தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒற்றைக்கல் இரதச் சிற்பங்கள்

  • 2.2 ஒற்றைக்கல் இரதச் சிற்பங்கள்
    பல்லவர் படைத்த ஒற்றைக்கல் இரதங்களைப்போல் பாண்டியர்களால் செதுக்கப்பட்ட ஒரே ஒற்றைக்கல் இரதம் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள கழுகுமலையில் அமைந்துள்ள வெட்டுவான் கோயிலாகும். இந்த ஒற்றைக்கல் இரதம் முழுமையாகச் செதுக்கப்படாமல் உள்ளது. எனினும் இது தென்னக எல்லோரா என்று அழைக்கப்படும் அழகு மிக்க அமைப்பாகும். இது மலையின் நடுவில் வெட்டி ஒரு பாறை தனியாக இருக்குமாறு பிரித்தெடுத்துப் பின் தனித்த அப்பாறையை மேலிருந்து கீழாகச் செதுக்கி அமைத்தது ஆகும்.

    இதன் விமான கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் நந்திகள் செதுக்கப்பட்டுள்ளன. கிரீவ கோட்டத்தில் கிழக்கே உமா சகித மூர்த்தியும், தெற்கே தட்சிணா மூர்த்தியும், மேற்கே நரசிம்மரும், வடக்கே பிரம்மாவும் செதுக்கப் பட்டுள்ளனர். அதேபோல் கீழே உள்ள தளத்தின் தெற்கே தட்சிணா மூர்த்தியும், மேற்கே திருமாலும், வடக்கே விஷபா ஹரணரும் செதுக்கப் பட்டுள்ளனர். இங்குச் சிற்பங்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுடையனவாக அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:49:49(இந்திய நேரம்)