தடுப்பது என்பதோ முடியாத காரியமாகிறது. இதனைப் பெரும்பாலோர் பின்னர்ப் பயன்படுத்துவதால் அதுவே நிலைத்து நின்றுவிடுகிறது. இதனையே மு. வரதராசனார் கூறும்போது,

        ‘பழைய இலக்கியங்களைக் கற்றுத்     திகழும் சிலரும் அழகிய செறிவான     நடையைப் போற்றித் திகழும்     சிலரும் எவ்வளவுதான் தடுத்து     நின்றபோதிலும் பெரும்பாலோராகிய     இவர்களின் போக்கிலேயே மொழி     செல்லும். தடைகள் ஒருசிலகாலம்     ஈர்த்துப் பிடித்து நிறுத்தலாம்.     இறுதியில் வெற்றி பெறுவது பெரும்-     பாலோரின் போக்கே ஆகும்’

    என்று கூறுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:02:17(இந்திய நேரம்)