தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியங்களும் உரைகளும்

  • 3.1 காப்பியங்களும் உரைகளும்

       கி.பி.3-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, சிலப்பதிகாரம் வழி நடத்தத் தொடர்ந்து பல காப்பியங்கள் தோன்றின. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பெயர் கொண்ட தொகுப்புகளுக்குள் அல்லாமல், பெருங்கதை, அதன் பின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம், கம்பனுடைய இராமகாதை இப்படிப் பல காப்பியங்கள் தோன்றின. ஆனால் சிலம்புதான் அதிகச் செல்வாக்குடன் திகழ்ந்தது. தமிழ்ப்பண்பாட்டு மீட்டுருவாக்கத்தை அது முன்னிறுத்தியது; அதுவே அதனுடைய செல்வாக்கிற்குச் காரணம்.

       காப்பியங்களுள், சிலம்பு, சீவகசிந்தாமணி எனும் இந்த இரண்டனுக்கும் பெருமையும் சிறப்பும் உடைய உரைகள் உண்டு. இந்த இரண்டுமே சமண சமயம் சேர்ந்தவை; இவற்றிற்கு மட்டுமே உரைகள் அன்று தோன்றின என்று தெரிகின்றது. பொதுவாகக் காப்பியங்கள் உரையாசிரியர்களை ஏன் கவரவில்லை? இதற்குக் காரணங்களாக முக்கியமாக இரண்டு கருதுகோள்களை இங்கே கூறலாம்:

   • சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர பெரும்பாலான காப்பியங்களின் கதைகளும் கருத்துகளும், தமிழ் மரபிலிருந்து வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியேயிருந்து வந்தவை.

   • காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல கிளைக் கதைகள், பல புராண மரபுக் கதைகள் உடையவை; எனவே, உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.
    இந்த இரண்டையும் முக்கியமான கருதுகோள்களாகக் கூறலாம்

   3.1.1 காப்பிய உரைகளின் பொதுப்பண்புகள்

       காப்பியங்களுக்கு உரைகள் அதிகம் தோன்றவில்லை எனக்கண்டோம். காப்பிய உரைகள், இரண்டு பொதுவான பண்புகளையும் தேவைகளையும் பெற்றிருக்கவேண்டும். அவற்றைச் சுருக்கமாகக் காணலாம். i) காப்பியங்கள் நீண்ட மையக் கதைகளையும்     பல கிளைக் கதைகளையும் கொண்டவை. உரையாசிரியன் இவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்குள்ள மரபிலிருந்தும் வடமொழிப் புராணங்களிலிருந்தும் இந்தக் கதைகள் கிளைத்து வளர்ந்திருக்கக் கூடும். உரையாசிரியர், மிகப்பலவான     இந்தக்     கதைகளையும்     அவற்றின் உட்பொருள்களையும்     அறிந்திருக்க வேண்டும். ii) தமிழில் காப்பியங்கள், சமயம் சார்ந்தவை. அவற்றிற்கு உரையெழுத வேண்டுமாயின், ஆசிரியனுக்குச் சமயங்களைப் பற்றிய தெளிவான அறிவும், அதேநேரத்தில் அதுபற்றிய ஒரு நடுநிலையும் வேண்டும்.இவை காப்பிய உரையாசிரியனுக்குரிய தகுதிகளும் தேவைகளுமாகும். சிலப்பதிகார உரையிலும் சீவகசிந்தாமணி உரையிலும்     இந்தப் பண்புகள் இருக்கின்றன என்பது அறியத்தக்கது.    

