தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாயக்கர் கோயில் ஓவியங்கள்

  • 5.7 நாயக்கர் கோயில் ஓவியங்கள்

    தமிழ்நாட்டில் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் செஞ்சியிலும் வேலூரிலும் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர் கால ஓவியங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை நாயக்கர் கால ஓவியங்கள் வேலூர், தஞ்சை, மதுரை, நத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், இடைகால், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் காணப் படுகின்றன. தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் பட்டீசுவரம், சிதம்பரம், குறிச்சி, திருமங்கலக் குறிச்சி, திருவாரூர், ஆவுடையார் கோயில் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் உள்ளன. திருவண்ணாமலை, செங்கம் போன்ற இடங்களில் தமிழ் நாட்டின் வடபகுதியை ஆண்ட நாயக்க மன்னர் கால ஓவியங்கள் இருக்கின்றன.

    நாயக்கர் கோயில் ஓவியங்கள்

    5.7.1 அழகர் கோயில், ஆண்டாள் கோயில் ஓவியங்கள்

    மதுரை நாயக்கர் கால ஓவியங்களில் அழகர் கோயில் வசந்த மண்டபத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்மண்டபத்திலும் இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடர் காட்சிகளாக வரையப் பட்டுள்ளன. அழகர் கோயில் வசந்த மண்டப ஓவியத்தில் இராமாயணத்தின் தொடக்கம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள காட்சிகள் அழகுறத் தீட்டப் பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியின் அடியிலும் அதன் விளக்கம் தமிழ்மொழியின் அக்காலப் பேச்சு நடையில் எழுதப் பட்டுள்ளது. இங்குள்ள இராமாயணக் காட்சிகள் நாயக்கர் சமுதாயப் பண்பாட்டு நிலைகளை விளக்குவனவாயும், அக்கால மக்களின் பழக்க வழக்கங்களைக் காட்டுவனவாயும் அமைந்துள்ளன. இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரது பிறப்புக் காட்சிகளும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதும், தசரதனின் இறப்புச் சடங்கும் நாயக்கர் கால மக்களின் பழக்க வழக்கங்களைச் சுட்டுவனவாய் அமைந்துள்ளன. நத்தம் சிவன் கோயிலில் அம்மன் கோயில் முன் மண்டபத்தில் கந்த புராணத்தில் வரும் முருகனது பிறப்புக் காட்சிகள் வரையப் பட்டுள்ளன. சுவாமி கோயில் முன் மண்டபத்தில் இலிங்கம நாயக்கன் உருவமும் பல்வேறு திருத்தலங்களும் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன.

    அழகர் கோயில் ஓவியங்கள்

    5.7.2 மதுரை மீனாட்சி கோயில் ஓவியங்கள்

    மதுரை அங்கயற் கண்ணி ஆலயத்தில் பொற்றாமரைக் குளத்தினைச் சுற்றியுள்ள மண்டபச் சுவர்களில் வடக்கிலும், கிழக்கிலும் அறுபத்து நான்கு திருவிளையாடல் காட்சிகள் வண்ண ஓவியமாக உள்ளன. பொற்றாமரைக் குளத்தின் மேல்புறம் உள்ள மண்டபம் ஒன்றில் இராணி மங்கம்மாள் காலத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியம் காணப் படுகிறது. பாண்டியன் மகளாகப் பிறந்த தடாதகைப் பிராட்டியார் எண் திசைக் காவலர்களுடன் போர் செய்யும் காட்சிகள், நாயக்க மன்னர்கள் ஆண்டு தோறும் நடத்தும் செங்கோல் விழா, மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. மீனாட்சி அம்மனிடமிருந்து இராணி மங்கம்மாள் செங்கோலைப் பெறும் காட்சி செங்கோல் விழா ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை இராணி மங்கம்மாளுடன் முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கரும் தளவாய் இராமப்பையனும் கண்டு களிக்கும் காட்சி இவ்வோவியத்தில் உள்ளது.

    மதுரை மீனாட்சி கோயில் ஓவியங்கள்

  • திருவரங்கம் கோயில் ஓவியம்
  • ஸ்ரீரங்கத்தில் இராச கோபுரத்தைத் தாண்டி, கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கோபுரம் ஒன்றின் விதானத்தில் திருவரங்கநாதரின் முத்தங்கி சேவை ஊர்வலம் அழகுற வண்ண ஓவியமாக விளங்குகிறது. தாயார் சன்னதியின் திருச்சுற்று மண்டப விதானத்தில் பாகவதப் புராணக் கதை விரிவாக ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. இராமானுசர் கோயில் மண்டபத்தில் ஆழ்வார்களின் வரலாறும் ஆச்சாரியார் வழி முறையும் வண்ண ஓவியமாகக் காணப் படுகின்றன.

    5.7.3 தஞ்சை நாயக்கர் கோயில் ஓவியங்கள்

    தஞ்சை நாயக்கர் ஓவியங்களில் குறிப்பிடத் தக்க ஓவியங்கள் பட்டீசுவரத்திலும், சிதம்பரத்திலும் காணப் படுகின்றன. பட்டீசுவரம் சிவன் கோயிலில், அம்மன் கோயில் மண்டபத்தில் தல புராணம் வரையப் பட்டுள்ளது. இது நாயக்கர் காலச் சமூகத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் காணப் படுகிறது. இதில் மீன் பிடிக்கும் வழக்கம் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. பட்டீசுவரம் சிவன் கோயில் கோபுரத்தில் நடராசரின் ஆடற் காட்சி ஓவியமாக விளங்குகிறது.

    சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப விதானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவ பெருமான் அழித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியத்தில் சிவ பெருமான் பிட்சாடனர் வேடமிட்டுத் தாருகா வனத்தின் உள்ளே நுழைய அவரது பின்னே தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் மையல் கொண்டு செல்கின்றனர். மோகினி வடிவம் கொண்டு வந்த திருமாலின் பின்புறம் செருக்கழிந்த தாருகா வனத்து முனிவர்கள் செல்கின்றனர். ஆவுடையார் கோயில் ஓவியத்தில் மாணிக்க வாசகரின் வரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் மலை வலம் வருகின்ற சாலையில் எழுத்து மண்டபம் என்ற பெயரில் மண்டபம் ஒன்று உள்ளது. இதில் சிவ பெருமான் உமையை மணந்தது, இராமாயணம், ஆயர் மகளிரோடு கண்ணன் புரிந்த திருவிளையாடல்கள், முருகன் வள்ளியை மணந்தது ஆகியவை வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள செங்கம் பெருமாள் கோயில் மண்டபத்தில் தெலுங்கு இராமாயணக் காட்சிகள் ஓவியமாக வரையப் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு காட்சியில் அனுமன் மண்டோதரியின் கூந்தலைப் பற்றி அடிப்பதாக உள்ள காட்சி வேறுபட்டதாகவும் புதுமையாகவும் உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 13:03:49(இந்திய நேரம்)