தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பழந்தமிழ் இலக்கண நூல்களில் சொல்லும் பொருளும்

  • 1.2 பழந்தமிழ் இலக்கண நூல்களில் சொல்லும் பொருளும்

    மொழியானது இரண்டு கூறுகளின் அடிப்படையில் செயல்படக்கூடியது. ஒன்று சொன்மை அடிப்படை; மற்றொன்று பொருண்மை அடிப்படை. ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடரமைப்புகள் இவற்றை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். இச் சொற்களும், தொடர்களும் பொருளை உணர்த்த, இதனடிப்படையில் பொருண்மை உண்டாகும். இக்கருத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

    “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
    சொல்லி னாகும் என்மனார் புலவர்”

    (சொல். பெயரியல்: 2)

    என்று இவ்விரு கூறுகளையும் புலப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு சொல் சொல்லாகிய தன்னையும் குறிக்கும்; தான் குறிப்பிடும் பொருளையும் குறிக்கும்.

    எ.கா:

    அவள், இவள் என்னும் சொற்கள் சொல்லின் வடிவத்தை (form) உணர்த்துகின்றன: தாம் யாரைக்குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டவில்லை. குறிஞ்சி என்பது குறிஞ்சி என்னும் தன்பெயரையும், குறிஞ்சியாகிய நிலத்தையும் குறிப்பிடுகிறது. இவ்வாறே பாணன் என்ற சொல்லும் தன்பெயரையும் குடிப்பெயரையும் குறிக்கிறது

    சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மை வாய்ந்தன அல்லவா? இக்கருத்தையும் பெயரியல் முதல் நூற்பாவில்,

    “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

    (சொல். பெயரியல் : 1)

    என்று சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைத்தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மையைக் குறித்து ஆராயும் இயலை, சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (semantics) என்று வழங்கலாம்.

    பொருண்மையியல் என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையாகும். சொல்லின் பொருள் என்பது மொழியின் ஒரு கூறாகும். எனவே, பொருண்மையியலை மொழியியலின் ஒரு கூறாகக் கூறலாம். மனிதன் மொழியின் மீது எப்போதும் ஆர்வம் கொண்டவனாக விளங்குகிறான். மொழியியல் குறியீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதில் நாட்டம் கொண்டவனாகக் காணப்படுகிறான். பல்வேறு கோணங்களில் இருந்து இப்பொருண்மையியல் கூறுகள் குறித்த பல்வேறு அணுகுமுறைகள் தொன்றுதொட்டு எவ்வாறு பழைய இலக்கண நூல்களில் விளக்கப்பட்டு வருகின்றன என்பதை நோக்குவோம்.

    எச்சொல்லும் தனியாக இருக்கும்போது ஒரு பொருளையும், சூழலில் பல்வேறு பொருட்களையும் உணர்த்தி நிற்கும். அதுபோல, பல சூழ்நிலைகளிலும், கருத்துகளிலும் பயன்படுத்தும் பொதுவான சொற்கள் சில, அவை இடம்பெறக்கூடிய இடத்தை ஒட்டியே பொருளைத் தெளிவாக உணர்த்தும். எனவே, ஒரு சொல் தன் பொருளை உணர்த்துவதற்கு அதன் அமைப்பும், அதன் தொடர்நிலை அமைப்பும், அது அமையும் சூழலும் காரணங்களாக அமைகின்றன. இப்பொருளைத் தெளிவுற அறிவதற்குச் சூழல் அடிப்படைக் களனாக விளங்குகின்றது எனலாம். (It is context which determines the value of the word. - Vendray - Language - page. 180).

    சொற்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளை உணர்த்தும், சில சொற்கள் பொருள் உணர்த்தும்போது வெளிப் படையாகப் பொருளை உணர்த்தும்; சில குறிப்பாகப் பொருளை உணர்த்தும்; சில சொற்கள் சூழல் அமையாமல் பொதுவான பொருளைப் பெற்றும் விளங்கும். அப்பொருள் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்பட்டு ஒரு பொது அமைப்பைப் பெற்று விளங்குவதாகவும் அமையும். இதனையே வெளிப்படைப்பொருள் என்று கூறலாம்.

    “தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
    இருபாற்று என்ப பொருண்மை நிலையே”

    (சொல். பெயரியல் : 3)

    என்று சொல், தன் பொருளைக் குறிப்பதில், தொல்காப்பியரால் இருவகைப் படுத்தப்படுகின்றது.

    சூழ்நிலையின் காரணமாக வெளிப்படையான பொருள் மாற்றம் பெற்று, குறிப்புப் பொருளை உணர்த்துகின்றது. அவ்வாறு அக்குறிப்புப்பொருள் வேறு ஒரு பொருளை உணர்த்துவதாக இருந்தாலும் அது வெளிப்படைப் பொருளோடு எவ்வகையிலாவது தொடர்பு பெற்று விளங்கும். ஆகுபெயரை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். அதாவது, ஒருசொல் தன்னுடைய பொருளை விளக்காது, அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளை விளக்குவதே ஆகுபெயர் எனக்கொள்ளப்படுவதால் இதையும் குறிப்புப் பொருளாகக் கொள்ளலாம். அன்மொழித் தொகையையும் இவ்வாறே கொள்ள வேண்டும். அணிகளில், சிலேடையணி, பிரிதுமொழிதலணி, வேற்றுப்பொருள் வைப்பணி, உருவக அணி போன்றவற்றைக் குறிப்புப்பொருள் உணர்த்தும் அணிகளாகக் கொள்ளலாம்.

    இவ்விரு பொருள் குறித்தே நன்னூலாரும்,

    “ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
    இருதிணை ஐம்பாற் பொருளையுந் தன்னையும்
    மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
    வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே”

    (நன். 259)

    எனச் சொற்கள், பொருள் குறிக்கும் தன்மையை விளக்குகிறார். ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும் சொற்கள், இருதிணை ஐம்பால் பொருள்களையும் தன்னையும் விளக்கி, மூவிடத்திலும், உலக வழக்கிலும், செய்யுளிலும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருளை விளக்கி நிற்கும்.(தன்னை விளக்குதல் என்பது தாம் இன்ன சொல் என்று தம்மை உணர்த்துதல் ஆகும்.)

    எ.கா:

    அவன், இவன் - வெளிப்படை ஒருவர் வந்தார் - குறிப்பு

    ஒருவர் வந்தார் என்ற தொடரில் வந்தவர் ஆணா, பெண்ணா என்பதைக் குறிப்பால் மட்டுமே, அடுத்து வரும் அல்லது முன்னால் வந்த சொற்களை ஒட்டியே உணர முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-11-2017 15:49:42(இந்திய நேரம்)