       இந்தத் தேவைகளும் பண்புகளும் மட்டும் அன்றி i) காப்பியம்     என்ற இலக்கிய வகையினத்தை (Genre) நன்குணர்ந்திருக்க வேண்டும்; அதாவது, சங்கப் பாடல்கள் போன்ற தனிநிலைப் பாடல்களிருந்து இது மாறுபட்டது என்ற உணர்வு இருக்க வேண்டும். ii) காப்பிய உத்திகள், சொற்சுவைகள், முரண்கள் உள்ளிட்ட நயங்களை அறிந்திருக்க வேண்டும். மேலே கூறிய இப்பண்புகள், காப்பிய     உரையாசிரியர்களிடமிருந்து நாம் கண்டறிந்தவை யாகும். குறிப்பாக, அடியார்க்கு நல்லாருடைய உரையில் சிலம்பின் காப்பியப் பண்பு நன்கு புலப்படும்படியாக அதன்     விளக்கம்     அமைந்துள்ளதைக்     காணலாம். அண்மைக்காலத்தில்     கம்பராமாயணத்துக்கு உரையெழுதிய வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், பெரியபுராணத்துக்கு உரையெழுதிய சி.கே. கப்பிரமணிய முதலியார் முதலியோர் உரைகளிலும் இத்தகையபண்புகள் இருக்கின்றன என்பதைக் காணலாம்.

   3.1.2 காப்பிய உரைகளின் பொதுப்பண்புகள்

       சிலப்பதிகாரத்துக்கு     அமைந்துள்ள அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகிய இரண்டுமே போற்றத் தக்கனவாக உள்ளன. அடியார்க்கு நல்லார் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர்க்கு இரண்டு அல்லது அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியவர் அரும்பத உரைகாரர். அரும்பதவுரை,     சிலம்பு     முழுமைக்கும் உண்டு. ஆனால் அடியார்க்கு நல்லார் உரை, வஞ்சிக் காண்டத்துக்கு இல்லை. மதுரைக் காண்டத்திலே கூட ஊர்சூழ் வரி என்பதுக்கு மேல் இவருடைய உரைகிடைக்கவில்லை. கானல்வரிக்கும் இவருடைய உரை கிடைக்கவில்லை.    

       அரும்பதவுரையின் வழியிலேயே அடியார்க்கு நல்லாரின் உரை, பெரிதும் அமைந்திருக்கிறது. சிலம்பின் அரும்பதவுரை, வெறுமனே அரும்பதங்களுக்கு, அதாவது கடினமான சொற்களுக்கு மட்டும் உரை தரவில்லை. மாறாகப் பல இடங்களில் நீண்ட தொடர்களையும் திரண்ட கருத்துகளையும், காட்சிகளையும், சிலம்புக்குத்     தேவைப்படும் பிற கலை வடிவங்களையும் விளக்கமாகவே சொல்லுகிறது. அரங்கேற்று காதையில், மேடை அரங்கம் பற்றிய செய்திகளும், பாடலாசிரியன், யாழ் ஆசிரியன், குழல் ஆசிரியன் முதலிய கலைஞர்கள் - கலை வடிவங்கள் பற்றிய செய்திகளும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அரும்பதவுரையாசிரியர், இவற்றை விளக்கியுரைக்கிறார். மேலும், இசை, நடனம், முதலிய கலைகள் பற்றித் தெளிவாகப் பேசுகிறார். அடியார்க்கு நல்லாரும், இந்த விளக்கத்தை அப்படியே பின்பற்றுகின்றார். சில இடங்களில் மாறுபடுவதுண்டு. ஆனால், 20- ஆம் நூற்றாண்டின் சிலம்பு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ‘இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச்     சிலவிடங்களில்     அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக்     காணப்படுகிறது’ என்று கூறுவார். அரும்பதவுரைகாரரின் சிறப்பு, இதன்மூலம் புலப்படும்.    

