தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓவியம் இடம் பெறும் இடங்கள்

  • 5.1 ஓவியம் இடம் பெறும் இடங்கள்

    கோயில்களில் விழாக்கள் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக் கால் மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், திருச்சுற்று மண்டபம் முதலியவற்றின் விதானங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறையின் உட்புறச் சுவரிலும் புறச்சுவரிலும், நுழைவாயில் கோபுரங்களின் உட்புற நிலைகளிலும் ஓவியங்கள் வரையப் பட்டன. கோயில்களில் ஓவியம் காணப்படும் மண்டபங்கள் எழுத்து மண்டபம் என்று அழைக்கப் பட்டன. எழுத்து என்பதற்குச் சித்திரம் என்ற பொருளும் உண்டு. எடுத்துக்காட்டாக, திருவெள்ளறை, திருவண்ணாமலை முதலிய ஊர்களில் ஓவியங்கள் காணப்படும் மண்டபங்கள் எழுத்து மண்டபம் எனப்படுகின்றன.

    5.1.1 எழுத்து நிலை மண்டபம்

    மதுரைக்கு அருகிலுள்ள முருகனது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் சங்க காலத்தின் இறுதியில் வண்ண ஓவியம் வரையப் பட்ட மண்டபம் ஒன்று இருந்தது. இது எழுத்துநிலை மண்டபம் என்று அழைக்கப் பட்டதையும் அதிலிருந்த ஓவியங்களை மக்கள் கண்டு களித்ததையும் சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் தெரிவிக்கிறது. இது எழுதெழில் அம்பலம் என்றும் பரிபாடலில் குறிப்பிடப் படுகிறது. இதுவே தமிழ் நாட்டில் கோயில்களில் ஓவியங்கள் வரைந்து வைத்தமையைத் தெரிவிக்கும் பழமையான சான்றாகும். காமன் தனது மலர்க் கணையால் சிறப்பு மிக்க தொழில் நுட்பம் வெளிப்படும் வகையில் வரைந்து வைத்த மண்டபம் போன்று இது இருந்தது என்று பரிபாடல் கூறுகிறது.

    நின்குன்றத்து
    எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்

    தொழில்வீற் றிருந்த நகர்

    (பரிபாடல் 18: 27-29)

  • ஓவியங்கள்
  • திருப்பரங் குன்றத்தில் இருந்த எழுத்து நிலை மண்டபம் தற்போது இல்லை. கால வெள்ளத்தில் அழிந்து போனது. இம்மண்டபத்தில் இரண்டு புராணக் கதைகள் வரைந்து வைக்கப் பட்டிருந்தன என்று பரிபாடல் கூறுகிறது. இவற்றில் ஒன்று அகலிகையின் கதை, மற்றொன்று இரதி, மன்மதன் உருவங்கள் ஆகும். இதனைக் கண்ட பெண்கள் சிலர் ஓவியத்தில் காணப்படும் உருவங்களை எவை என்று கேட்டதாகவும் அதனை அறிந்த சிலர் இது இரதியின் உருவம், இது மன்மதனின் உருவம் என்று அடையாளம் காட்டியதாகவும் பரிபாடல் தெரிவிக்கிறது. மேலும் அகலிகையின் வரலாற்றில் வரும் காட்சிகளை எழுத்து நிலை மண்டபத்தில் வரைந்து வைத்திருப்பதைக் கண்ட மக்களில் சிலர் அதில் ஒன்றிப் போயினர். அவற்றைக் கண்டவர்கள் இது இந்திரன் பூனையாக வந்த காட்சி; இது அகலிகையின் உருவம்; இது வெளியே சென்று திரும்பிய கௌதம முனிவன் உருவம்; இது கௌதமனின் கோபத்தால் கல்லான அகலிகையின் உருவம் என்று ஓவியத்தில் ஒன்றிப் போய்ப் பேசிக் கொண்டதாகப் பரிபாடலில் வருகிறது.

    இரதி காமன் இவளிவன் எனா

    அவிரகியர் வினவ வினாவிறுப் போரும்

    இந்திரன் பூசை இவளக லிகைஇவன்

    சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு

    ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்

    இன்ன பலபல யெழுத்துநிலை மண்டபம்

    (பரிபாடல் 19:48-53)

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 12:06:10(இந்திய நேரம்)