Primary tabs
-
2.0 பாட முன்னுரை
ஒரு காலத்தே எழுதப்பட்ட நூலுக்கு இன்னொரு காலத்திலோ அதே காலத்திலோ (அது அருகிய வழக்கு) எழுதப்படுகின்ற - பெரும்பாலும், உரைநடையிலான - விளக்கத்தை, உரை என்கிறோம். தலைமுறை இடைவெளியையும், எழுதியோன்- படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும் குறைக்கின்ற நோக்கத்தில் அமைகின்ற உரைகள், தமிழ் மரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இன்று, திறனாய்வுகள் செய்கிற வேலையை, அன்று இந்த உரைகள் ஓரளவு செய்தன என்று சொல்லலாம். இந்த உரைகள் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களுக்கு அமைந்தவையென்றும், பத்துப்பாட்டு, சிலம்பு முதலிய இலக்கிய நூல்களுக்கு அமைந்தவையென்றும் இரண்டு நிலைகள் கொண்டவை என அறிகிறோம். உரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம் வகிக்கின்றன. மேலும், சமூக, பண்பாட்டு வரலாற்றிலும் அவை சிறப்பான இடம் வகிப்பதற்குரியவை. பெரும்கவிஞர்களுக்கு அன்று இருந்த அதே தகுதி, திறன் ஆகியவற்றுடன் விரிவான அறிவுப் பரப்பும் கொண்டவர்களாக உரையாசிரியர்களில் பலர் திகழ்ந்தனர்.
-