Primary tabs
-
1.3 உரைகளின் பணி
மனிதனின் சமூக வாழ்க்கையையும், தனிமனித உணர்வுகளையும் சொல்லுவதும், மனித வாழ்வு மேன்மையுறக் கலையியல் பண்புகள் மூலமாக உதவுவதும் இலக்கியத்தின் பணியாகும். மொழியின் அமைப்பு, அதன் பல்வேறு கூறுகள் முதலியவற்றை முறைப்படுத்திச் சொல்லி, அம்மொழியை வழிப்படுத்துவது இலக்கணத்தின் பணி. இந்தப் பணிகளைச் செவ்வையாகவும், இடையறாமலும் தொடர்ந்து செய்திட உதவுவது உரைகளின் பணியாகும்.
ஒரு காலத்தில் - அந்தக் காலத்தின் பண்புகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப - எழுதப்பட்ட இலக்கியங்களும் இலக்கணங்களும், காலம் என்ற பரந்த வெளியில் தெளிவாகப் புரியமுடியாமல் போவதுண்டு. அருகிய சொல்லமைப்புகள், சொற்பொருள் மாற்றங்கள், பண்பாட்டு வழக்காறுகளில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றின் காரணமாகப் ‘புரிதல்’ என்பதில் இடைவெளிகள் ஏற்படக்கூடும். மூலப் பனுவல்களின் நோக்கம், தலைமுறைகள் கடந்து அவை எல்லார்க்கும் பயன்படவேண்டும் என்பது. கால இடைவெளிகள் அல்லது தலைமுறை இடைவெளிகளை நீக்குவதில் உரைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. காட்டாகப் பட்டினப்பாலை,
முட்டாச் சிறப்பின் பட்டினம் (அடி: 218)
என்று சொல்லுகிறது. ‘முட்டா...’ என்ற சொல் வழக்கு, சங்க காலத்தில் பெருவழக்காக இருந்தாலும், பின்னாளில் குறிப்பாக நம்முடைய காலத்தில் அது அருகிய வழக்கு. எனவே புரிதலில் ஒரு தகவல் இடைவெளி (Communication gap) விழுகிறது. நச்சினார்க்கினியரின் உரை, இந்த இடைவெளியைக் குறைக்க வருகிறது. “குறைவுபடாத தலைமையை உடைய பட்டினம்” என்று உரை சொல்லுகிறது. இப்போது அந்தப் பாடல் கூறவந்த பொருளும் அதன் சிறப்பும் நமக்கு எளிதாகத் தெரியவருகின்றன. இவ்வாறு உரை, மூலப்பனுவலுக்கும், அதனை வாசிக்கிற பல்வேறு தலைமுறையினர்க்கும் தகவல் இடைவெளிகள் விழாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதுவே, உரைகளின் அடிப்படையான பண்பும் பயனும் ஆகும். திறனாய்வின் அடிப்படையும் இதுதான்.