தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியமும் மொழியும்

  • 4.1 இலக்கியமும் மொழியும்

        கலைகள் பல. கலைகள் யாவும் வாழ்க்கை அல்லது வாழ்க்கை பற்றிய உணர்வுகளின் மீது தான் அமைகின்றன. ஆனால், எதன் மூலமாக அல்லது எதனைக் கருவியாகக் கொண்டு அமைகின்றன என்று பார்க்கும் போது, அவற்றின் சில அடிப்படை வேறுபாடுகள் புலனாகின்றன. சிற்பம், கல்லால் ஆனது. இசை, ஓசையின் விகற்பங்களால் ஆனது. ஓவியம், வண்ணக் குழம்புகளாய் ஆனது. இலக்கியம், ஒரு கலை, அது எதனால் ஆனது? அது மொழியால் ஆனது.

    4.1.1 மொழிசார் கலை

        ‘இலக்கியம், மொழிசார் கலை’ (Verbal art). புகழ்பெற்ற மொழியாராய்ச்சியாளர் ரோமன் யகோப்சன்     (Roman Jakobson) இந்த வரையறையைத் தருகிறார். ‘மொழிதான் ஒரு படைப்பின் அடிப்படை அம்சமாக எப்போதும் இருக்கும்’ என்று வலியுறுத்திக் கூறுகிற கான்ஸ்டாண்ட் ஃபெடின் என்ற உருசிய இலக்கிய ஆசிரியர், “எழுத்தாளனுடைய படைப்புத் திறன் அல்லது செய்ந்நேர்த்தி பற்றிய பேச்சு, எப்போதும் மொழியிலிருந்தே தொடங்கப் பட வேண்டும்” என்று கூறினார். படைப்பாளிக்கும் திறனாய்வாளனுக்கும் தரப்படுகின்ற ஒரு பொதுவான விதிமுறை இது.

        இலக்கியத்திற்கு உருவம் தருவது, மொழி. மொழியை முறையாகவும் திறன்படவும் கையாளுகிறபோதுதான், சொல்லுகிற செய்தி முறையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுகிறது. மொழியே சிந்தனையின் கருவி. தெளிவின்றிச் சிந்திக்கப்படுவது, எதுவும் தெளிவின்றியே வெளிப்படுகிறது. மொழியை முறையற்று கையாளுவது, முறையற்றுச் சிந்திப்பதாகவே முடியும். இவ்வாறு மொழித் திறன் இவ்வாறு முக்கியமானதாக உள்ளது.

    4.1.2 மொழித் தளம்

        இலக்கியத்தின் மொழி என்ன என்ன தளங்களிலிருந்து செய்யப்படுகிறது?

    (அ)
    குறிப்பிட்ட காலம்
    (ஆ)
    இடம்
    (இ)
    இலக்கியத்தின் வகை (Genre and type)
    (ஈ)
    படைப்பாளியின் தற்கூற்றுநிலை
    (உ)
    கதைமாந்தர் பின்புலம் கூற்று
    (ஊ)
    வாசகர் / படைப்பு வெளியாகும் இதழ்.

        காலம், இடம் என்பன குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய அல்லது அவ்விலக்கியம் கூறுகிற சமூகச் சூழலும் செய்தியும் சார்ந்திருக்கின்ற தளங்களைக் குறிப்பிடுகின்றன. இவற்றின் விளக்கத்தை இந்தப் பாடத்தின் பிற்பகுதியில் பார்ப்போம்.

    • இலக்கிய வகைகளும் வேறுபாடுகளும்

        தனிநிலைக் கவிதை, வருணனைக் கவிதை, சிறுகதை, புதினம் முதலிய இலக்கிய வகைகள், மொழிநடையின் வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைகின்றன. தனிநிலைக் கவிதையின் முக்கியத் தேவை, உணர்வுகளை முன்னிறுத்துவதும் இசையைத் தழுவுவதும் ஆகலின் மொழியின் தளம் அதற்கேற்ப இருக்கும். வருணனைக் கவிதை அல்லது காப்பிய வகைப்பட்ட கவிதையின் நோக்கம், நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதும் கதை மாந்தர்களையும் அவர்தம் செயல்களையும் சித்தரிப்பதும் ஆதலின், அந்தக் கவிதைமொழி, அதற்கேற்ப அமைந்திருக்கும்.

    • கூற்று நிலை

        புனை கதைகளில் கதைமாந்தர் கூற்றுக்கள் இடம் பெறுகின்றன.     இம்மாந்தர்களின் சமூகப் பின்புலங்கள் வேறுபடலாம்; ஆண் பெண் வயது வேறுபாடுகள் இருக்கலாம். அப்போது, மொழியின் தளமும் வேறுபடும். பெரும்பாலான சூழல்களில் படைப்பாளியின் (நேரடியான) கூற்றுநிலைகள் வெளிப்படுகின்றன.     மற்றும்     கதை     மாந்தர்கள் கூற்றுக்களினிடையேயும் இவை இடம் பெறுகின்றன. கதைமாந்தர் கூற்றுநிலையிலிருந்து, இத்தகைய கூற்று நிலை, மொழிநடையில் வேறுபட்டு அமைந்திருக்கும்.

    • மொழி நடையும் வாசகரும்

        இறுதியாக,     குறிப்பிட்ட     இலக்கியம்     யாருக்காக எழுதப்படுகிறதோ, அத்தகைய வாசகர்களை மனதில் கொண்டு மொழிநடை மாறுபடும். காட்டாகக் குழந்தை இலக்கியத்தின் மொழிக்கும் கற்றோர் மொழிக்கும் உள்ள வேறுபாடு, வாசகர் தளத்தையொட்டியதே. சில படைப்பாளிகள் பத்திரிகையின் தேவைக்கேற்பத் தம் மொழியை அமைப்பர். ஒரே ஆசிரியர், வணிகப்பத்திரிகையில் எழுதுவதற்கும் இலக்கிய சஞ்சிகையில் எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. நடைமுறையில் இது கண்கூடு.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2017 12:27:04(இந்திய நேரம்)