தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தொகுப்புரை

    • 1.5 தொகுப்புரை

           இலக்கியம் பல நெறிகளையும் பல நிலைப்பாடுகளையும் கொண்டு வளர்கிற கலை. குறிப்பிட்டதொரு காலச் சூழ்நிலையில் தோன்றினாலும், பல காலங்களிடையேயும் பல தலைமுறையினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வாழக்கூடிய திறன்களையும் நோக்கங்களையும் கொண்டதாக அது இருக்கிறது. அதனுடைய உள்ளார்ந்த பண்புகள் இவையெனினும், கால வளர்ச்சியில் மொழிவழக்குகளிலும்     பண்பாடு முதலிய வழக்குகளிலும் தோன்றக்கூடிய     தகவலிய     இடைவெளிகளை     உரைகள் அகற்றுகின்றன.     இலக்கிய     இலக்கண     நூல்களை, அவ்வக்காலங்களுக்குப் பொருந்துமாறு செய்வதில் உரைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. உரைநடை வளர்ச்சிக்கும் இலக்கியம் குறித்த திறனாய்வின் வரலாற்றுக்கும் மொழிநிலை குறித்த அறிவியல் மற்றும் பயன்பாட்டு     வளர்ச்சிக்கும் உரைகள் பணியாற்றுகின்றன.

           உரைகள் என்பவை சொற்பொருள் விளக்கம் தருகின்றன ; கருத்துரைகள் தருகின்றன ; மேற்கோள்கள் தருகின்றன ; பிறர் கருத்துகளைக் கூறி ஏற்கவோ, மறுக்கவோ செய்கின்றன ; தோன்றக்கூடிய ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும் விடை தருவதுபோல் விளக்கங்கள் தருகின்றன. புதிய வழக்குகளைப் புதிய செய்திகளைச் சொல்லுகின்றன. மூலநூலுக்கு உற்ற தோழியாக இருந்து வருவது உரை. திறனாய்வும் இந்தப் பணியைத்தான் செய்கிறது. எனவே, தமிழ்த் திறனாய்வு என்பதை அறிந்து கொள்ளவிரும்புவோர், தமிழில் தோன்றியுள்ள உரைகளையும் உரை மரபையும் புரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

        தன் மதிப்பீடு : வினாக்கள் - II
      1.
        தமிழில் இன்று கிடைப்பவற்றுள் முதல் உரையாகக் கருதப்படுவது எது?
      2.
      திறனாய்வுக்கும்     உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள் எவை? 
      3.
      தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலாக உரையெழுதியவர் யார்?
      4.
        சிவஞான முனிவர் எழுதிய உரையின் பெயரைக் குறிப்பிடுக.

      5.

      “முட்டாச் சிறப்பின் பட்டினம்” - என்பதற்கு நச்சினார்க்கினியர்     கூறியுள்ள பொருளைக் குறிப்பிடுக.

      6.

      யாப்பருங்கல விருத்தியுரை, தமிழின் எதை அறிவதற்குச் செய்திகளைத் தருகிறது?

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 10:20:43(இந்திய நேரம்)