தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல் வழங்கும் பொருள்

  • 1.3 சொல் வழங்கும் பொருள்

    ஒரு சொல்லுக்குரிய பொருளாக ஒன்றிருக்க, அச்சொல் பேச்சுவழக்கில் வேறுபொருளாக மாற்றம் அடைகிறது. பேசுவோர் தம் இயல்புக்கு ஒரு பொருளை உணர்த்த, வெவ்வேறு சொற்களை எல்லாம் பயன்படுத்துவர்.கற்றோர் பேச்சும், சிறுமொழி, குழந்தைமொழி முதலியவையும் சிறப்பு வழக்காகக் கொள்ளலாம். ஒரு குழுமொழியின் தோற்றத்திற்கு, புதுப்புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே காரணமாகிறது. நாளடைவில் அது ஒரு பொதுமொழியாகவும் மாறிவிடுகிறது.

    எ.கா:

    சொல்லின் பொருளானது உணர்வின் காரணமாக, தொடர் அமைப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அம்மாற்றங்களைப் பின் வருமாறு காணலாம்:

    (அ) சொற்களின் ஈற்றில் இசைச் சொற்கள் சேர்தல்

    வந்தார்! ஆகா! என்னே அழகு!

    (ஆ) சிறப்பாக ‘ஏ’ சேர்தல்

    சென்னையிலே இன்று மாலையிலே சந்திர கிரகணம் ஏற்படும்.

    (இ) சொல் தொடரும் முறையை மாற்றுதல்

    பேசினார் முதல்வர்

    முதல்வர் பேசினார்

    (ஈ) ஒரே கருத்துள்ள சொற்கள் மீண்டும் வருதல்

    சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே

    (உ) குறிப்பிட்ட சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லல்

    (உணர்ச்சி மிகுதியால் இவ்வாறு நிகழும்)

    பாம்பு பாம்பு - அச்ச உணர்வு

    அப்பப்பா வலி தாங்க முடியலை - வியப்பு உணர்வு

    ஓடினாள் ஓடினாள் அழுதுகொண்டே ஓடினாள் -

    அவல உணர்வு.

    1.3.1 மொழிப்பண்பாட்டின் அடிப்படையில் பொருள்

    மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழிக்கும், அவர்களால் பின்பற்றப்படும் ஒரு பண்பாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தமிழ்மொழியில் உள்ள உறவுமுறைச் சொற்களுக்கும், ஆங்கில மொழியில் உள்ள உறவுமுறைச் சொற்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. ஆங்கில மொழியில் ‘uncle’ என்பது அப்பாவின் அல்லது அம்மாவின் தம்பியையோ (அ) அண்ணனையோ குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ ‘மாமா’ என்னும் உறவுமுறைச் சொல் பரந்த பொருளை உடையதாகக் காணப்படுகிறது. அச்சொல், தாய்மாமனையும், அத்தையின் கணவரையும், மாமா மற்றும் அத்தையின் மகன்களையும், அக்காவின் (அ) தங்கையின் கணவரையும், கணவனின் (அ) மனைவியின் தந்தையையும் குறிக்கும் பரந்த பொருளுக்குரிய சொல்லாக விளங்குகிறது.

    பழந்தமிழில் கருமை, பசுமை, நீலம் இம்மூன்று நிறங்களும் பொதுப்பண்புடைய நிறங்களாகவே கருதப்பட்டு வந்தன. எனவே தான் கருநிறத்தான், பச்சைமேனியன், நீலவண்ணன் என்றெல்லாம் இலக்கியங்கள் குறித்து வந்தன

    1.3.2 சூழல் உணர்த்தும் பொருள்

    ஒருசொல் தனியே அல்லாமல் சூழலின் மூலமாகப் பொருள் கொள்ளும் போது பொருள்மாற்றம் அடைகிறது. ‘மா’ என்ற சொல்லையே ‘மாவுடைத்தார்’ (புறப்பொருள் வெண்பாமாலை) எனக் கூறுமிடத்து வண்டு என்ற பொருளை உணர்த்துவதை அறிய முடிகிறது.

    இவ்வாறு சொற்கள் தன்பொருளை உணர்த்தும்போது, வெளிப் படையாகவும், சூழலுக்குத் தக்கவாறு குறிப்பாகவும் செயல்படுகின்றன. சில சொற்கள் சூழ்நிலையே இல்லாமல் பொதுவான பொருளைப் பெற்றும் விளங்கும், அதனை வெளிப்படைப் பொருள் எனக் கூறுகிறோம். சொல் தான் இடம்பெறும் சூழ்நிலை மாற்றம் காரணமாக, வெளிப்படைப் பொருள் தவிர்ந்த வேறு ஒரு பொருளை உணர்த்துவதும் உண்டு. அதையே குறிப்புப்பொருள் என்று கூறலாம்.

