தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-உரை தோன்றுவதற்குரிய சூழல்கள்

  • 1.4 உரை தோன்றுவதற்குரிய சூழல்கள்

        தமிழில் உரைகள் தோன்றியதற்குரிய அடிப்படைச் சூழல்கள்:     
    (1) சங்க கால வீழ்ச்சிக்குப் பிறகு வந்த வேற்றரசர்களின் ஆட்சிக் காலங்களில், மீண்டும் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிக்கவும், அவை பற்றிச் சிந்திக்கவும் கூடிய ஆர்வநிலை ஏற்பட்டது; அதேபோது, மொழிநடை, பண்பாட்டு மாற்றங்கள், செய்திகளின் அருமைகள் முதலியவை தலைமுறைகளின் இடைவெளி காரணமாகச் சிறிய சிறிய தடைகளை     ஏற்படுத்தின. எனவே உரை      கூறுவது அவசியமாயிற்று.

        (2) சங்க     இலக்கியப்     பாடல்கள் தனித்தனியாக எழுதப்பட்டவை ; பாடப்பட்டவை ; இவை, கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு- தொகுக்கப்பட்டன. தொகைகளாக வரும்போது, மொத்தமாகப் படிப்பதற்கும் உரை கூறுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

        (3) சமணத் துறவிகளின் செயல்பாடுகளினால் பல சமணப் பள்ளிகள், சங்கங்கள் ஏற்பட்டன ; அப்போது இலக்கண இலக்கிய நூல்களும்     தத்துவங்களும்     பகிர்ந்து கொள்ளப்பட்டன; விவாதிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலைகள் தமிழில் உரைகள் தோன்ற நல்ல தளம் அமைத்தன.

    1.4.1 உரைகள் வரலாறு

        தமிழில் இன்று கிடைப்பவற்றுள், முதல் உரையாகக் கருதப்படுவது இறையனார் களவியலுரை ஆகும். இந்த உரை, நக்கீரர் பெயரால் வழங்குகிறது. கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றது. இதன் நடை, உரைநடைவளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாகும். இதனைத் தொடர்ந்து, தொல்காப்பியம் பலருடைய     கவனத்தைக் கவர்ந்தது. இளம்பூரணர் என்பார் முதன்முதலாகத் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதினார். அதன் பின்னர், சேனாவரையர் பேராசிரியர்,     முதலிய பலர் உரை எழுதினார்கள். தொல்காப்பிய உரைகளுள், பொருளதிகாரத்துக்குப் பேராசிரியர் எழுதிய உரை, தமிழில் இலக்கியக் கொள்கை பற்றி எழுத மிகவும் துணை நிற்பது. கி.பி.11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் உரைகள் அதிகம் தோன்றின. தொடர்ந்து உரைகள் காலம்தோறும் எழுதப்பட்டு வருகின்றன.

        20-ஆம் நூற்றாண்டிலும் உரைகள் பல தோன்றியுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் எழுதிய திருவாசக உரையாகும் கதிர்மணி விளக்கம் என்பது இதன்பெயர். மறைமலையடிகள் எழுதிய முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை என்ற இரண்டும் உரைகளாக மட்டுமல்லாமல், இக் காலத்துத் தமிழ்த் திறனாய்வின் தொடக்க கால முயற்சிகளாகவும் கருதப்படுகின்றன. உரை என்பதற்கும் திறனாய்வு என்பதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவே என்பதனை மறைமலையடிகளின்     இந்த     இரு உரைகளும் நமக்குக் காட்டுகின்றன.

        தமிழில் வழங்கும் இன்றைய திறனாய்வின் வரலாறு எழுதுகிறவர்கள், இதனைக் குறிப்பிடாமல் போவதில்லை. அடுத்து, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய சிலப்பதிகார உரையும், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய சங்க இலக்கிய உரைகளும்     குறிப்பிடத்     தக்கவை. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்,      கம்பராமாயணத்துக்கு விரிவான உரை எழுதியுள்ளார். இதிலுள்ள விளக்கங்களும் ஒப்பீட்டுக் குறிப்புகளும் எடுத்துக்காட்டுப் புராணக் கதைகளும் குறிப்பிடத்தக்கவை.     சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு சி.கே.சுப்பிரமணிய     முதலியார்     விளக்கமான உரையை எழுதியுள்ளார்.