       அரும்பதவுரைகாரரின் உரைத் திறனுக்கு ஓர் உதாரணம்;    

       இமிழ்கடல் வரைப்பில் தமிழக மறியத்
       தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
            (அரங்கேற்றுகாதை; 37-38)    

   என்று     இளங்கோ     பேச,     அரும்பதவுரைகாரர்: “ஆரவாரத்தினையுடைய கடல் சூழ்ந்த நிலத்தில், வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி, தீம்புனற் பௌவமெனத் தமிழோரால் எல்லை கூறப்படா நின்ற தமிழ்த் தேசத்தாரறிய     மூன்று     தமிழும்     போலுமென்னும் தன்மையுடையனாகி”     என்று     உரையெழுதுவார். இதனை அடியார்க்கு நல்லார் தம் உரையில், எழுத்துப் பிறழாமல் அப்படியே பின்பற்றுகிறார். இந்த உரையில், தமிழோர் என்பது, தமிழ்த்தேசம் என்பது, அதற்கு எல்லை கூறுவது, மற்றும் முத்தமிழ் என்று சொல்லுவது ஆகிய இவை கவனத்திற்கு உரியவை. இவருக்கு முத்தமிழ் அறிவும் முத்தமிழ் உணர்வும் மட்டுமல்லாமல், கட்டடக் கலை     பற்றிய அறிவும் இருக்கிறது. “வேயாமாடம்” (இந்திரவிழவூரெடுத்த காதை,7) என்பதற்குத் “தட்டோடிட்டுச் சார்ந்து வாரப்பட்டன; நிலா முற்றமுமாம்” என்று விளக்கவுரை தருவார். மேலும் இந்தச் சொற்கள் இன்றும் பெருவழக்காக உள்ளன என்பதும் கவனித்தற்குரியது.

       அடியார்க்கு நல்லார் உரைக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் சில: சிலம்பு எனும் காப்பியத்தின் கட்டுக்கோப்பை நன்கறிந்து அதற்கேற்றாற் போல உரை கூறுதல்; ‘இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச்     செய்யுள்’     என்று     சுட்டுதல்; பாத்திரப் படைப்பு முறைகளை நன்கறிந்து அதனை விளக்குதல் ஆகியன. அரங்கேற்று காதையின் உரை, பல்லாற்றானும் சிறப்புடையது; பலரும் போற்றுவது. சுருக்கமாகச் சொன்னால்- அடியார்க்கு     நல்லார், சிறந்த திறனாய்வாளர்க்குரிய பல பண்புகளைப் பெற்றவர். திறனாய்வுக்குரிய எடுபொருள் அல்லது தளம் பற்றிய கூர்த்த அறிவும், அதற்கு உரிய, அதனோடு சார்ந்த பல கருத்துகளையும், துறைகளையும் நன்கு கைவரப்பெற்று உரியவாறு     பயன்படுத்துதலும், இலக்கிய நயம்/உத்திகள் முதலியவற்றைப் புலப்படுத்துதலும், இவருடைய உரைகளில் காணத்தக்கன.

