Primary tabs
6.2 திறனாய்வும் அறிவியலும்
திறனாய்வு, ஒரு கலையா? அல்லது, அறிவியலா? இப்படியொரு கேள்வியை நாம் கேட்டுக் கொள்ளலாம்.
கலைத்தன்மை
திறனாய்வில் படைப்பாற்றல் தன்மை, ஓரளவு இருக்கிறது. மேலும் திறனாய்வு என்பது சுவையாகவும் மனங்கொள்ளுமாறும் செய்யப்படுவது; நேர்த்தியாகச் செய்யப்படுவது. எனவே, இத்தன்மைகளைக் கொண்டு அதனைக் கலை, எனலாமா? ஆனால் திறனாய்வைக் கலையென்று சொல்லுவதற்கு இந்தப் பண்புகள் போதாதவை.
அறிவியல் தன்மை
அப்படியானால், திறனாய்வை அறிவியல் என்று சொல்லலாமா? இயற்பியலோ, வேதியியலோ போன்ற ஓர் அறிவியலாக இது இருக்க முடியாது. ஆனால், அறிவியலுக்குரிய சில முக்கியமான பண்புகளைத் திறனாய்வு பெற்றிருக்கிறது எனலாம். தருக்கம் (Logic), அகவயச் சார்பு அற்ற, புறவயநிலைக்குட்பட்ட மனநிலை (objectivity), காரணகாரிய முறையிலமைந்த கண்டறிதல் ஆகிய வழிமுறைகள் அல்லது பண்புகள் திறனாய்வில் இருக்கின்றன. ஆனால், இயற்பியல் முதலிய அறிவியல்களில் இருப்பது போன்று இவை திறனாய்வில் மையமாகவும், நிறைவாகவும் இருப்பதில்லை. பல சமயங்களில் இவற்றை மீறியும் வேறுபட்டும் திறனாய்வு செய்யப்படுகிறது.
நல்ல திறனாய்வு
ஒரு நல்ல திறனாய்வு என்பது, அறிவியலின் பண்புகளையும் அதன் கூறுகளையும் இயன்ற அளவு கொண்டிருக்க வேண்டும். மனப்பதிவாக, அந்த அந்த நேரத்தில் தோன்றும் அபிப்பிராயங்களையெல்லாம் திறனாய்வு என்று சொல்ல முடியாது. எனவே, அறிவியலோடு திறனாய்வு நெருங்க வேண்டும்; அதே சமயத்தில் படைப்பாற்றல், நேர்த்தி முதலிய கலைப் பண்புகளையும் திறனாய்வு ஒதுக்கிவிட முடியாது.
6.2.1 திறனாய்வின் மொழி
மொழியை ஆள்வதில் இலக்கியத்திற்கென்று ‘ஒரு’ மொழி இருக்கிறது. இதனுடைய சில சிறப்பியல் தன்மைகளை ‘இலக்கியமும் மொழியும்’ என்ற பாடத்தில் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மேலும், அதன் உள்ளும் அதன் அதன் வகைமை, நோக்கம், சூழல், சென்று சேரும் இலக்கு முதலியவற்றிற்கு ஏற்ப இந்த மொழி அமைந்திருக்கும். திறனாய்விலும் மொழியின் இத்தகைய கூறுகள் தனிச்சிறப்புத் தன்மை பெற்றிருக்கும்.
மொழிநடை
திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தைச் சார்ந்தும், அதனைத் தளமாகக் கொண்டும் அமைவது. ஆனால், அதனுடைய மொழி ஆளுகை, அந்த இலக்கியத்தின் மொழி நடையையோ, மொழி அமைப்பையோ கொண்டிருப்பதில்லை. மாறாகக் குறிப்பிட்ட அந்த இலக்கியம் என்ன வகையான செய்தியைக் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ற நடையையும் மற்றும் திறனாய்வு செய்கிற ஆசிரியனுடைய பயிற்சி மற்றும் பாணியையும் தேவையையும் கொண்டு அமைந்திருக்கும். மேலும் யாருக்குத் திறனாய்வுப் பற்றிய செய்திகள் செல்ல வேண்டும் என்று திறனாய்வாளன் கருதுகிறானோ அதற்கு ஏற்றவாறும், மேலும் (இன்றையக் காலத்தைப் பொறுத்த அளவில்) திறனாய்வு பிரசுரமாகவும் ஊடகத்தின் தன்மைக்கு ஏற்றவாறும் திறனாய்வின் மொழி அமைந்திருக்கும் என்று கருதலாம்.
மொழிநடை வேறுபாடுகள்
எடுத்துக்காட்டாக, நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை முதலியோருடைய ஈட்டுரைகளை நோக்குவோம். இவற்றை, அன்றைய திறனாய்வுகள் எனக் கொண்டால், திருவாய்மொழியின் இலக்கியச் சுவைக்கு ஏற்றதாகவும், அதனுடைய செய்தியாகிய வைணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறதற்கு உதவுவதாகவும், மேலும், உரையாசிரியரின் பயிற்சியைக் காட்டுவதாகவும் அந்த உரைகளின் மொழிநடை அமைந்திருக்கிறது என்று கூறலாம். ரசனை முறைத் திறனாய்வாளராகிய டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மொழிநடை, எளிமையும் தெளிவும் அழகும் கொண்டு, அவருடைய ரசனைக்கு ஏற்ற மாதிரியாகவே இருக்கிறது. பின்னால் தமிழ்த் திறனாய்வாளர்கள் பலர், மேலைநாட்டு நூல்களையும் கொள்களையும் பின்பற்ற நினைப்பவர்கள்; ஆதலால் அவர்களின் மொழிநடை, ஆங்கில மொழித் தாக்கமுடைய ஒரு கலப்பு நடையைக் கொண்டிருக்கிறது.
திறனாய்வின் நடை, வாசிப்பதற்கும் அதனை அப்படியே புரிந்து கொள்வதற்கும் ஏற்ற விதத்தில் எளிமையும் தெளிவும் கொண்டிருக்க வேண்டும். திறனாய்வாளனின் ‘மேதாவித் தனத்தைக்’ காட்டுவதல்ல, திறனாய்வும் மற்றும் அதன் மொழியும் நல்ல மொழி என்பது நல்ல சிந்தனை அறிகுறி.