தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்கள்

  • 5.1 சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்கள்

    சொற்பொருளை ஆராயும்போது, சொல் உணர்த்தும் பொருள் எவ்வெவ்வாறு வேறுபட்டுச் செல்கின்றது என்று காணல் வேண்டும்.

    சொற்களின் வடிவம் திரிவதற்கு மனம் காரணம் அன்று, ஒலிக்கும் உறுப்புகளே காரணம். சொற்களின் பொருள் திரிவதற்கு உறுப்புகள் காரணம் அல்ல, மனமே காரணமாகும் எனலாம்.

    சொற்கள் குறிக்கும் பொருளுணர்ச்சி, என்றும் ஒரே நிலையாக இராமல் காலப்போக்கில் மாறுவதற்கான காரணங்களைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

    சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்கள்

    1. ஒருசொல் உணர்த்தும் பொருள் விரிவானதாகவும் பலவற்றைத் தன்னுள் கொண்டதாகவும் இருப்பதால், அது மெல்ல நெகிழ்ந்து பொருள் வேறுபட இடந்தருகிறது.
    2. ஒரு சொல்லால் உணர்த்தப்படும் பொருளின் பல பண்புகளில் அல்லது பல பகுதிகளில், ஒன்று சிறந்து விளங்குவதால், அச்சொல் மெல்லமெல்ல அந்தச் சிறப்புப் பண்பையோ பகுதியையோ உணர்த்தத் தொடங்குகின்றது.
    3. ஒரு சொல் உணர்த்தும் பொருளுக்கு அடுத்த நிலையில், மற்றொரு     பொருளும் மறைந்திருப்பதால், இரண்டாம் பொருளைச் சுட்டும் வகையிலோ அல்லது இரண்டு பொருளையும் தழுவும் வகையிலோ சொல் இடந்தருகின்றது.
    4. ஒரு பொருளை வற்புறுத்திக் கூறும்போதும், தெளிவுறுத்திக் கூறும்போதும், உருவகப்படுத்தி அதற்கேற்ற சொல்லை ஆளும்போதும் உருவகச் சொல்லின் பொருள் திரிந்து விடுகின்றது.
    5. உணர்ச்சி மிகுதியாகக் கூறும்போது ஒருசொல்லின் பொருளை வற்புறுத்துவதால் உண்மைப்பொருள் மறைந்து அதனினும் விரிவான அல்லது குறுகிய மற்றொரு பொருள் உணர்த்தப்படுகின்றது.
    6. எள்ளல் முதலிய குறிப்புகள் காரணமாகவோ, இடக்கரடக்கல், மங்கலம் முதலிய வழக்குக் காரணமாகவோ ஒரு சொல்லின் இடத்தில் வேறுசொல் புகுவதால் அச்சொல் தன்பொருளை இழந்து மாறுதல் அடைகின்றது.
    7. அறியாமை காரணமாகவோ, தெளியாமை காரணமாகவோ, ஒரு சொல்லைத் தவறான பொருளில் வழங்குவதால், அச்சொல் தன் உண்மைப் பொருளை உணர்த்தத் தவறிவிடுகின்றது.
    8. மக்களின் வாழ்க்கையில் புதியன புகுதலால், மாறுதல் ஏற்பட ஏற்பட, புதிய கருத்துகள் புகப்புக, புதிய கருவிகள் பரவப்பரவ, அவற்றினைக் குறிக்கப் புதிய சொற்கள் அம்மொழியிலேயே ஏற்படுவதனால் பழைய சொற்களிடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 17:08:56(இந்திய நேரம்)