தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.6 தொகுப்புரை

        இலக்கியம் எனும் பயிர்க்கு நிலமாக இருப்பது மொழி. சிந்தனைக்கு வடிவம் தரும் மொழி, அதன் தெளிவையும் அதன் பல்வேறு கோலங்களையும் எடுத்துக்காட்டுகிறது. இலக்கியத்தின் மொழி, காலம், இடம் மற்றும் குறிப்பிட்ட படைப்பு, படைப்பாளி ஆகிய தளங்களில் செயல் படுகிறது. இந்தச் செயல்பாடு அறிவு என்ற நிலையிலும் உணர்வு என்ற நிலையிலும் ஆகிய இருமுறைகளிலும் நிகழ்கிறது. இவற்றோடு குறிப்புணர்த்துதல், விருப்பம் உணர்த்துதல் ஆகிய பொருள் நிலைகளையும் கொண்டது. மொழி, இலக்கியத் திறனாய்வு, மொழியின் இத்தகைய ஆற்றலைத் தனிநிலையில் அல்லாமல், அதன் சூழமைவையும் பயன் பாட்டையும் கொண்டு மதிப்பிடுகின்றது.

        மொழியின் அழகு, அதன் ஒலி வடிவம் முதற்கொண்டு, சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகிய அதன் கூறுகளிலும், அந்தக் கூறுகளின் சேர்க்கைகளிலும் புலப்படுகிறது. உவமம், படிமம், உருவகம், குறியீடு ஆகியவை இவ்வாறு புலப்படும் சில உத்திகளாகும். படைப்பாளி, மொழிக் கூறுகளின் சில வித்தியாசப்பட்ட பண்புகளையும், சிறப்பியல் கூறுகளையும் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த மொழித்திறனை, மொழியியல் ஆராய்கிறது. இவ்வாறு ஆராய்ந்த மொழியியல் வழித் திறனாய்வாகும். இது அறிவியல் முறையோடு கூடிய ஒரு திறனாய்வாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ அந்தக் காலத்தின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும் என்று சொல்லுவதில் உள்ள நிலைப்பாடுகள் என்ன?

    2.

    வட்டார மொழி என்றால் என்ன?

    3.

    மொழியியல் வழிப்பட்ட திறனாய்வு என்றால்என்ன?

    4.

    மொழியின் செயலில் இடைவெளி அல்லது போதாமை இருக்கிறது- யார் யாருக்கு எதற்கு இடையே?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 18:09:44(இந்திய நேரம்)