    வடமொழி இலக்கண நூலார், சொற்கள் பொருள்கொள்ளும் நிலைக்கு, ஆகாங்ஷா (Akanksha). யோக்யதா (yogyata), சந்நிதி (Samnidi) ஆகிய மூன்றையும் காரணங்களாகக் கூறுவர். ஆறுமுக நாவலர் இம்மூன்று நிலைகளை அவாய் நிலை, தகுதி, அண்மை நிலை என்று தமிழிலும் மூவிதமாகப் பகுத்துள்ளார்.

    • அவாய் நிலை

    ஒருசொல் தான் உணர்த்தும் சரியான பொருளை வெளிக் கொணர்வதற்கு அருகே இருக்கும் சொல்லினைச் சார்ந்து நிற்கும். ‘கழுதை, குதிரை’ என்பது ஒரு வாக்கியமாக அமையாது. ஆனால், குதிரை ஓடியது என்பது ஒரு வாக்கியமாக அமையும். ஒரு பெயர்ச்சொல் ஒரு பெயரையோ, வினாவையோ, வினையையோ பயனிலையாகக் கொண்டு முடிந்தால்தான் சரியான பொருளைத் தரும் வாக்கியமாக அமைய முடியும்.

    • தகுதி

    சொற்கள் சேர்ந்து நிற்கும்போது, ஒருசொல் தன்பொருள் விளங்கும்படியாக இருக்கும் நிலையே தகுதி எனப்படும். தகுதி நிலையின் அடிப்படையில் நோக்கும்போது ‘நெருப்பால் நனை’ என்ற வாக்கியம் பொருளற்ற வாக்கியமாகி விடுகிறது. நனை என்பது நீருடன் தொடர்புடையதாதலால், அச்சொல்லுடன் சேர்ந்து நின்று உரிய பொருள்தரும் தகுதி, நீர் என்ற சொல்லுக்கு மட்டுமே உண்டு. எனவே, நெருப்பால் நனை என்ற வாக்கியம் பொருளற்ற வாக்கியமாகிவிடுகிறது.

    • அண்மைநிலை

    சொற்கள் தனிமொழியாக நின்று பொருள் உணர்த்தல் உண்டு. அதனை அடுத்து வரும் அண்மைச்சொல் அப்பொருளை, அவ்விடத்தோடு சார்த்திப் பொருள் புலப்படுத்துதலும் உண்டு. ஒரு சொல்லுக்கு உண்டாகும் பொருள் பொதுவாக அண்மைச் சொல்லாலேயே ஏற்படுகிறது எனலாம். சில இடங்களில், அண்மைச் சொல்லால்தான் பொருள் தெளிவடைகிறது.

    ‘நீ கொல், கொல் யானை, அது கொல், கொல்லென்று சிரித்தாள்’ - இவற்றுள் கொல் என்பது ஏவல் வினையாகவும், வினையடியாகவும், இடைச்சொல்லாகவும், ஒலிக்குறிப்பாகவும் அமைய அண்மைச் சொற்களே காரணமாக அமைகின்றன.

    எ.கா. ‘பெரிய அரசன் நாடு புரந்தான்’

    இத்தொடரில் ‘பெரிய’ என்பது அரசன் என்பதையும், ‘நாடு’ என்பது புரந்தான் என்பதையும் சார்ந்து பொருள் புலப்படுத்துகின்றன. பெரிய என்பதற்கும், அரசன் என்பதற்கும் கால இடைவெளியிருந்தால் ஒரு வாக்கியம் என்னும் உணர்வை அவை தராமல் போய்விடும். தொடராக நிற்கும் சொற்களைக் காலதாமதமின்றிச் சொல்வதையே இவ்அண்மைநிலை உணர்த்தும்.

    1.3.3 சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்புநிலை

    சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மை சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துவதாகும். ஒரு மொழியில் இடம்பெறும் சொற்கள் அனைத்துமே அவ்வவற்றுக்குரிய பொருளை உணர்த்தி நிற்கின்றன. இத்தொடர்பை விளக்க, பொருளியல், பொருளணியியல், பொருண்மையியல், சொற்பொருளியல் என்ற பல்வேறு தொடர்கள் தற்கால மொழியியலில் பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்பொருளியல் துறையை மொழியியலின் ஒரு கிளையாகக் கூறலாம்.

    ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமன்றிப் பலபொருள்களும் உண்டு. ஒரு பொருளைக் குறிக்கின்ற வடிவமே இங்கே சொல்லாகக் கொள்ளப்படும். அப்பெயரைக் குறிக்கும் வடிவத்திற்கும், அப்பெயர் உணர்த்தும் பொருளுக்கும் உள்ள தொடர்பே இங்குப் பொருள் எனக் கூறப்படுகிறது.

