Primary tabs
4.5 மொழியியலும் மொழியின் எல்லையும்
இப்பகுதியில் மொழியை ஆராய்கின்ற மொழியியல் பற்றியும், மொழியின் வீச்சிலும் எல்லைகள் உண்டு என்பதையும் பார்ப்போம்.
4.5.1 மொழியும் மொழியியலும்
மொழியைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி, மொழியியலாகும் (linguistics). இதில் விளக்கமுறை, வரலாற்றியல், ஒப்பீடு முதலிய பல முறைகள் அல்லது துறைகள் உண்டு. டி.சாசூர் முதற்கொண்டு புகழ்பெற்ற பல மொழியியலறிஞர்கள், மொழியாராய்ச்சிக்கு மிகச் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார்கள். இந்த மொழியியல் அறிஞர்களில் பலர், இலக்கியத்திலும், இலக்கியம் அக்கறை கொள்கின்ற பல சிந்தனைத் துறைகளிலும் ஆர்வம் உடையவர்கள்; ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள். இலக்கிய மொழியை, மொழியியல் துணைக்கொண்டு ஆராய்வது மொழியியல் அணுகுமுறை என்றும் நடையியல் (Linguistic Approach; stylistics) என்றும் வழங்கப்படுகிறது. ரோமன் யகோப்சன், ஸ்டீபன் உல்மன், சாமுவேல் லெவின், சாட்மன், ஃபவுலர், ரிஃபாத்தேர், எம்.ஏ.கே.ஹாலிடே, எம்.எல்.பிராத் முதலியோர் இத்துறையில் ஆழமாக ஈடுபட்டவர்களில் சிலர்.
இலக்கியத்திற்கு அடிப்படையானது அல்லது இலக்கியம் என்றால் இன்னது என்று இனங்காட்டுவது, இலக்கியத்தனம் அல்லது இலக்கியப் பண்பே (Literariness) என்று கூறுவர், மேலும் அது மொழியின் விசேடமான பண்புகளில் உள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கருதுகோளே, மொழியியல் வழிப்பட்ட திறனாய்வுக்கு அடிப்படையாகும்.
மொழி, பொதுப் பண்புகள் கொண்டதெனினும், இலக்கியத்தில் இடம் பெறுகிறபோது, அதற்கு இலக்கியமாக்குகின்ற சக்தியிருக்க வேண்டும். இது ஒலி, சொல், சொற்றொடர், வாக்கியம் முதலிய கூறுகளிலும் அவற்றின் வருகை முறைகளிலும், இலக்கியத்திற்கான சிறப்பியல் கூறுகளைப் பெற்று வருகிறது; பொதுமொழியிலிருந்து வித்தியாசப்பட்டும் பிறழ்ந்தும் வருகிறது (deviation / difference). முன்னர் ஓரிடத்தில் சொன்னது போல, ‘நான் என் கண்களால் கற்பினுக்கு அணியாம் சீதையைக் கண்டேன்’ என்பது இயல்பு மொழியெனின், கவிதைக்கெனப் ‘பிறழ்தொடராக’க் ‘கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்’ என்று வருவது போன்றது இது.
4.5.2 மொழியும் அதன் எல்லையும்
மொழியே குறிக்கோள் அல்ல. இலக்கியத்தில் ‘என்ன’ என்பதுதான் முதன்மையானது. அதனோடு சேர்ந்தது தான் ‘எப்படி’ என்பது. சொல்லும் பொருள் இன்றிச் சொல்லுதற்குரிய மொழி இல்லை. பொருளும் பொருள் இன்றிச் சொல்லுதற்குரிய மொழி இல்லை. பொருளும் மொழியும் உடன் நிகழ்வு ஆகலாம். ஆனால், நோக்கம், மொழி ஆகாது. சொல்ல வேண்டிய வாழ்க்கையே முதன்மை. மொழி முன்னிறுத்திக் கொண்டு நிற்குமானால் அழகும் சிதையும்; இலக்கியத்தின் நோக்கும் சிதையும்.
மொழியால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. மொழி - மொழியை பயன்படுத்தும் படைப்பாளி - அதனை உள்வாங்க வேண்டிய வாசகர், இந்த மூன்று இலக்குகளின் இடையிலும் எப்போதும் தவிர்க்க முடியாத இடைவெளி இருக்கிறது. போதாமை அல்லது இடைவெளி, மொழியின் எல்லையாக மட்டுமல்லாமல், அதன் சிறப்பான - தேவையான - ஒரு பண்பாகவும் இருக்கின்றது. ஏனென்றால் திறனாய்வாளனுக்கு அப்போதுதான் தேடும் வேலை கூடுகிறது.
மொழி அல்லது சொல்லின் எல்லையைக் கவிஞர் சி.மணியின் சொல்லில் சொல்லிப் பார்க்கலாம் ;
சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை.
கோட்டை கட்டியபடியா
குழந்தை பிறக்கிறது.
என்றோ எப்பொழுதோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில் வரும்.