தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருளின் வகைப்பாடு

  • 1.5 சொற்பொருளின் வகைப்பாடு

        சொற்பொருளை, பின்வருமாறு ஏழு வகைப்பாட்டுள் மேலைநாட்டினர் வகைப்படுத்துகின்றனர்.

        (i) கருத்தாக்கப் பொருள் (Conceptual Meaning)
        (ii) உணர்த்தல் பொருள் (Connotative Meaning)
        (iii) சமூகப் பொருள் (Social Meaning)
        (iv) வெளிப்படுத்து பொருள் (Affective Meaning)
        (v) பிரதிபலிப்புப் பொருள் (Reflective Meaning)
        (vi) இணைப்புப் பொருள் (Collocative Meaning)
        (vii) கருத்துப் பொருள் (Thematic Meaning)

    • கருத்தாக்கப் பொருள் (Conceptual Meaning)

        வேறுபடுத்தல் கொள்கை (Principle of contrastiveness), அமைப்பியல் கொள்கை (Principle of structure) ஆகிய இரண்டின் அடிப்படையில் கருத்தாக்கப் பொருளைக் காணலாம்.

        வேறுபடுத்தல் கொள்கையின் மூலம் ஓர் ஒலி பெற்றிருக்கும் (சாதகமான) கூறுகளைக் குறிப்பிடுவதைக் காட்டிலும், அது பெற்றிராத (பாதகமான) கூறுகளைக் குறிப்பிட இயலும்.

        எ.கா. : 1

        /p/ + bilabial - voice + stop - nasal     என்று குறிக்கலாம்.

        இதைப் போலவே, கருத்தாக்கப்     பொருண்மையும்     ஆராயப்படலாம்.

        எ.கா. : 2

        Woman + human - female + adult

        Man + human - male + adult

        ஒரு வாக்கியத்தின் அமைப்பினை விளக்குவது அமைப்பியல் கொள்கை. அமைப்பியல் ரீதியில் வாக்கியத்தைப் பகுத்தாய்வதற்கு இவ் அமைப்பியல் கொள்கை துணைநிற்கிறது. பொதுவாக மர வரைபடம் (tree - diagram) வாயிலாக இது விளக்கப்படும்.

        அடைப்புக் குறியில் பின்வருமாறு தரலாம்!

        { (n0) (man) } { [(is)] [(an)] [(island)] } .

    • உணர்த்தல் பொருள் (Connotative Meaning)

        காலங்காலமாக, சொற்பொருள் உணர்த்து தன்மைகள் வேறுபட்டு வந்துள்ளன. ஒரு மொழி பேசுவோருள்ளும் வேறுபடும் என்பதும் உண்மையே ஆகும்.

        உணர்த்தல் பொருள் பற்றிப் பேசுகையில், ஒருவர் பேசும் போது / கேட்கும்போது நடப்பு உலகத்து அனுபவங்களை எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்பதை அறிந்தாக வேண்டும். கருத்தாக்கப் பொருளுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. உணர்த்தல் பொருளானது மொழிக்கு மட்டுமே உரியதன்று, காட்சிக்கலை (visual art), இசை முதலானவற்றுக்கும் அது உரியதாகும் என்பதை உணர வேண்டும்.

    • சமூகப்பொருள் (Social Meaning)

        மொழிப் பயன்பாட்டின் சூழலை எடுத்துரைக்கும் பொருள் இது. ஒரு மொழியிலான நடையின் பல்வேறு நிலைகள் மூலமாகத் தரப்பட்ட பகுதியின் சமூகப்பொருளை நாம் பகுத்தறிகிறோம். சிலவற்றைக் கண்டதும் கேட்டதும் அவை வட்டார வழக்குச் சொற்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

        எ.கா.:

    (அ)

    வட்டார வழக்கு (Regional Dialect)

    -
    வடார்க்காட்டு வழக்கு திருநெல்வேலி வழக்கு
    (ஆ)
    சமூக வழக்கு (Social dialect)
    -
    (க) சாதி வழக்கு பிராமணர் வழக்கு செட்டியார் வழக்கு
    -
    (ங) தொழில் வழக்கு வணிகர் வழக்கு     ஆசிரியர் வழக்கு
    (இ)
    காலம் (Time)
    -
    17ஆம் நூற்றாண்டுத் தமிழ்
    (ஈ)
    துறை (Province)
    -
    அறிவியல், சட்டம், விளம்பரம்
    (உ)
    தகுதிநிலை (Status)
    -
    பேச்சு மொழி, இலக்கிய வழக்கு
    (ஊ)
    வகைதுறை (Modify)
    -
    சொற்பொழிவு, சிரிப்புத் துணுக்குகள்
    (எ)
    தனிநபர் (singularity)
    -
    ஜெயகாந்தன் நடை; நா.பா. நடை

    ஆகிய காரணங்களால், மொழி நடை வேறுபட்டு விளங்கலாம்.