    எ.கா : மரம்

    இச்சொல் வடிவமானது இச்சொல்லைக் கூறியவுடன் அச் சொல்லுக்குரிய பருப்பொருள் வடிவத்தையே (மரம் என்ற பொருள்) நம் கண்முன் காட்சியாகக் கொண்டு வருகிறது. இச்சொல்லைக் கூறியவுடன் சொல்லினுடைய நேரடியான பொருள் நமக்கு விளங்கு கின்றது. எத்தகைய சூழலும் இச்சொல்லின் பொருளை உணர்த்தத் தேவையானதாக அமையவில்லை. உடனடியாக, நேரடியாக அப்பொருளை நாம் உணர்ந்துவிடுகின்றோம். ஆனால், இதற்கு மாறாக, பல பொருள்களைக் குறிக்கும் ஒரே சொல்லும் உண்டு.

    எ.கா : கலை

    இச்சொல்லைக் கூறியவுடன் எப்பொருள் என மயக்கம் ஏற்படுகின்றது. ‘கலை’ என்ற இச்சொல் மட்டும் ஏறக்குறைய 55 பொருள்களை உடையதாக விளங்குகிறது. அவை:

    அரைப்பட்டிகை; ஆண் மான்; எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு கால நுட்பம்; ஒரு பாகையில் அறுபதில் ஒன்று; கலையென்னேவல்; கல்வி; காஞ்சி மரம்; குதிரைக்கலணை; சந்திரன்; பங்கு; சவ்வு; சீலை; சுறாமீன்; மூச்சின்பகுதி; நூல்; ஒளி; பேயாட்டம்; மகரமீன்; மகர ராசி; மரக்கொம்பு; வண்ணங்களின் ஓரடி; வயிரம்; வித்தியாதத்துவம் ஏழில் ஒன்று; விலங்கேற்றின் பொது; சரீரம்; முசுக்கலை; துர்க்கை; திறமை; கூறு; திங்களின் பதினாறு கூறுகளில் ஒன்று; பிங்கலை; நிலைகுலை; சுருதிகுலை; ஒளி; ஒருதாளப் பிரமாணம்; அறுபத்துநான்கு கலை; மொழி; இரலை; புல்வாய்; வச்சயம் (கருநிறமுள்ள மான் வகை); இடைகலை பிங்கலைகள்; மனத்தைக்கலை; நீக்கு; புணர்ச்சிக்குரிய கரணங்கள்; மரக்கவடு; மேகலை, காஞ்சி என்னும் இடையணிகள்; குலை; மரவயிரம்; வித்தை; ஒரு பொருளின் சிறிய பாகம்; காலப்பிரிவின் ஒன்று; பிறை நிரம்பல், வஞ்சகம்; விலங்கின் ஆண் பெயர்களுள் ஒன்று.

    இவ்வாறு, ஒருசொல் பலபொருளாக வழங்கி வருவதை நம்மால் அறிய முடிகிறது. மேற்கூறியவாறு பல பொருளில் வழங்கிவரும் ‘கலை’ என்ற இச் சொல்லுக்குத் தனிப்பொருள் எது? சூழ்நிலையின் துணையைக்கொண்டு பொருள் அறியப்படுவதால் அதற்கென்று தனியாகப் பொருள் ஏதுமில்லை என நம்மால் கூறமுடியாது.

    எனவே, சூழலை அடிப்படையாகக் கொண்டே சொற்பொருள் அறியப்படும் நிலையில் இன்றைய சொற்பொருளியல் துறை விளங்கி வருவதை நம்மால் காண முடிகிறது.

    ‘வா’ என்ற சொல், ஒரு வினைச்சொல் என்பதையும், ஒரு செயலை உணர்த்துவதையும் அறியலாம். ‘கரை’ என்னும் சொல் பெயர்ச்சொல்லாக (ஏரிக்கரை, கடற்கரை போல) நீர்நிலங்களின் எல்லையையும், வினைச் சொல்லாக (உப்பை நீரில் கரை,) ஒரு பொருளைத் திரவத்தில் உருமாற வைப்பதையும் உணர்த்துவதைக் காணலாம். ஆனால், ‘மா’ என்ற சொல் எவ்வகைச் சொல் என்பதை உறுதிபடக் கூற இயலாது. அது உணர்த்தும் பல பொருள்களே இந்நிலைக்கும் காரணமாக அமைகின்றன.

    பெயர்ச்சொல்லாக வருமிடத்து ‘மா’ என்ற சொல், மாமரம், மான், யானை, திருமகள், பன்றி, வண்டு என்ற பொருட்களிலும், பெயரடைச் சொல்லாக வருமிடத்துப் பெரிய, கரிய, விரைவு, நிறம் ஆகிய பொருட்களிலும் சூழலுக்கு ஏற்பப் பொருள் வழங்குகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ‘பொருள்’ என்ற சொல்லுக்குரிய பொருட்கள் எவையேனும் இரண்டனைக் குறிப்பிடுக.?
    2.
    உணர்ச்சி மிகுதியால் சொல் தொடர் அமையும் முறையாது?
    3.
    சொல்லும் பொருளும் குறித்துத் தொல்காப்பியர் கூறுவது யாது
    4.
    நன்னூலார் கூறும் மொழியின் வகைகளைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 10:46:37(இந்திய நேரம்)