Primary tabs
- 2.10 தொகுப்புரை
பாண்டியர்களின் குடைவரைக் கோயில்களும் அவற்றில் இடம்பெறும் சிற்பங்களும் நிறையவே கிடைக்கின்றன. பல்லவர் குடைவரைகளின் கருவறைச் சுவர்களில் இடம்பெறும் சோமாஸ்கந்தர் புடைப்பு உருவம் பாண்டிய நாட்டில் திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். அதுபோலப் பாண்டியருக்கே உரிய இரட்டைக் கருவறை அமைப்புடைய குடைவரைகள் மூன்றினைப் பற்றி அறிந்தோம். பல்லவர் படைப்பைப் போலவே சோதனை முயற்சியாகக் கழுகு மலை வெட்டுவான் கோயில் ரதம் அமைந்துள்ளது. கட்டுமானக் கோயில்களில் முற்காலப் பாண்டியர் கோயில்கள் அழிந்தும், பெரு மாற்றத்திற்கு உட்பட்டும் போனதால் கட்டுமானக் கோயிற் சிற்பங்களை அதிக அளவில் காண இயலவில்லை. பிற்காலப் பாண்டியர் கோயில்களும் சிற்பங்களும் ஓரளவிற்குக் கிடைத்துள்ளன.
தமிழகச் சிற்பக் கலை வரலாற்றின் இறுதிக் காலமே நாயக்கர் காலம். பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான கலை வளர்ச்சியில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உன்னதமான கலைப் படைப்புகள் ஆகும். அவர்கள் மண்டபங்களை அதிக அளவில் அமைத்ததோடு, மண்டபங்களில் அதிக அளவில் சிற்பங்களையும் அமைத்து அழகுபடுத்தினர். சிற்பக் கலைப் படைப்பில் நாயக்கரது பாணியைத்தான் இன்றுவரை பின்பற்றுகின்றனர்.