    • வெளிப்படுத்து பொருள் (Affective Meaning)

        சொற்களைக் கேட்போரிடம் (காட்டுகின்ற மனப்போக்கு உள்ளிட்ட) சொற்களைப் பேசுபவரின் தனிப்பட்ட உணர்வுகளையும் மொழி உணர்த்துகிறது. எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைப் பற்றிய அவரது உணர்வுகளையும் இது வெளியிடுகிறது.`இதுவே வெளிப்படுத்து பொருள் என்பதாகும்.

        எ.கா.:

        நோயீர் அல்லீர்நும் கணவன்தன் உயிர்உண்டீர்
        பேயீரே நீர்இன்னம் இருக்கப் பெறுவீரே
        மாயீர் மாயாவன் பழிதந்தீர் முலைதந்தீர்
        தாயீரே நீர்இன்னும் எனக்குஎன் தருவீரே?


         (கம்பராமா. அயோத்தியாகாண்டம்.
                 பள்ளிப்படைப்படலம்.76)

    “தாயீரே நீர்! இன்னும் எனக்கு என்தருவீரே?” - என்று பரதன் தன்தாய் கைகேயியை நோக்கிக் கூறியதில் அவன் வெறுப்பைக் காணலாம். இந்த எடுத்துக்காட்டுகளில் பேசுபவரின் மனப்பாங்கு வெளிப்படையாகப் புலப்படுகிறது. இவ்வாறின்றி, நயமுடன் பேசுவதும் காணப்படுகிறது.

        எ.கா.:

        ‘அருள் கூர்ந்து அமைதி காத்திட வேண்டுகிறோம்.’

    • பிரதிபலிப்புப் பொருள் (Reflective Meaning)

        கருத்தாக்கப் பொருள் பலவாக இருக்கும் நிலையில் இது உருவாகிறது.

        பத்திரிகைகளில் “கட்சித் தலைவர் அரசியல் துறவு’’ என்று படிக்கிறோம். அப்போது, துறவு என்னும் அன்றாட வழக்கிலான சொல் இங்கு நமக்குத் துணைபுரிகிறது. துறவு என்பது விட்டு நீங்குதல். எனவே இது தெளிவாகப் புரிகிறது. சில சொற்கள் அன்றாட வழக்கில் மிகச் சாதாரணமாகப் பயன்பட்டாலும் சில நேரங்களில் பாலியல் தொடர்பான பொருள்களைச் சுட்டுவதால் அவற்றைப் பேச இயலாத சூழல் நிலவுகிறது எனலாம்.

    • இணைப்புப் பொருள் (Collocative Meaning)

        Pretty, handsome ஆகிய சொற்கள் ‘good-looking’ எனப் பொருள் தருவன; ஆனால், அவை எந்தப் பெயர்ச் சொற்களுடன் வருகின்றன என்பதைப் பொறுத்து வேறுபடலாம்.

        தமிழில் எடுத்துக்காட்டுத் தருவதானால், முகவரிச் சீட்டில் (visiting card) கயல்விழி எம்.ஏ என்று இருந்தால், அவர் ஆணா, பெண்ணா என்று ஐயப்பட வேண்டியதில்லை. கயலை விழியோடு ஒப்பிடுவது பெண்களுக்கு மட்டுமே உரியதாகையால், அப்பெயர் பெண்ணையே குறிக்கிறது என்று முடிவு செய்யலாம்.

        இவ்வாறு வருவது இணைப்புப் பொருள் தரவல்லது. ஒரு சொல், தனக்கு முன்னும் பின்னும் அமைந்துள்ள சொற்களை ஒட்டி, தன்பொருளை வெளிப்படுத்துகிறது எனலாம். இவ்வாறு லீச் கூறுகிறார். (Collocative meaning consists of the associations a word acquires on account of the meaning of words which tend to occur in its environment) என்கிறார் லீச். (1900:17)

    • கருத்துப்பொருள் (Thematic Meaning)

         பேசுபவர் அல்லது எழுதுபவர் தாம் தரும் தகவல் கூற்றை எவ்வாறு அமைக்கிறார்? எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்? என்பதைப் பொறுத்து அமைவது கருத்துப் பொருளாகும்.

    1.5.1 பாமர் கூறும் சொற்பொருளியல் பற்றிய வகைப்பாடு

        பாமர் (F.R. Palmer) சொற்பொருளியலை இருவகையாகப் பாகுபடுத்துகிறார். அவை கீழ்வருமாறு:

        1. சொற்பொருளியல் அமைப்புக் குறித்து ஆராய்வது.

        2. பொருள் (பொருண்மை) குறித்து ஆராய்வது.

        சொற்பொருளியலில் ஆய்வது என்பது சொற்களை மட்டுமே குறிக்கும் ஆய்வன்று. தொடர்களையும் வாக்கியங்களையும் ஆய்வதுடன் உணர்வுத் தொடர்பாகவும் ஆய்ந்து, வாக்கியப் பொருளுக்கும், சொற்பொருளுக்கும் இன்றியமையா இடத்தைப் பெறச்செய்தல் வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 18:23:42(இந்திய நேரம்)