தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க இலக்கிய உரைகள் - 1

  • 2.3 சங்க இலக்கிய உரைகள் - 1

       சங்க     இலக்கியம்     என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை கி.பி.ஐந்து     அல்லது     ஆறாம்     நூற்றாண்டுவாக்கில் தொகுக்கப்பட்டனவாகக் கூறப்படுகின்றன.     தொகுக்கப்பட்ட காலத்துக்குப் பின்னர்,     இவற்றுக்குக்     குறிப்புரைகளும், பொழிப்புரைகளும் எழுதப்பட்டன. இவற்றை யார் எழுதினார்கள் என்று தெரியாவிட்டாலும், இவை முக்கியமான இரண்டு பணிகளைச் செய்தன. ஒன்று, இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன. இரண்டு, பின்னால், சற்று விரிவாக உரையெழுத முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்த.

       பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படைக்கு மட்டும் (நச்சினார்க்கினியருக்கு முன்பு எழுதப்பட்ட) நான்கு பழையவுரைகள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின் ஆசிரியர்களுடைய பெயர்களில் பரிமேலழகர் முதற்கொண்டு பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.     ஆனால்     எதுவும் நிறுவப்படவில்லை. இது போலவே, எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை தவிர     ஏனையவற்றுக்கும் பழையவுரைகள் வெளிவந்திருக்கின்றன. பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும் சேர்த்து     நச்சினார்க்கினியர்     (14ஆம் நூற்றாண்டு) உரையெழுதியிருக்கிறார். இவரே, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய கலித்தொகைக்கும் முழுதாக உரையெழுதியிருக்கிறார்.

       சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள - ஆசிரியர் பெயர் தெரியாத பழைய உரைகளில் - புறநானூற்றுக்குள்ள பழைய உரை, மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது. இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர், “இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர்,     அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக” இந்த உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார். திணை, துறை பற்றிய உணர்வும், புறநானூற்றுக் காலத்திய வரலாறு பற்றிய உணர்வும், இலக்கிய மரபும் நன்கறிந்த திறனும் புறநானூற்று உரையில் புலப்படுகிறது. இவர் வேதத்திலும் சமயத்திலும் பெரும் ஈடுபாடு உடையவர். அதனுடைய பிரதிபலிப்பு உரையில் உண்டு.

   2.3.1 சங்க இலக்கிய உரைகள் - 2

       சங்க இலக்கியங்களுக்குச் சுருக்கமான மற்றும் ஆசிரியர் பெயர் தெரியாத பழைய உரைகள் அல்லது குறிப்புரைகளன்றிப் புகழும் பெருமையும் வாய்ந்த உரையாசிரியர்களால் எழுதப் பெற்ற விரிவான உரைகள் இடம் பெற்றவை கலித்தொகை, பரிபாடல் மற்றும் பத்துப்பாட்டு ஆகியவையேயாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரண்டு தொகைகளிலுமே நச்சினார்க்கினியரின் பங்களிப்பு இருக்கின்றது.

       கலித்தொகைக்கு அமைந்த நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியர் வழிநின்று அகப்பொருள் இலக்கண உணர்வோடு கூடியதாக அமைகிறது. மேலும், கலித்தொகையின் அமைப்பு, கூற்று நிலைகளுடன் கூடிய நாடக அமைப்புடன் கூடியது. நச்சினார்க்கினியரின் உரை, இந்த அமைப்பு முறையை நன்குணர்ந்து அதற்கேற்ப அமைகிறது. அடுத்து எட்டுத் தொகையில் பரிபாடலுக்குச்     சிறந்த உரையெழுதியவர், திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஆவார். இதன் பதிப்பாசிரியராகிய உ.வே.சா. கூறுவர் : “நுணுகி ஆராயின், திருக்குறள் உரையிலும் இவ்வுரையிலும் ஒத்த கருத்துகளும் பரிமேலழகருடைய கொள்கைகளும்     பல     காணலாம்.” (பரிமேலழகரின் கொள்கை - வைதிகம், வைணவம்).

       பத்துப்பாட்டு     முழுமைக்கும்     உரையெழுதியவர் நச்சினார்க்கினியர். இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களுள் கலித்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களில் சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரையெழுதியவர் இவர். ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று புகழப்படும் இவர் பரந்த இலக்கிய - இலக்கண அறிவும், வைதிக சமய ஈடுபாடும் உடையவர். பழம்பாடல்களில் உள்ள வாக்கிய அமைப்புகளில் எப்போதும் ‘இடர்’ காண்கின்றவர் இவர். எனவே, தமிழ்மொழித் தொடரமைப்பின் விதிகளுக்குட்பட்ட சங்கப் பாடல் அடிகளை உடைத்து, முன் பின்னாக மாற்றி, ஒரு நேர்கோட்டில் சமன்படுத்துவது     போன்ற     உணர்வுடன்     தம்முடைய உரையின்பொருட்டு அந்த அடிகளை இவர், மாற்றியமைக்கிறார். கொண்டு கூட்டல் பொருள்கோள் என்ற பெயரளவில், இவர் இதனைச் செய்கிறார். எளிமையான தொடரமைப்புக்கூட இவ்வாறு மாற்றப்படுகிறது. காட்டாக:

       அருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி
       வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்
       பூமலி சோலை யப்பகல் கழிப்பி
                - (குறிஞ்சிப்பாட்டு, 212-214)

   என்ற அடிகள், எவ்வித மாற்றமும் இல்லாமல், எளிதாகப் பொருள் தரக்கூடியவை. ஆனால் நச்சினார்க்கினியர், ‘வான் உரிய உறையுள் வயங்கியோர் அவாவும் அருவிடர் அமைந்த பூமலி சோலை களிறுதருபுணர்ச்சி அப்பகல் கழிப்பிய - என்று தொடரமைப்பினை மாற்றிக் கொள்கிறார். இதன் மூலம், இலக்கிய நயம் எதனையும் அவர் கொண்டு வரவில்லை. மேலும், களிறுதருபுணர்ச்சி’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பினையும் இது போக்கிவிடுகிறது. தவிரவும், கவிதைத் தொடர்மொழியின் (Poetic Syntax) அழகும் போய்விடுகிறது. இவ்வாறு பல இடங்கள் உண்டெனினும், நச்சினார்க்கினியர், அகன்று பரந்த தம் உரையினாலும், சொல் விளக்கங்களினாலும், பல நூல்களுக்கு உரையெழுதிய ஆற்றலினாலும் பின்னால் வந்த பலரால் பெருமை சேர்க்கப்படுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 11:53:03(இந்திய நேரம்)