   3.1.3 சீவக சிந்தாமணி உரை

       சீவக சிந்தாமணி விருத்தப்பாவில் நன்கமைந்த காப்பியம். ஓர் ஆண்-சீவகன்-எட்டு வகையான திறன்களை உடைய பெண்களைக் காதலித்து மணம் செய்து கொள்கிறான்; நாட்டை மீட்கிறான்; இறுதியாகத் துறவறம் பூணுகிறான். மணநூல் என்பது இதற்கு இன்னொரு பெயர். இது சமணக் காப்பியம். இதற்கு விரிவான உரையெழுதி, அந்த உரையின் மூலமாக இந்த நூலுக்குப் பெருமை தந்தவர் நச்சினார்க்கினியர்; அவர் பிராமணர்; வைதிக சமயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவர் மணக்காப்பியத்துக்கு உரையெழுதியது அவருடைய ‘சமயப்பொறை’க்குச் சாட்சியாக அமைகிறது. இந்தப் பண்பு, இன்றைய திறனாய்வாளனுக்கு வேண்டிய ஒன்று. காப்பிய நோக்கைச் சரிவரப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல், பாத்திரங்களின் பேச்சையும் பாடல்களின் கருத்தமைவுகளையும் மனங்கொண்டு உரையெழுதுகிறார், உரையாசிரியர். அவரது இத்தகைய திறனாய்வு உள்ளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: கனக மாலை எனும் பெண், தன்காதலன் சீவகனுடைய பிரிவால் வாடி இருக்கிறாள். சீவகன் தம்பி நந்தட்டன் அங்கே வருகிறான். அவளைக் காணுகிறான். அப்போது கனகமாலையைக் காட்டுகிற திருத்தக்கத் தேவர், அவளுடைய சோகமான தோற்றத்தைக் கூறாமல், அழகான வடிவத்தை வருணிக்கிறார். நந்தட்டன் அவளுடைய சீறடிச் சிலம்பை (மட்டும்)     நோக்குகிறான். ஆனால், எவ்வாறாயினும், அந்தநேரத்தில் அவளுடைய அழகை வருணிக்கிற - அது ஆசிரியர் கூற்றாக     இருப்பினும் இத்தகைய     செயல்,     காப்பியத்தின்     நோக்கத்தினையும் பாத்திரப்படைப்பின் பண்புகளையும் சிதைத்துவிடும் என்று அஞ்சிய உரையாசிரியர், மிகச்     சாதுரியமாக உரை பகர்கிறார்: “கயற்கண்ணினாளுடைய, முன்பு திங்களை ஒக்கும் முகத்தில் இப்போது நிகழ்கின்ற வாட்டத்தையும் நோக்கானாய்,(முன்பு நன்றாகிய மார்பகம்) இப்பொழுது பசந்த     பசப்பையும் நோக்கானாய், முன்பு கலாபம் மின்னும் ஆடை, மாசுண்ட தன்மையையும் நோக்கானாய், தான் இறைஞ்சி நிற்றலின், அடியிற் சிலம்பு ஒன்றையுமே நோக்கி, ‘எங்குள்ளார் அடிகள்’ என்று இப்படி ஒரு வார்த்தை கூறினான் என்க” என்று கூறுகிறார். காப்பியப் போக்கும் சிதைவுறவில்லை; நந்தட்டன் பாத்திரப் படைப்பும் இப்போது சிறப்புப் பெறுகிறது. மூல ஆசிரியன் விட்டதை உரையாசிரியன் மீட்கிறான். உரையின் பணி எத்தகையது என்பதை இதன் மூலம் அறியலாம்.

       இன்னோரிடம் சீவகன் ஆண்மகன் என்பதையும் நாயகன் என்பதையும் சிறப்பிக்கின்ற விதத்தில், ஆசிரியர், “ஈயின்றி இருந்த தேன்” என்று வருணிப்பார். ஆண்மகனைத் தேனீயாகவும் பெண்ணைத் தேன் அல்லது பூ என்பதாகவும் வருணிப்பது மரபு. இங்கே, மாறாகப் பெண்மக்கள் தான் சீவகனை நாடிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. “இதற்கு முன்பு ஒரு மகளிரும் இவனை நுகராது இருந்தமை உணர்ந்து...” என்று நச்சினார்க்கினியர் உரை இதனை உணர்ந்து விளக்குகிறது:

        தன் மதிப்பீடு : வினாக்கள் - I
   1.
   கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில், இரண்டு காப்பியங்களுக்கே உரையெழுந்தன. அவை யாவை?
   2.
   உரையாசிரியர்களின் கவனத்தை அன்று காப்பியங்கள் பெறாமல் போனதற்குரிய காரணங்களாக இரண்டு கருதுகோள்களைக் கூறலாம்; அவை யாவை?
   3.
   அடியார்க்கு     நல்லார்க்கு     முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை எது?
   4.
   ‘அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மாறுபடும் இடங்களை ஆராய்வுழி, சிலவிடங்களில் அரும்பதவுரையே     பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது”- இவ்வாறு சொன்னவர் யார்?
   5.
   நச்சினார்க்கினியரின் சமயப் பொறைக்குச் சாட்சியமாக இருப்பது எது?

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:50:51(இந்திய நேரம்)