தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தொகுப்புரை

    • 3.4 தொகுப்புரை  

          உரைகள், தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் அளித்தன. காப்பியங்களுக்கும் சமய நூல்களுக்கும் பல சிறந்த உரையாசிரியர்கள்     உரையெழுதினர்.     காப்பியங்களுள் சிலப்பதிகாரத்துக்கு எழுந்த பழையவுரையாகிய அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் பல சிறப்புகள் கொண்டவை. காப்பியம் என்ற கட்டுக் கோப்புப் பற்றிய அறிவு, பாத்திரப் படைப்புப் பற்றிய அறிவு, காப்பியம் கூறும் இசை, கூத்து, நடனம் முதலிய கலை வடிவங்கள் பற்றிய தெளிவு முதலியவை இந்த உரை விளக்கங்களில் நன்கு புலப்படுகின்றன. தொல்காப்பியம் எனும் இலக்கணம் மற்றும் பத்துப்பாட்டு, கலித்தொகை உள்ளிட்ட தனிநிலைப்     பாடல்கள்     ஆகியவற்றுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், காப்பியங்களுள் சீவகசிந்தாமணிக்கும் விரிவாக உரையெழுதியுள்ளார்.

          சமய இலக்கியங்களுள், திராவிடவேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்குச் சிறந்த உரைகள் தோன்றின. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் விரிவான உரைகள் எழுதியுள்ளனர். இலக்கிய நயம் பற்றிய உணர்வும், தத்துவ நெறி பற்றிய உணர்வும் ஒருங்கே கூடிவருகிற விளக்கங்களை     இந்த உரைகளில் காணமுடியும். இவை, எழுத்துகளின் எண்ணிக்கையளவில் ‘படி’ எனும் பெயரால் சொல்லப்படுகின்றன. வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரைகள் ஈட்டு உரைகள் என்று வழங்கப்படுகின்றன. அன்று, நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு உரைகள் தோன்றினாலும் சிறந்த வைணவக் காப்பியமாகிய கம்பனின் இராமகாதைக்கு, 20-ஆம் நூற்றாண்டில்தான் விளக்கமான உரை எழுந்திருக்கிறது.

          சைவத் திருமுறைகள், உரையாசிரியர்களின் கவனத்தைப் பெரிதும்     ஈர்க்கவில்லை.     ஆனால்,     மணிவாசகரின் திருக்கோவையார்க்கு,     இலக்கியவுணர்வுடன் கூடிய சிறந்த உரையொன்று அன்றே உண்டு. பெரியபுராணத்துக்கு 20-ஆம் நூற்றாண்டில்தான், சி.கே.சுப்பிரமணிய முதலியார் என்பவரால் உரையெழுதப்பட்டது.     20-ஆம் நூற்றாண்டில் பல இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. திருக்குறளே, பல சான்றோர்களையும் தொடர்ந்து கவர்ந்துள்ளது; அதற்குப் பல உரைகள் இந்நூற்றாண்டில் தோன்றியுள்ளன.

        தன் மதிப்பீடு : வினாக்கள் - I
      1.
      ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல்களைக் குறிப்பிடுக.
      2.
      இருபதாம் நூற்றாண்டில், உரையெழுதும் முயற்சிகளில் காணக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன?
      3.
      சைவ இலக்கிய உலகில் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், சிறந்த உரையைப் பெற்ற நூல் எது?
      4.
      ‘வியாக்கியானச்     சக்கரவர்த்தி’     என்று அழைக்கப்படுபவர் யார்?
      5.
      நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு முதன் முதலில் விளக்கவுரை எழுதியவர் யார்?
      6.
      கம்பராமாயணம் முழுமைக்கும் உரையெழுதிய 20 -ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:14:25(இந்திய நேரம்)