Primary tabs
5.2 எழுத்தில் மாற்றம்
இக்கால எழுத்துத்தமிழில் எழுத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன. எழுத் தின் எண்ணிக்கை, எழுத்தின் வருகை முறை, எழுத்துப் புணர்ச்சி, சொல்லெழுத்து ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும், ஒரு சில எழுத்துகளின் வடிவங்களைப் பொறுத்தவரை அவை சீர்திருத்தம் செய்யப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தது பற்றியும் இங்கே விரிவாகக் காண்போம்.
எழுத்தின் எண்ணிக்கை என்பது இக்காலத்தமிழில் எத்தனை எழுத்துகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதைக் குறிக்கிறது. அவ்வெழுத்தின் எண்ணிக்கை அம்மொழியின் ஒலியன் (phoneme) அமைப்பைப் பொறுத்து அமையும். தமிழில் பல்துறை நூல்கள் வருகின்றன. அதோடு மொழியைக் கல்விமொழி என்றும் ஆட்சிமொழி என்றும், நீதிமொழி என்றும் பிரித்துப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான காரணங்களால் பழங்காலத் தமிழிலிருந்து இக்காலத்தமிழில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது.
தொல்காப்பியர் எழுத்துகளின் எண்ணிக்கையை மொத்தம் 30 எனச் சுட்டியுள்ளார்.
எழுத்து எனப் படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
(தொல்.எழுத்து.1)கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குள் எழுத்தின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் 31 ஆக உயர்ந்தது. ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் 31 எழுத்துகளின் கூட்டு வடிவம் 247. இவற்றோடு கல்வெட்டு எழுத்துகள் என்று சொல்லக்கூடிய (ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ்) 5 கிரந்த எழுத்துகளும் அவற்றின் கூட்டு வடிவம் 60ம் ‘ஸ்ரீ’ என்னும் ஓர் எழுத்தும் சேர்ந்து வரத் தொடங்கியுள்ளன. இவ்வெண்ணிக்கை ஒரு சில காரணங்களால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற சூழல் இருப்பது தெரியவருகிறது. ஏனெனில் சிலர் குரல் உடை ஒலி எழுத்தினைத் (voiced sound) தடித்த எழுத்தில் எழுதி வருகின்றனர். அதனை வைத்துப் பார்க்கும்போது எழுத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
இக்கால எழுத்துத்தமிழில் எழுத்துகளின் வருகை முறை (phonemic distribution) பழங்காலத்தமிழில் இருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றது. தமிழ்மொழியில் ஏற்கனவே சமஸ்கிருதச் சொற்கள் கலந்துவிட்டன. தொல்காப்பியர் சமஸ்கிருத மொழியை வடமொழி என்றார். அன்று முதல் இன்று வரை பல்வேறு அரசியல், ஆட்சி மாற்றத்தினால் பல மொழிகள் தமிழில் கலந்துவிட்டன. பழங்காலத்தமிழில் அவ்வாறான வேற்றுமொழிச் சொற்களையும், பேச்சுவழக்கில் உள்ள சொற்களையும் இழிவானவை என்று எண்ணி அதிகமாகப் பயன்படுத்தாமல் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக இக்கால எழுத்துத்தமிழில் பிறமொழிச் சொற்களையும், பேச்சுவழக்குச் சொற்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தி வருவதால் பல வகையான எழுத்துகள் தமிழில் கையாளப்படத் தொடங்கின. தனி ஒரு மரபினைக் கொண்ட தமிழ்மொழியில் வேற்றுமொழிச் சொற்கள், பேச்சுத் தமிழ் இவற்றின் ஆதிக்கத்தினால் எழுத்தின் வருகையில் புதுவிதமான அடையாளங்கள் தோன்றலாயின.தமிழ் மரபுப்படி இன்ன எழுத்து இன்ன இடங்களில்தான் வரும் என்ற நிலைமை மாறியது. ட், ர், ல் போன்ற மெய் எழுத்துகள் சொல்லின் முதலில் வருவதைக் காணமுடிகிறது. மேலும் இரு வேறு மெய்கள்(consonant cluster) பழைய எழுத்து வருகை முறையை மீறிச் சேர்ந்து வரலாயின.
சான்று:
‘-ஸ்ர்’ - ‘இஸ்ரேல்’
‘-ட்ஜ்’ - ‘லாட்ஜ்’
‘-க்த்’ - ‘பாக்தாத்’இது போன்று இன்னும் பலதரப்பட்ட மெய் எழுத்துகளின் வருகை அதிகமாக இக்காலத் தமிழில் காணப்படுகின்றது.
இக்காலத் தமிழில், பழந்தமிழில் இல்லாத புணர்ச்சி விதிகள் வரலாயின. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் ஒன்றாகச் சேருவதைப் புணர்ச்சி என்பர்.