    1.4.2 உரைகளின் வகைகள்

        எவ்வகையான நூல்கள் மீது உரைகள் அமைகின்றன என்பதன் அடிப்படையில் உரைகளை முக்கியமாக இரண்டாகக் கொள்ளலாம். ஒன்று இலக்கண உரைகள். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றுக்கு உரை எழுதுவது பழைமையானது; அதே சமயத்தில் தொடர்ந்து வழங்கி வருவதும் ஆகும். இரண்டு - இலக்கிய உரைகள். முக்கியமாகப் பழைய இலக்கியங்களுக்கான உரைகள் பலரால் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இலக்கணம், இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் உரையெழுதியவர்கள் மிகவும் குறைவு.     நச்சினார்க்கினியர்      தொல்காப்பியத்துக்கும் உரையெழுதியுள்ளார் ; அதே சமயத்தில் பத்துப்பாட்டு எனும் சங்க இலக்கியத்தொகை நூலுக்கும், சீவக சிந்தாமணி எனும் காப்பிய     நூலுக்கும் உரை கண்டுள்ளார். இலக்கியமும் இலக்கணமும் அல்லாமல், சமய தத்துவ நூல்களுக்கும் உரை எழுதுதல், ஒரு தேவையாகவும் முறையாகவும் உள்ளது. மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு, சிவஞான மாபாடியமஎனும் உரையை சிவஞான முனிவர் எழுதியுள்ளதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் தத்துவ நூல்களுக்கு எழுந்த உரைகள் மிகவும் குறைவேயாகும். இலக்கியத்திற்கு அமைந்த உரைகளே அதிகம்.

    1.4.3 உரைகளின் முக்கியத்துவம்

        மூலப் பனுவல்களே, முதன்மையும் முக்கியத்துவமும் உடையவை என்றாலும்,     பெரும்பாலான உரைகள் மூலப் பனுவல்களின்     அளவுக்கு - ஆனால், 'உரைகள்' என்ற எல்லைக்குள் - முக்கியத்துவம்     உடையனவாக உள்ளன. அடியார்க்கு நல்லார் உரை, தமிழின் நாடகம் பற்றியும் இசை பற்றியும் அறிவதற்கு இன்றியமையாத மூலமாக உள்ளது. சைவ சித்தாந்த     வரலாற்றில்     மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதம் எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவிற்கு, சிவஞானமுனிவரால் எழுதப்பட்ட சிவஞான மாபாடியம் எனும் உரையும் முக்கியமானதாக விளங்குகிறது. சில உரைகள், மூல நூல்களைவிட முக்கியத்துவமும் பெருமையும் பெற்றுவிடுகின்றன. காட்டாக, இறையனார் களவியல் உரை மற்றும் யாப்பருங்கல விருத்தியுரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

        தமிழின் மொழி வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வரலாறு முதலியவற்றை எழுத இலக்கண இலக்கிய நூல்கள் உதவுகின்றன. அதுபோலவே     உரைகளும்     உதவுகின்றன. காட்டாக, தொல்காப்பியம் - சொல்லதிகாரத்துக்குச்     சேனாவரையர் ழுதிய உரை, தமிழ்மொழியில் சொற்பாகுபாடுகள், சொல்லமைப்புகள் முதலியவற்றை அறியப் பெரிதும் உதவுகின்றது. அதுபோல் தமிழின் கவிதையியலை (poetics) அறிவதற்கு யாப்பருங்கலத்துக்கு அமைந்த     விருத்தியுரை,     கவனத்திற்குரிய பல செய்திகளையும் பண்புகளையும் தருகிறது.

        உரைகள் யாப்பு வடிவில் அமைந்தவை அல்ல. அவை உரைநடையிலேயே அமைந்துள்ளன. தமிழின் உரைநடை (prose) வளர்ச்சியில் இந்த உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. தொடரமைப்பு, சொல் தேர்வு, விளக்கமுறைக்கான பிரத்தியேகமான நடை, வினா-விடை பாணியிலான நடை, தெளிவு, ஆற்றொழுக்கான போக்கு முதலியவற்றைக் கொண்டுள்ள இந்த உரைகள், தமிழ் உரைநடையின் சிறந்த பண்புகளாக உள்ளன. உரையாசிரியர்களே அன்று சிறந்த உரைநடையாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்..

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:38:13(இந்திய நேரம்)