தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விளக்க முறைத் திறனாய்வு

      • 2.1 விளக்க முறைத் திறனாய்வு

            காலம், இடம் எனும் தளங்களையும் வாசகர்களின் அறிதிறன்கள், ஏற்புமுறைகள் முதலியவற்றையும் எதிர்கொண்டு வாழ்கிற திறனை இலக்கியம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கலைஞனால் இலக்கியம் படைக்கப்படுவதேயெனினும், அது புதிது புதிதாய் உயிர்க்கிற    அற்புதப் பண்பினைப் பெற்றிருக்கிறது. இத்தகைய    திறம் அதன்    உள்ளார்ந்த பண்புகளிலும் சூழமைவுகளிலும்    பொதிந்து கிடக்கிறது. அவ்வாறு பொதிந்து கிடப்பதைப் புரிந்து கொள்கிற போதுதான் கலைப் பொருள் தொடர்ந்து நுகரப்படுகிறது; வாழ்கிறது.

        • இலக்கியம் நுகர்திறனும்

          இலக்கியம் மட்டுமல்ல; எந்தப் பொருளும் சரியான நுகர்திறன் பெற்றிருந்தால் மட்டுமே வாழும். சரியான பயன், சரியான நுகர்திறன் பெற வேண்டுமானால், அது நுகர்வோனால் சரியாகப் புரிந்து கொள்ள அல்லது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. ‘ஒரு பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ, மேலும் அதனைக் கூடுதலாக அறிந்து கொள்ளவோ உதவுகிற வகையில் அந்தப் பொருளை வேறுசொற்களில் (re-phrasing)     மீளவும்     சொல்லுதல்'     என்பதே விளக்கமுறைத் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

      2.1.1 அறிஞர் விளக்கம்

          விளக்கமுறைத் திறனாய்வு என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி என்பவர் ‘ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு    முறையில்    அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி     பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது' என விளக்குகிறார்.

          மேலும், இதைத் தெளிவுபடுத்த வேண்டுமானால் ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ சார்ந்ததாகிய இன்னொரு பனுவலை (Alternative text) தருவது விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது.

      உதாரணம் :

      செருக்குஞ் சினமும் சிறுமையு மில்லார்
      பெருக்கம் பெருமித நீர்த்து

      இது குற்றம் களைந்தவர்களின் செல்வம் பற்றிய திருக்குறள் வாசகம். ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த வாசகர்களுக்கு இக்குறளின் கருத்து சரிவரப் போய்ச் சேராது என்று கருதிய பரிமேலழகர்,    காலத்தின் அத்தகைய இடைவெளியை நிரப்பும் பொருட்டு “மதம் - செல்வக் களிப்பு சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார். செல்வம்,     நல்வழிப்பாடும் நிலைபேறும் உடைமையின் மதிப்புடைத் தென்பதாம்” என்று குறிப்பிடுகிறார். தமிழில் உரையாசிரியர்களின் பங்களிப்பு, விளக்கமுறைத் திறனாய்வைச் சார்ந்ததாக அமைகின்றது.

      சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற
      இன்றி யமையாது இயைபவை யெல்லாம்
      ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே

      என்று தொல்காப்பியர் மரபியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் விளக்கமுறைத் திறனாய்வு என்பதைக் குறிப்பிட்ட இலக்கியப் பனுவலின் உட்பொருளையும், அதனோடு இணைந்த, பொருத்தமான பிற வசதிகளையும் ஏற்புடையதாகச் சொல்லுதல் என்பதாக வரையறை செய்யலாம்.

      2.1.2 விளக்க முறையின் தளங்கள்

      விளக்கமுறைத்     திறனாய்வு     ஒன்றன்     முறையில் நின்றுவிடுவதில்லை அது வளர்நிலைத் தன்மை கொண்டது.

      (1) படைப்பின் பண்புகள்
      (2) விளக்கம் கூற முயல்வோரின் நோக்கம்
      (3) பயிற்சி
      (4) மொழிவளம்
      (5) விளக்கம் யாருக்காக என்னும் பார்வை


      இந்த ஐந்து வகைக் காரணங்களால் அல்லது தளங்களினால் விளக்கங்கள் வளர்நிலை பெற்று அமைகின்றன.

          எடுத்துக்காட்டாகச்     சொல்வதனால்,     கம்பனுடைய இராமகாதைக்கு எழுந்த பல்வேறு விளக்கங்களை இங்கே சுட்டிக் காட்டலாம். வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள், இராமகாதையைச் சரணாகதி தத்துவத்தின் சாரமாக விளக்கிக் காட்டுவர்.    அழகு,     ரசனை, நயம்    ஆகியவற்றில் ஈடுபாடும் பயிற்சியும் உடையவர்கள் கம்பனுடைய பாடல்களில் ஈடுபட்டு அவற்றின்    உவம நயத்தையும், சொற்பொருள் திறனையும், இசை நேர்த்தியையும் விளக்கி மகிழ்கின்றனர். சமயத்தை மறுக்கின்ற பகுத்தறிவுக் கொள்கையினர், கம்பனுடைய பாடல்களில் வெறுமனே பாலுணர்வும், ஆரியர் மேம்பாட்டு உணர்வும் இருப்பதாக விளக்குவர். விளக்கமுறைத் திறனாய்வு இவ்வாறு பலவகையான விளக்கங்களுக்கு இடம் தரக்கூடும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:50:37(இந்திய நேரம்)