சான்று:
‘மரம் + கள் = மரங்கள்’
இப்பொழுது நாம் காண இருப்பது புதுவகையான புணர்ச்சி பற்றி ஆகும். கல்வெட்டு எழுத்துகளில் ஒன்றான ‘ஸ்’ என்பது சொல்லின் இறுதியில் வரும்போது /ஸ்/ ஆகவும், சொல்லின் இடையில் வரும்போது /ச்/ ஆகவும் வருகிறது. இது பற்றி முந்தைய பாடத்தில் பார்த்தோம்.
சான்று:
‘போலீஸ்’
‘போலீசுக்காரர்’இதுபோன்றே இன்னொரு புதிய புணர்ச்சி விதி இக்காலத்தமிழில் வருகிறது. பிறமொழிச்சொல்லை அவ்வுச்சரிப்பின்படியே தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதுவதால் இப்புணர்ச்சி விதி வருகிறது.
சான்று:
‘அருண்சிங்’
‘சரண்சிங்’இந்த /ங்/ என்ற மெய், சொல்லின் இறுதியில் பழங்காலத்திலும், இடைக்காலத்திலும் வருவது கிடையாது. ஆனால் தற்காலத்தில் இம் மெய் சொல்லின் இறுதியில் வருகிறது. இது ஒரு புது வருகை எனலாம். இந்த /ங்/ உடன் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு சேரும்போது இடையில் /க்/ என்ற மெய் வருகிறது.
சான்று:
‘சிங் + ஐ = சிங்கை’
‘சிங் + இடம் = சிங்கிடம்’பொதுவாக மகர ஈற்றுச் சொற்களுடன் பன்மை விகுதி ஆகிய ‘- கள்’ சேர்ந்தால் அம்மகர மெய் /ங்/ என்ற மெய்யாக மாறுகிறது என முன்பே கண்டோம். ஆனால் ‘முகாம்’, ‘ரீம்’ போன்ற பிறமொழிச்சொற்கள் மகரத்தில் முடிந்தாலும் அவற்றுடன் ‘கள்’ விகுதி சேரும்போது எவ்வித மாற்றமும் நிகழாமல் இயல்பாக அமைந்து வருகின்றன. இது ஒரு புதிய புணர்ச்சி விதியாகும்.
சான்று:
‘முகாம் + கள் = முகாம்கள்’
‘ரீம் + கள் = ரீம்கள்’இவை போன்ற புதிய புதிய புணர்ச்சி விதிகள், எழுத்தின் வருகை ஆகியன இக்கால எழுத்துத்தமிழில் காணப்படுகின்றன.
ஒருசொல்லை எந்தெந்த எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று கூறுவது சொல்லெழுத்து ஆகும். பழங்காலத் தமிழிலும் இடைக்காலத் தமிழிலும் ‘நீயிர்’ என்னும் முன்னிலைப் பன்மைச் சொல்லை ‘நீர்’ என்றும், ‘பொழுது’ என்ற சொல்லைப் ‘போது’ என்றும் எழுதி வந்தனர். இவையாவும் சொல்லெழுத்து முறையில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கும். இக்கால எழுத்துத்தமிழிலும் சொல்லெழுத்து முறையில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன; நடைபெற்று வருகின்றன.
இடைக்காலத் தமிழில் ‘ஆநந்தம்’, ‘அநுபவம்’, ‘விநாயகர்’ என்று நகரம் அமைந்து வந்தது. இக்காலப் பேச்சுவழக்கில் நகரத்திற்கும், னகரத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்படாததால் நகரத்தை னகரமாகவே பலர் எழுதி வருகின்றனர்.
சான்று:
‘ஆநந்தம் - ஆனந்தம்’
‘அநுபவம் - அனுபவம்’
‘விநாயகர் - வினாயகர்’அவ்வாறே ‘எழுத்துக்கள், அமைப்புக்கள்’ என்ற சொற்களில் ககரம் இரட்டித்து அதாவது இரட்டை வல்லெழுத்தாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுதப்பட்டு வந்தது. ஆனால் அந்நிலை மாறி இன்றையளவில் பலராலும் ‘எழுத்துகள்’, ‘அமைப்புகள்’ என்று ககரம் ஒற்றை வல்லெழுத்தாகவே எழுதப்பட்டு வருகின்றது.
இதே போலப் ‘பத்திரிக்கை’, ‘அண்ணாத்துரை’ என்னும் சொற்களும் ‘பத்திரிகை’, ‘அண்ணாதுரை’ என்று ஒற்றை வல்லெழுத்தால் எழுதப்பட்டு வருகின்றன.
பழந்தமிழில் எழுத்தின் வடிவத்தை ஒரு வரையறை செய்து பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இக்கால எழுத்துத் தமிழில் ஒரு சில எழுத்துகளைப் பொறுத்தவரை, அவற்றிற்கு உரிய பழைய எழுத்து வடிவங்களைச் சிறிது மாற்றி, புதிய எழுத்து வடிவங்களைத் தந்து தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஆவார். அவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பின்வருமாறு:
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்று, ஆணை பிறப்பித்து 1978 இல் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.